1947 முதல் 1990 வரை அதிலும் குறிப்பாக 1950 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் நலனிலிருந்து முன்வைக்கப்படவில்லை. மாறாக தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துடமையை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றுவதற்கும் பொருத்தமான ’வளர்ச்சிக் கொள்கைகள்’ தீர்மானிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால இலக்கு தீர்மானிக்கப்பட்டு, இந்தியாவின் அடிப்படையான தொழில்களான விவசாயம் மற்றும் தொழில்துறை போன்றவையும், இந்தியாவின் கனிம வளங்களையும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒப்படைப்பதற்கு பொருத்தமான கொள்கைகளை உருவாக்குவது தான் ஆளும் வர்க்கத்தின் நோக்கமாகவே இருந்து வருகிறது.
இத்தகையப் பொருளாதார கொள்கைகளை குறிப்பிட்ட கால இலக்கிற்குள் அமல்படுத்துவதில் காங்கிரசு ஏகாதிபத்தியங்களின் எதிர்பார்ப்பிற்கு பொருத்தமான அளவில் வேகமாக வேலை செய்யவில்லை என்பதும், 2013 வரை அதிகாரத்திலிருந்த காங்கிரசின் பிரதமரான மன்மோகன் சிங் ஒரு ’அண்டர் பெர்ஃபார்மர்’ என்றே மதிப்பீடு செய்யப்பட்டார்.
இதற்கு அக்கம் பக்கமாக 2008-ல் ஏற்பட்ட ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மீள முடியாத, மீண்டு எழவே முடியாத நெருக்கடியானது காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளின் மீது தாக்குதலை தீவிரப் படுத்தியது.
காலனிய ஆட்சியாளர்களிடையே ஏகாதிபத்திய நிதி மூலதனத்தை தங்கு தடையற்ற வகையில் அனுமதிக்கின்ற; உள்நாட்டில் திறன் வாய்ந்த அரசாங்கத்தை ஏகாதிபத்தியங்களும் தேர்வு செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், பொருத்தமான உயர் அதிகாரியாக திருவாளர் மோடி அவர்களுக்கு கிடைத்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் சீர்திருத்த நடவடிக்கை அதுவரை அமலில் இருந்த திட்டக் கமிஷன் என்ற அமைப்பு முறையை ஒழித்துக் கட்டி அதற்கு மாறாக நிதி ஆயோக் என்ற வழிமுறையை கொண்டு வந்தது தான்.
இந்த நிதி ஆயோக் கொண்டுவரப்பட்ட போது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India) என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமின்றி, ‘அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசாங்கம்’ என்ற கொள்கையை முன்வைத்து செயல்படத் துவங்கியது. ஆனால் அதன் முழக்கங்களில் அதற்கு நேர்மாறாக, ’கூட்டுறவு கூட்டாட்சி’ என்று படாடோபமாக அறிவிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு தகுந்தவாறு இந்தியாவின் நிலங்களை தங்கு தடை இன்றி கைப்பற்றுவதற்கான சட்ட திருத்தங்கள்; சொல்லிக் கொள்ளப்படும் தொழிலாளர் நல சட்ட ஒழிப்பு மூலமாக நவீன கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவது, குறைந்தபட்ச கூலிக்கு அவர்களின் உழைப்பை சுரண்டி சக்கையாக பிழிந்து எறிவது; கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழில் துவங்க முன் வருகின்ற ஏகபோக நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரிகளை குறைப்பது; சுற்றுச்சூழல் என்ற பெயரில் தொழில் துவங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தடைகள் ஆகிய அனைத்தையும் நீக்குவது ஆகியவை ’நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு’ முக்கியமான நிபந்தனையாக இருந்தது.
படிக்க:
♦ நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா?
♦நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா?பாகம்-2.
♦ நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா? பாகம்-3.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு பொருத்தமான ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் உலக வங்கி, ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் போன்றவர்களை கொண்ட சிந்தனைக்குழாம் உருவாக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ, எம்பிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர்களை விட மேலான அதிகாரம் கொண்ட ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் நிறுவப்பட்ட காலகட்டம் என்பது நாம் கவனிக்கத்தக்கதாகும்.
மக்கள் பிரதிநிதிகளை விட உயர்ந்த பட்ச அமைப்பாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் முதலில் உலக வங்கியிலும், ஆசிய வளர்ச்சி வங்கியிலும் பணியாற்றிய அரவிந்த் பனகாரியா தலைமையில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட ராஜீவ் குமார் தற்போது உள்ள சுமன் பெர்ரி போன்றவர்கள் மக்களுக்கு சிறிதும் தொடர்பற்ற கார்ப்பரேட்டுகளின் விசுவாசிகளாகவும், அடிமைகளாகவும் இருந்தனர், இருக்கின்றனர் என்பதால் இந்த நிதி ஆயோக் மூலம் கொண்டுவரப்படும் திட்டங்களும் அதனால் அமல்படுத்தப்படும், பரிந்துரைக்கப்படும் திட்டங்களும் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்யும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.
- செல்லப்பன்.