பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்களின் பணம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாயை பங்குச்சந்தை சூதாடிகளும் கார்ப்பரேட்டுகளும் கொள்ளை அடிப்பதற்கு மோடியும் அமித் ஷாவும் வேலை செய்துள்ளது குறித்து தற்பொழுது கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மே மாதம் 13ஆம் தேதி அன்று ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்பொழுது “ஜூன் 4-ம் தேதிக்கு முன்பு பங்குகளை வாங்குங்கள்” என்று பேசியுள்ளார். திருவாளர் மோடியோ “ஜூன் 4ஆம் தேதி அன்று பங்குச்சந்தைகள் சாதனைகளை முறியடிக்கும்” (அதாவது பங்கின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிடும்) என்று பேசியுள்ளார்.
கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடன், அதாவது ஜூன் 1ஆம் தேதி அன்று, தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ‘பாஜக கிட்டத்தட்ட 400 இடங்களை வென்று மிருக பலத்துடன் ஆட்சி அமைக்க போகிறது’ என்று அடித்துக் கூறின. இதனால் பங்குகளின் விலை மிக வேகமாக உயர ஆரம்பித்தன. எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் முண்டியடித்துக் கொண்டு பங்குகளை வாங்க போட்டி போட்டனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் பங்குகளின் விலை அதிபயங்கரமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டன.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் அதாவது பாஜக வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் பங்குகளை வாங்கிய மக்கள் பயந்து போய் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை மளமளவென சரிந்து விட்டன. இதனால் ரூ 30 லட்சம் கோடி மக்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத்தான் நட்டம் ஏற்பட்டு விட்டது. ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளும் பங்குச்சந்தை சூதாடிகளும் ரூ. 30 லட்சம் கோடி கொள்ளை லாபம் அடித்து விட்டனர்.
இந்த அயோக்கியத்தனத்தை வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பங்குகளின் விலை ஏறுவது இறங்குவது மூலம் எப்படி கார்ப்பரேட்டுகளும் பங்குச்சந்தை சூதாடிகளும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து ஒரு சிறு விளக்கம் கொடுப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்.
ஒருவர் Xyz என்ற நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருக்கிறார். அந்த ஒரு பங்கின் விலை ரூ.100 என்று வைத்துக் கொள்வோம். திடீரென Xyz என்ற நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.150 ஆக உயர்வதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த Xyz என்ற நிறுவனத்தின் நூறு பங்கை வைத்திருந்தவர் தனது 100 பங்கையும் 150 ரூபாய் விலையில் விற்றால் அவருக்கு லாபம் ரூ. 5,000 (100×50)கிடைத்து விடுகிறது. அடுத்த இரண்டு நாளில் அதே Xyz என்ற நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.90 ஆக குறைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். முன்பு Xyz என்ற நிறுவனத்தின் பங்குகளை விற்ற நபர் அதே நிறுவனத்தின் பங்குகளை (100 பங்குகளை) மீண்டும் வாங்கினால் (100×10)ரூ.1,000 லாபம் கிடைத்து விடுகிறது. ஆக இந்த பங்கின் விலை ஏற்ற இறக்கத்தின் காரணமாக அந்த நபருக்கு ரூ. 6,000 லாபமாக கிடைத்து விடுகிறது.
சுருக்கமாக கூறினால் 100 ரூபாயாக இருந்த பங்கின் நிலை 150 ரூபாயாக ஏறிய பொழுது ரூ. 5,000 லாபம் கிடைக்கிறது என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. அதேசமயம் 100 ரூபாய் மதிப்புடைய பங்கை 90 ரூபாய்க்கு வாங்க முடியும் பொழுது 1,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். இப்படி Xyz என்ற நிறுவனத்தின் நூறு பங்குகளை விற்றுவிட்டு மீண்டும் வாங்கும் பொழுது ரூ.6,000 லாபம் கிடைத்து விடுகிறது.
படிக்க:
♦ பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
இது எப்படி எனில் இந்தப் பங்குகளின் ஏற்ற இறக்கத்தின் காரணமாக அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஏறுவது இறங்குவது என்பது இல்லை. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கின் விலை திடீரென்று அதிபயங்கரமாக ஏறியோ அல்லது இறங்கியோ வந்த பிறகு, பெரும்பாலும், மீண்டும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் உண்மை மதிப்பிற்கு இணையாக அதன் பங்கின் விலை வந்து விடுகிறது.
“பங்குகளின் விலை ஏறும். இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் அல்லது பங்குகளின் விலை சரிந்து விடும் அந்தப் பங்குகளை வாங்க வேண்டாம்” என்று சொல்வதெல்லாம் பங்குச்சந்தை தரகர்களின் வேலை; நாட்டை வழி நடத்தும் தலைவர்களின் அல்லது பிரதமர், உள்துறை அமைச்சர்களின் வேலை அல்ல!
இந்தத் தேர்தலில் தங்களது செல்வாக்கு சரிந்து வருகிறது. தாங்கள் தோற்றுப் போய் விடுவோம் என்ற பதற்றத்தில் இருந்து கொண்டிருந்த பொழுதும் கூட மோடி அமித்ஷா கும்பல், தங்கள் எஜமானர்களான கார்ப்பரேட்டுகள், மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு வேலை செய்து இருக்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது?
தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது மோடி அமித்ஷாவுக்கு ஏற்கனவே நன்றாக தெரியும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ‘பாஜக அமோகமாக வெற்றி பெற்று மிருக பலத்துடன் ஆட்சி அமைக்க போகிறது’ என்று (பொய்யாக) மீடியாக்களில் வெளிவர இருக்கிறது என்பதும் இவர்களுக்கு தெரியும். இந்த நிலையில் ‘ பங்குச்சந்தைகள் உயரப் போகின்றன; பங்குகளின் விலைகள் ஏறப்போகின்றன’ என்று மோடியும் அமித் ஷாவும் கூறியதால் – இப்படி பொய்யான நம்பிக்கையை திட்டமிட்டு மக்கள் மத்தியில் விதைத்ததால் பங்குகளின் விலை உயர்ந்தன.
இப்படி மக்களிடையே பொய்யான நம்பிக்கையை பரப்பி, 30 லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க, தங்களின் எஜமானர்களுக்கு உதவி இருக்கிறார்கள் என்றால் இந்த பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமான மனம் படைத்தவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாட்டு மக்களின் வாழ்க்கையை சூறையாடி விடுவார்கள் என்பதை உணர்ந்து இவர்களை முறியடிக்க மக்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.
— தங்கசாமி