ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் யூடியூப் நிறுவனம் Roots Tamil சேனலை முடக்கியுள்ளது. பாசிச மோடி அரசு தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது, தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகள் மீது ரெய்டு நடத்துவது போல தனக்கு எதிராக உண்மை கருத்துக்களை தெரிவிக்கும் யூடியூப் சேனல்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கேடாக பயன்படுத்தி முடக்குவதில் ஈடுபடுகிறது. சமீபத்தில் ட்விட்டர் முன்னாள் CEO ஜேக் டார்சி மோடியை விமர்சிக்கும் ட்வீட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒன்றிய மோடி அரசு அச்சுறுத்தியது குறித்து அம்பலப்படுத்தி இருந்தார்.

கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட பாசிச மோடி அரசு சுதந்திரமாக, ஜனநாயக கருத்துக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களையும் முடக்கி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் Roots Tamil சேனல் முடக்கம்.

Roots Tamil சேனல் தோழர் கரிகாலன் கள்ளக்குறிச்சி மாணவி படுகொலை, வேங்கைவயல் மலம் கலந்த குடிநீர் பிரச்சினை ஆகியவற்றுக்கு நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்து உண்மைகளை வெளியிட்டவர். இத்தகைய ஜனநாயக சக்திகளே சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இத்தகையவர்களை ஒடுக்கும் ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல, கண்டனத்துக்குரியது. இந்த முடக்கத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்போம்.

இது குறித்து தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியினை வெளியிடுகிறோம்.

000

தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம்
Tamil Nadu Digital Media and Journalists Association

15-06-2023 வியாழன்

ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலை முடக்கியுள்ள ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான உத்தரவை உடனே திரும்பப் பெற வலியுறுத்துகிறது.

ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலை இந்தியாவில் முடக்க வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த சேனலை யூடியூப் நிறுவனம் இந்தியாவில் முடக்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 69A-ன் அடிப்படையில், ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

ரூட்ஸ் தமிழ் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ள 8 வீடியோக்களை சுட்டிக்காட்டி, மேற்கண்ட சட்டப்பிரிவின் அடிப்படையில் சேனலை முடக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் அந்த உத்தரவு இரகசியமானது என்பதால் அதனைப் பகிர இயலாது என்றும் யு டியூப் தெரிவித்திருக்கிறது.

சுமார் 11 மாதங்களுக்கு மேலாக உழைத்து உருவாக்கப்பட்ட ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனல் தற்போது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ள 8 வீடியோக்களை ஆராய்ந்தபோது, அதில் எவ்வித சட்டமீறலும் இருப்பதாக கருத இயலவில்லை. ஏனென்றால், அந்த 8 வீடியோக்களில் ஒன்று மட்டுமே நேர்காணல். மற்ற 7 வீடியோக்கள் பல்வேறு இயக்கங்கள் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்கள் பேசிய வீடியோக்கள். இந்த கூட்டங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டவை என்பதுடன், அக்கூட்டங்களில் பேசியவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பாக பேசியதாக ஒன்றிய அரசோ மாநில அரசோ இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சம் குறிப்பிட்டுள்ள 8வது வீடியோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் திரு.ராஜிவ் காந்தி அவர்கள் கொடுத்துள்ள நேர்காணல். அதில், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்விகளுக்கு திரு.ராஜிவ் காந்தி பதில் அளித்துள்ளார். தமிழக ஆளும் கட்சியின் மாணவரணித் தலைவர் பேசியுள்ள அந்தக் காணொளி எந்த வகையில் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

மேற்கூறிய 7 பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. திரு.ராஜிவ் காந்தி அவர்களும் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிவருகிறார். இருந்தபோதும், ரூட்ஸ் தமிழ் சேனல் மீது ஒன்றி அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை என்பது தெளிவாகிறது.

சமீபத்தில் ஒரு வெளிநாட்டு ஊடகத்திடம் பேசிய டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசு, செயல்பட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பதிவுகளை டிவிட்டரிலிருந்து நீக்க வேண்டும் என்று சட்டத்திற்குப் புறம்பாக கோரிக்கை வைத்தாகவும், அதை செய்ய மறுத்தால் டிவிட்டர் நிறுவனத்தின் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதாகவும் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.

யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க மறுப்பது இயற்கை நீதிக்கு எதிரான மட்டுமல்ல, அதை எதிர்த்து முறையிடுவதற்கு சட்டப்பூர்வமாக உள்ள வாய்ப்பையும் பறிப்பதாகும். அத்துடன், யூடியூப் சேனலையே முடக்குவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதாகும்.

ஆகவே, ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு உத்தரவிட்ட ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசியல் கட்சிகள். சமூக இயக்கங்கள். ஜனநாயக சக்திகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள், சட்டத்திற்குப் புறம்பாக ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு பிறப்பித்த உத்தரவை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

#2, கங்காதரன் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர், சாலிகிராமம், சென்னை – 600093

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here