“புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு.-வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு..
அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
வெட்கம் மானமோ, சுயமரியாதையோ இல்லாத அ.தி.மு.க. திருடர்கள், விசுவாசம் – துரோகம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் எல்லா விவாதங்களையும் அடக்குகிறார்கள். இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய முதன்மைக் குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அசிங்கம் பிடித்த பாசிச அரசியல் வரலாற்றை அம்பலப்படுத்துவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறில்லை” என்று புதிய ஜனநாயகம் 2017 செப்டம்பர் மாத இதழில் பாசிச ஜெயாவின் இறப்பு உருவாக்கிய சூழ்நிலை பற்றி எழுதி இருந்தோம்.
அதன் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக அத்தகைய கொடிய பாசிச சக்தியின் மரணம் தமிழகத்தை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
“ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடு” என்ற பழமொழிக்கேற்ப தமிழகத்தை மொத்தமாக மொட்டையாக்கிய பாசிச ஜெயாவின் சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. .
96 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு 29 ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி உள்ளது.. இதுதான் இந்த நாட்டில் கிரிமினல் முறையில் கொள்ளையடித்த அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்கு கொலை உட்பட அனைத்து வேலைகளையும் செய்கின்ற பஞ்சமா பாதகர்கள் அனைவரையும் தண்டிக்கின்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்குகின்ற லட்சணம்.
படிக்க:
♦ அதிமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு முடிவு கட்டும் நாள் எந்நாளோ?
♦ அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!
இந்த நாட்டின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கக் கூடாது பட்டியலின இன மக்கள் மற்றும் பழங்குடிகளின் அதாவது நிலமற்ற கூலிகள் பண்ணையடிமைகளாக நீண்ட காலம் உழைக்கின்ற நிலங்களை அவர்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்பதை தனது கொள்கையாக அறிவித்து போராடுகின்ற மாவோயிஸ்டுகள் மீது எந்தவிதமான விசாரணையும் இன்றி சுட்டு படுகொலை செய்கின்றது பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்.
ஆனால் மக்களின் சொத்தை கொள்ளையடித்து சுகபோகமாக வாழ்ந்து கொண்டு, அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், அதனை வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் வழக்கு நடத்தி பல்வேறு தகிடுதத்தங்களை செய்து தான் ஒரு உத்தமன் என்று நிரூபித்துக் கொள்ள முடியும் என்பதை தான் இந்த அரசியலமைப்புச் சட்டம் இதுவரை ஜெயா போன்ற கிரிமினல் பாசிச குற்றவாளிகளுக்கு வழிவகை செய்துள்ளது.
இத்தகைய சூழலில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது ஜெயாவின் திரண்ட சொத்துக்கள் மற்றும் கொள்ளையடித்து சேர்த்த நகைகள்; ஆடம்பரமாகவும், உல்லாச ஊதாரித்தனமாகவும் வாழ்ந்த போது சேர்த்துக் கொண்ட புடவைகள், காலணிகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் அதிகபட்சம் 10 லிருந்து 25 சேலைகளை கட்டிக்கொண்டு, லட்சங்களை ஒட்டுமொத்தமாக கண்ணில் பார்க்காத கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்ற நாட்டில் தனக்கு சொந்தமாக உறவுகள் எதுவும் இல்லாத சூழலிலும், பாசிச ஜெயா சேர்த்து வைத்திருந்த சொத்துக்களின் பட்டியலை பாருங்கள், அது குறித்து இன்று முதலாளித்துவ ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகளையும் படித்து இந்திய சமூக அமைப்பு அரசியல் வாதிகள் என்ற போர்வையில் செயல்படுகின்ற கிரிமினல் குற்ற கும்பலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதன் யோக்கியதையை புரிந்து கொள்ளுவோம்.
“1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி நகைகள், புடவைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதுமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்த பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகா அரசுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் இந்த வழக்கு நிறைவடைந்து 10 ஆண்டுகள் மேலாகியும் கர்நாடகாவுக்கு இந்த தொகை எதுவும் வழங்கப்படவில்லை. எனவே சமூக ஆர்வலரான நரசிம்மமூர்த்தி ஜெயலலிதாவின் நகைகளை ஏலம்விட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, அவரது சொத்துக்களை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வழக்கை நடத்திய கர்நாடகா அரசுக்கு 5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நேற்று ஜெயலலிதாவின் சொத்துகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக 1,526 ஏக்கர் நிலத்தின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 காலணிகள், வைரக் கற்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்பட 27 கிலோ தங்க நகைகள் போன்றவை ஒப்படைக்கப்பட்டன” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா திமுக விற்கும் திமுகவிற்கும் வேறுபாடு இல்லை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடு இல்லை என்று சகட்டுமேனிக்கு அரசியல் கட்சிகளின் வர்க்கத்தன்மை ஆளும் வர்க்கத்திற்கும் அவர்களுக்கும் உள்ள உறவு நிலவுகின்ற அரசு கட்டமைப்பை பாதுகாப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளுகின்ற முயற்சிகள் இவை அனைத்திற்கும் மேலாக சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்ற கண்ணோட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற கொள்கை இதற்கு ஏற்ப தனது கட்சி உறுப்பினர்களை வழிநடத்துகின்ற தன்மைகள் விதிகள் ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்சிகளின் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்வதும் குறிப்பிட்ட தருணத்தில் யார் எதிரி நண்பன் என்பதை வரையறுத்து செயல்படுவதும் தான் சரியான மார்க்சிய – லெனினிய கண்ணோட்டம்.
இந்த கண்ணோட்டத்தில் இருந்து நாட்டை கொடூரமான முறையில் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்ற பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை வீழ்த்துவது மட்டுமின்றி அதனது கூட்டணி கட்சிகளாகவும் பினாமி கும்பலாகவும் செயல்படுகின்ற தமிழகத்தின் அதிமுக மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் சீமான், புதிதாக உருவாகியுள்ள விஜய் உள்ளிட்ட கட்சிகளை அரசியலில் இருந்து முற்றாக விரட்டியடிப்பதன் மூலம் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம்.
- மருது பாண்டியன்