இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள், தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை ‘நாட்டு விடுதலை’ என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனமும் இதுதான்.

மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும், இந்தியா முழுவதற்குமான பிரகடனம், நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் சிறீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்தப் பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். “தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது’ என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.உண்மைதான். கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வறிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும்போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ”கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரண தண்டனை” என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத் தடை செய்த கம்பெனி நிர்வாகம், அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக் கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாபின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.

அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்ல முடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத்தேவன் எனும் துரோகி, சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டி துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள், இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்து தம் படைகளை குவித்து காளையார் கோவிலை ஒன்று முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த மூன்று திசைகளிலிருந்து முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்ன

மருதுவும், மதகுபட்டிக் காட்டில் பெரியமருதுவும், வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.

துரோகி கெளரி வல்லப உடையத்தேவன், மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். உற்றார், சுற்றம் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்தச் சிவகங்கை சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள், உறவினர், ஏனைய கிளர்ச்சியாளர்கள் உட்பட சுமார் 500 வீரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர். அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டுவைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி அங்கே தூக்கிலிடப்பட்டனர்.

சின்னமருதுவின் 15 வயது மகன் துரைச்சாமி, சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிட்ட 73 கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு 11.2.1802 அன்று நாடு கடத்தப்பட்டு, அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடுகூட மிச்சமிருக்கக் கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.

மக்களோ, மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கி விட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு, கல்லாய் இறுகிப்போன கையறு நிலையின் சாட்சியமாய் நம்முன்னே நிற்கிறது. எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடனத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை, வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது. ”ஆதலால் மீசை வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்…”

உங்களைத்தான் அழைக்கிறார் சின்ன மருது.

வேல்ராசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here