காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: பின்னணி என்ன?

இஸ்ரேலின் மீறல்கள் வழமையானவை தான் என்றாலும் இதை அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் கண்டிக்கவில்லை என்பதும், கண்காணிப்பதாக பொறுப்பேற்றுக் கொண்ட கத்தாரும் எகிப்தும் கூட இது குறித்து எதுவும் கூறவில்லை என்பதும் கவலைக்குரியது.

தினைந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர், கடந்த ஜனவரி 19 ம் தேதியிலிருந்து போர் நிறுத்தத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ஆனாலும், இது முழுமை அடையுமா? ஆயுத மோதல்கள் இனி நடக்காமல் காக்கப்படுமா? காசா பகுதியில் அமைதியும் வளர்ச்சியும் திரும்புமா? என்பன போன்ற கேள்விகள் பதைப்புடன் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நடக்கும் போர் அல்லது மோதல் என்பது புதிதானதல்ல. இராணுவ மோதல்கள் தொடங்கி அரசியல் மோதல்கள் வரை இஸ்ரேலின் அடாவடிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எதிர்காலத்திலும் அவை தொடரும் என்பதற்கு போர் நிறுத்தத்தின் பிறகான தாக்குதல்கள் சான்றாக நிகழந்திருக்கின்றன.

ஆனாலும் 2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீன் மீது எழுந்த விமர்சனங்கள், வழக்கமான பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டின் மீது  பலரையும் மீளாய்வு செய்யத் தூண்டியது. சமூக வலை தளங்களில் எழுந்த கருத்துக்கள் அதற்கான சான்றுகளாக இருந்தன. என்றாலும் இந்த பதினைந்து மாத இராணுவ மோதல் பல மயக்கங்களை தெளிவுபடுத்தி இருக்கிறது. எடுத்துக்காட்டாக அயன்டோம் எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் விளம்பரப்படுத்தி வந்தவை உண்மை அல்ல என்பதை உறுதிப்படுத்தியதை குறிப்பிடலாம். ஒரு போரின் வெற்றி என்பது இராணுவ வலிமையோ, உத்திகளிலோ இல்லை. மாறாக,  தாக்குப்பிடிக்கும் திறனில் தான் மெய்யான வெற்றி அடங்கி இருக்கிறது என்பதையும் இந்தப் போர் வெளிப்படுத்திக் காட்டி இருக்கிறது. இல்லையென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்துக்கு இறங்கி வந்திருப்பார்களா?

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலில் இணைய படத்தை கிளிக் செய்யவும்

ஒரே வாரத்தில் காஸாவை துடைத்தழிப்போம், பிணையக் கைதிகளை மீட்போம் என்பன போன்ற முழக்கங்கள் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு வெற்றுக்  கூச்சல்களாக மாறி இருந்தது இஸ்ரேலுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அது தான் போர் நிறுத்தத்தை நோக்கி நெட்டித் தள்ளி கொண்டு வந்திருக்கிறது. இதற்காக இஸ்ரேலும் ஹமாஸும் கடுமையான விலையை கொடுத்திருக்கின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ ஒரு தங்க பேஜரை பரிசாக வழங்கினார். இது ஹிஸ்புல்லா இயக்கத்தினரை சீர்குலைத்த பேஜர் கருவிகள் வெடிக்குண்டுகளாக மாற்றப்பட்டதற்கு அமெரிக்க பின்புலம் உண்டு என்பதை வெளிப்படையாக அறிவித்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கத்தில் அமெரிக்காவுக்கு இருக்கும் பங்கும் லாபமும் தெரிந்தவர்களுக்கு இதில் வியப்பு ஒன்றும் இருக்கப் போவதில்லை. இஸ்ரேலின் அனைத்து அடாவடிகளுக்கும் பின்னே அமெரிக்க இருக்கிறது, இருக்கும். இதனுடன் ஒப்பிடும் போது ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் குறைந்தளவு திறன் கொண்டவையே. ஆனாலும் அந்த அமைப்புகளை  நிலைக்குலையச் செய்ய நேரடி இராணுவ நடவடிக்கைகளை தாண்டி சதிகளிலும் இறங்கி இருக்கிறது இஸ்ரேல். தங்கள் தொடர்புகளுக்காக பேஜர் வாங்குகிறார்கள் எனும் உளவுத் தகவலையும், பேஜர் தயாரிக்கும் போதே அவைகள் தங்களுக்கு உகந்த நேரத்தில் வெடித்துச் சிதறி பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனும் சதி வேலைகளையும் இணைத்ததே இஸ்ரேலின் பக்கம் களத்தை நகர்த்தி இருக்கிறது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவை எதிர்கொண்டு நிற்பது ஐநாவின் குறைந்தளவு கட்டுப்பாடுகளுக்கோ, பல நாடுகளின் தீர்மானங்களுக்கோ கொஞ்சமும் மதிப்பாளிக்காத இஸ்ரேல் எனும் அடாவடி நாட்டினை எதிர்த்து என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், பாலஸ்தீன மக்களின் வரலாற்று துயரங்களையும், பல பத்தாண்டுகளாக அவர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டதையும், காஸாவை சிறைக்கக்கூடமாக மாற்றி வைக்கப்பட்டிருப்பதையும், கொலை கொடூரங்களையும் கவனிக்க மறந்தவர்கள் ஆவோம்.

இன்றைக்கு காஸாவின் இருபது லட்சம் மக்களும் இடம்பெயர வேண்டும் என்று டிரம்ப் கூறுவதை ஆழ்பொருள் படுத்திப் பார்த்தால், 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை இழந்து, ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் சீர்குலைந்து, சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என பலவற்றை விலையாகக் கொடுத்து பாலஸ்தீன மக்கள் இந்த போர் நிறுத்தத்தை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியின் அடிப்படை இது தான்.

மறுபக்கம், இஸ்ரேலின் பொருளாதாரமும், இராணுவ வலிமையும் மீப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மக்களிடம் அரசுக்கு எதிரான போராட்டங்கள் உருவாகி வளர்ந்திருக்கின்றன. அயன்டோம் எனும் பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டிருக்கிறது. உளவுப்புலி என உலக நாடுகளால் பார்க்கப்படும் இஸ்ரேலின் பிரதமர் எளிய ட்ரோன் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கி இருக்க நேர்ந்த அளவுக்கு இஸ்ரேலின் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவையும் விலையாகக் கொடுத்து தான் இஸ்ரேல் இந்த போர் நிறுத்தத்தை வந்தடைந்திருக்கிறது. இஸ்ரேலின் வலதுசாரிகள் போர் நிறுத்தத்தை எதிர்ப்பதின அடிப்படை இது தான்.

படிக்க:

🔰  இஸ்ரேல் காசா மோதல்: போர்க்களத்திலிருந்து வந்த WhatsApp செய்திகள்!
🔰  வடக்கு காசாவில் பஞ்சம்: இஸ்ரேல் யூத இனவெறியர்கள் உருவாக்கியது!

எனவே, இந்த போர் நிறுத்தத்தை துருக்கி, கத்தார் போன்ற நாடுகளின் வெளியுறவு கொள்கைக்கும் பேசுவார்த்தைக்கும் கிடைத்த வெற்றி என எண்ணுவது பொருட்பிழையாகவே இருக்கும். இந்த இடத்தில் வளைகுடா நாடுகள் ஏன் பாலஸ்தீனமும் அதன் மக்களும் இந்தப் போரினால் வதைக்கப்படுவதை கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இப்படி வந்தடைந்த இந்த போர் நிறுத்தம் என்ன கூறுகிறது?

  1. முதலில் ஹமாஸ் மூன்று கைதிகளை விடுவிக்கும், அதன் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
  2. இரண்டாம் கட்டமாக, ஹமாஸ் கூடுதலாக நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கும், தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கும்.
  1. காஸாவில் உள்ள சலாலுதின் சாலையை ஒட்டியுள்ள ஒரு பாதை வழியாக கார்கள், விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகள் மற்றும் ட்ரக்குகள் செல்ல அனுமதிக்கப்படும். இந்த பாதை கத்தார்- எகிப்து நாடுகளின் ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவால் இயக்கப்படும் எக்ஸ்-ரே இயந்திரம் கொண்டு கண்காணிக்கப்படும். (இஸ்ரேல் தன்னுடைய கண்காணிப்பின் கீழ் தான் இது நடைபெற வேண்டும் என்று கடைசி வரை பிடிவாதம் பிடித்தது. இதை ஏற்க மறுத்து ஹமாஸ் கடைசி வரை உறுதியாக இருக்கவே கத்தார் எகிப்து கண்காணிக்கட்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது)
  2. முதல் 42 நாட்களுக்குள் இஸ்ரேல் தன் படைகளை விலக்கி, கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் 800 மீட்டர் தூரத்தை ராணுவ நடவடிக்கையற்ற பகுதியாக வைத்திருப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
  3. 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுமார் 190 பேர் உட்பட1,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இதற்கு ஈடாக ஹமாஸ் 34 பணயக்கைதிகளை விடுவிக்கும்.
  4. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் படி அடுத்த கட்டத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொடங்கப்பட்டதற்கான அறிவிப்புகள் எதுவும் அதிகாரபூர்வமாக வரவில்லை. அதேநேரம், இடம்பெயரும் மக்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்கள்  என்று கூறிக்கொண்டு அவர்கள் மீது இஸ்ரேல் தாக்குகதல் நடத்தி இருக்கிறது. இவ்வாறான இஸ்ரேலின் மீறல்கள் வழமையானவை தான் என்றாலும் இதை அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் கண்டிக்கவில்லை என்பதும், கண்காணிப்பதாக பொறுப்பேற்றுக் கொண்ட கத்தாரும் எகிப்தும் கூட இது குறித்து எதுவும் கூறவில்லை என்பதும் கவலைக்குரியது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்தடுத்த கட்டங்களை எட்டி பாலஸ்தீன பகுதிகளில் அமைதி நிலவி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் மக்களை நேசிக்கும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட வேண்டும், எந்த நிலையிலும் ஆக்கிரமிப்பு ஏற்றுக்கொள்ளப்படாது என்பது உறுதிப்படுத்த வேண்டும், பாலஸ்தீன மக்களின் தேசியம் சார்ந்த விருப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என நீண்ட பயணம் மிச்சமிருக்கிறது. இதற்காக எல்லா நாட்டு மக்களும் தங்கள் அரசுகளை வற்புறுத்த வேண்டும்.

சரி பாலஸ்தீன சிக்கல் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தியா பாலஸ்தீனின் பக்கம் தான் நின்றது. ஆனால் 90களில் நவ தாராளமய காலம் தொடங்கி இதில் படிப்படியான மாறுதல் ஏற்பட்டு இன்று நடுநிலை என்ற பெயரில் இஸ்ரேலின் பக்கம் நிற்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்காமல் புறக்கணித்தது இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. மட்டுமல்லாமல் பாஜக அரசு  இஸ்ரேலிடமிருந்து உளவு கருவிகள், இராணுவ துணைக் கருவிகள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைப் போட்டும் இஸ்ரேலுடன் நெருங்கி வருகிறது. இந்திய பார்ப்பன பாசிஸ்டுகளும் இஸ்ரேலிய ஜியோனிச பாசிஸ்டுகளும் நெருங்கி வருவது பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கும் கூட ஆபத்தானது தான்.

  • செங்கொடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here