திடீரென்று அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் பாய்கிறதே..? ஏன் இந்த பாய்ச்சல்..? இதன் பின்னணி என்ன..?

அமேசான் இந்தியாவில் மிக வெற்றிகரமாக இயங்கும் பிரதான நிறுவனமாக உள்ளது! இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் அமேசான் தான் முதலிடத்தில் உள்ளது! தற்போது அமேசான் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்து வருகிறது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது!அமேசான் இந்தியாவில் நேரடியாக ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது! மறைமுகமாக பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து வருகிறது! பல நூற்றுக்கணக்கான இந்திய உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்த அமேசானை பெரிதும் நம்பியுள்ள சூழல் தோன்றியுள்ளது!

இந்தச் சூழலில் தான் ஆர்.எஸ்.எஸ் அமேசான் மீது பாய்ந்து பிராண்டியுள்ளது!

”18ம் நூற்றாண்டில் இந்தியாவையே தங்கள் காலடியின் கீழ் கொண்டு வர பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி என்ன செய்ததோ அதைத்தான் அமேசான் இப்போது செய்து வருகிறது. அமேசான் இந்தியாவில் சந்தையை ஏகபோக உரிமையாக்கப் பார்க்கிறது. இதை அடைவதற்காக, இந்திய குடிமக்களின் ‘பொருளாதார, அரசியல், சொந்த சுதந்திரத்தை பறிமுதல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது’’ என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பஞ்சஜன்யா இதழ் கட்டுரை கடுமையாக சாடியுள்ளது.

”அமேசான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நடைமேடையான பிரைம் வீடியோ தளத்தில் இந்தியப் பண்பாட்டுக்கு எதிரான திரைப்படங்கள், சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது என்று விமர்சனம் வைத்துள்ள பஞ்சஜன்யா. நிறைய ப்ராக்சி நிறுவனங்களை அமேசான் உருவாக்குவதோடு தங்களுக்குச் சாதகமாக அரசுக் கொள்கைகள் அமைய கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது” என்றும் சொல்கிறது!

இந்தியாவை தற்போது ஆர்.எஸ்.எஸ்சின் சீடர்களான பாஜகவினர் தான் ஆட்சி செய்கிறார்கள்! இந்த குற்றச்சாட்டின் மூலம் அவர்கள் அமேசானிடம் விலை போய்விட்டதாக ஆர்.எஸ்.எஸ் கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாமா..?

நன்றாக நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அமேசான் வளர்ச்சி இந்தியாவிற்கு ஆபத்து என்றால், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டதிட்டங்களை கொண்டு வரச் சொல்லி பாஜக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தினாலே போதுமானது! அதைவிட்டுவிட்டு வெளிப்படையாக வந்து ஆர்.எஸ்.எஸ் அமேசானை தாக்குவது எதற்கு..?

ஏதோ இந்த நாட்டையே காப்பாற்ற அவதாரம் எடுத்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் தன்னை கற்பிதம் செய்து கொண்டு பேசுகிறது! இந்த நாட்டின் பொதுச் சொத்துகளை எல்லாம் தனியார் நிறுவன முதலாளிகளுக்கு தாரை வார்க்க பாஜகவிற்கு பாதை போட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தற்போது தேசபக்த வேடம் போடுவது வேடிக்கையாகும்! அமேசானிடம் கையூட்டு பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் பிளாக்மெயில் அரசியல் செய்கிறது என்பதாக ஏன் இருக்க முடியாது?

எப்படி,எப்படி எல்லாம் ஆர்.எஸ்.எஸ் குற்றம் சுமத்தியுள்ளது பாருங்கள்;

”பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி முதலில் இந்திய கலாச்சாரத்தை சிதைத்து, பின்னர் மக்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைத்தான் இப்போது அமேசான் மேற்கொண்டு வருகிறது. தனது ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் தாண்டவ், பாதல் லோக் உள்ளிட்ட வீடியோ தொடர்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் இந்து விரோத கொள்கைகளைக் கொண்டவை. அமேசானின் பிரதான நோக்கமே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுதான். இதற்காக 2 தன்னார்வ அமைப்புகளுக்கு அது நிதி உதவி அளித்துள்ளது என ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரத்தை அமேசான் சிதைக்கிறதாம்! மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதாம்! எவ்வளவு முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள்! இந்த குற்றச்சாட்டுகள் உண்மை எனில், அதை தடுக்க சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே! ஏன் தெருச் சண்டைக்கு இழுக்கிறீர்கள்..?

உண்மை என்னவென்றால், அமேசான் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாக உள்ளது! அதாவது ஆர்.எஸ்.எஸ்சின் பேரன்பையும், அபிமானத்தையும் பெற்றுள்ள அம்பானிக்கு போட்டியாக அமேசான் உள்ளது. இந்தியாவில் அமேசானின் இயக்கம் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாக உள்ள பல நிறுவனங்களின் வியாபார வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், ”இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவியாபாரிகள் சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த அமேசான் தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்த காலத்தில்கூட 75 ஆயிரம் சிறுவியாபாரிகள் கைகோர்த்து 450க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை செய்து பயன்பெற்றனர்’’ என விளக்கமளித்துள்ளது!

நியூட்ராஸ்பியர் நிறுவன சி.இ.ஓ பிரதிக் ராவ் என்பவர் அமேசானுக்கு ஆதரவாக தந்துள்ள ஒரு விளக்கத்தில் ”அமேசானுடன் மூன்று ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த சந்தையில் விற்பனை செய்வது பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள உதவியது. பொதுமுடக்கத்தின் போது அமேசான் இந்தியா மூலமான விற்பனை 200 சதவீதம் அதிகரித்தது. இந்த பண்டிகைக் காலம் இந்திய வர்த்தகத்திற்கான மீட்சியாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட அமேசான் இந்தியா நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் பண்டிகைக் கால எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதற்காக ஆய்வு ஒன்றை நடத்தியது. செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. சென்னை, ஐதராபாத், தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 21 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற விற்பனையாளர்கள் அனைவரும் முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இ-காமர்ஸ் பரவலான வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், 28 சதவீத பங்கேற்பாளர்கள் இந்த பண்டிகை காலத்தில் புதிய பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதும், 50 சதவீத பங்கேற்பாளர்கள் முதல் முறையாக அமேசான் இந்திய தளத்தில் விற்பனை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆக, இவை எல்லாம் இந்திய உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்த அமேசானை சார்ந்து செயல்படுவதை உணர்த்துவதாக உள்ளது! அமேசான் என்பது உலகளாவிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம். கார்ப்பரேட்டுகளுக்கே உள்ள சில குணாம்சங்கள் அமேசானுக்கும் இருக்கலாம்.

இந்தியாவில் ரிலையன்ஸ்,டாடா, பிளிப்கார்ட் போன்ற போட்டியாளர்களுடன் அது மோதுகிறது என்றால் சாதாரண விஷயமா..? பியூச்சர் குழுமத்தை வாங்குவதில் சட்ட வழக்கை அமேசான் சந்தித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தததே! இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையிலும் அமேசான் சிக்கியுள்ளது! சட்டப்படி என்ன நடக்கணுமோ அது நடந்துவிட்டு போகட்டும்!

இதற்கிடையில் புகுந்து தேசபக்தி ஆட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஆட முனைவது சாதாரண விஷயமல்ல. அனைத்து கார்ப்பரேட்டுகளையும் இந்தியாவில் அரவணைத்து வளர்த்தெடுப்பதே ஆர்.எஸ்.எஸ் தான்! சுதேசி கொள்கையை பேசி வாய்பந்தல் போட்ட ஆர்.எஸ்.எஸானது பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கார்ப்பரேட்டுகளிடம் கப்பம் வசூலிப்பதில் தான் கவனம் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தற்போது அமேசான் மீது பாய்வதற்கு ஏதோ பெரிய அரசியல், பொருளாதார கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கீழ்படிந்து வேலை பார்த்த ஆர்.எஸ்.எஸ்சின் கடந்த கால வரலாறை தெரிந்தவர்கள் யாருக்குமே தெரியும். தேவைப்பட்டால் அமேசானுக்கும் அடிவருடி வேலை செய்ய ஆர்.எஸ்.எஸ் தயங்காது என்பது!

நன்றி:

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here