கண்டனம்!

வெறும் இனத் தூய்மைவாதம், மொழித் தூய்மைவாதம் பேசி, தமிழக மக்களின் ஆதரவு பெறுவது சிரமம். தூய்மை வாதத்தின் இன்னொரு வடிவமே ஃபாசிசம் . இதுதான் இட்லர் அரசியல்.

சுலாமியர்களையும், கிறித்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அரசியல்வாதிகள் உணர்ச்சி வேகத்தில் நா தடுமாறுவது இயல்பே. ஒருவேளை சீமானும் அப்படி பேசியிருப்பாரோ! என நினைத்தால், இப்பேச்சுக்குப் பிறகு, ஊடகவியலாளர்களைச் சந்தித்த சீமான், நான் பேசியதில் தவறு இல்லை. இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது. எனக்கூறியிருக்கிறார்.

இசுலாமியர்களும் கிறித்துவர்களும்தான் மாற்று அரசியலுக்கு தடையாக உள்ளார்கள். தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு வாக்களிக்கிறார்கள். என தான் பேசியதை, நியாயப்படுத்துகிறார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வில்லை.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 7% வாக்குகளையே பெற்றது.

இந்நிலையில், இசுலாமியர்கள், கிறித்துவர்களால்தாம் நாம் தமிழ் கட்சி தோல்வியடைந்ததுபோல் சீமான் பேசுவது பொருளற்றது.

தமிழகத்தில் இசுலாமிய மக்கள்தொகை 5.86%. கிறித்துவர்கள் 6.13% பேர். இந்துக்கள் 88 %. இதில் நாம் தமிழர் கட்சி சிறுபான்மையைக் கடிந்து கொள்வது வியப்பாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் அரசியல் சித்தாந்தம் தமிழ் தேசியம். தமிழ் தேசிய அரசியல் பொருளியலை விடவும் பண்பாட்டையே அதிகம் பேசுகிறது. வறுமையை ஒழிக்க வழிகாணாமல் பண்பாட்டுப் பெருமிதம் பேசிக் கொண்டிருப்பதை தமிழர்களே விரும்பமாட்டார்கள். என்பதே நிதர்சனம்.

சீமான் இளைஞர்களை நவீன அரசியலிலிருந்து சங்ககால அரசியலுக்கு திசைதிருப்புகிறார். தமிழகத்தில் மதச்சிறுபான்மையினர் மட்டுமல்லர், மொழிச் சிறுபான்மையினர், சாதி ரீதியாக சிறுபான்மையாக இருப்பவர்கள், தலித்துகள், இப்பிரிவினர் அனைவரும் தங்களுக்குப் பாதுகாப்பானவை திராவிட இயக்கங்கள் என்றே கருதுகிறார்கள்.

வெறும் இனத் தூய்மைவாதம், மொழித் தூய்மைவாதம் பேசி, தமிழக மக்களின் ஆதரவு பெறுவது சிரமம். தூய்மை வாதத்தின் இன்னொரு வடிவமே ஃபாசிசம் . இதுதான் இட்லர் அரசியல்.

திராவிட இயக்கங்களின் தொடக்கம் நீதிக்கட்சி. அலி சகோதரர்களின் கிலாபத் இயக்கத்துக்கு நீதிக்கட்சி ஆதரவு கொடுத்தது தொடங்கியதில் இருந்து உருவானது இசுலாமிய திராவிட இணக்கம்.

தீண்டாமைக்கான மருந்தாக இசுலாத்தை பார்த்தவர் பெரியார். காயிதே மில்லத் இருக்கும்வரை திமுகவில் சிறுபான்மை அணி தேவையில்லை என்றவர் அண்ணா.
முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு அளித்தது, காங்கிரஸ் அரசு பறித்துக் கொண்ட இசுலாம் மகளிர் கல்லூரியை, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியாக்கியது, என திராவிட இயக்கம் இசுலாமியர்களோடு இணக்கம் பேணியது.

எடப்பாடிகூட இசுலாமியர்களின் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை உயர்த்தி வழங்கினார் என ஞாபகம். உலாமாக்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தினர்.

கிறிஸ்துவமதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களைப் பட்டியலினத்தில் வைத்து, இட ஒதுக்கீடு தரவேண்டுமென, சமீபத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார் முதல்வர் ஸ்டாலின்.

திராவிட இயக்கங்கள், திராவிடம் vs ஆரியம் என்கிற இருமை எதிர்வை உருவாக்கியது. சீமானோ தமிழர், தெலுங்கர், கன்னடர் என்கிற பிளவை உருவாக்குகிறார்.

இன்று இந்தியாவின் தலையாய பிரச்சனை காவி ஃபாசிசம்.
பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை, குடியுரிமைச் சட்டம், பொதுசிவில் சட்டம், மாட்டிறைச்சி படுகொலைகள் போன்ற ஃபாசிச நடவடிக்கைகளால் இசுலாமியர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காலமிது. இப்போது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார் சீமான்.

இதையும் படியுங்கள்:

தமிழகத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, தாவூத் மியாகானின் இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக், மனிதநேய மக்கள் கட்சி என இசுலாமிய அமைப்புகள் பல இருக்கின்றன. அரசியல் ரீதியாக இவ்வமைப்புகள் மற்றும் இசுலாமியர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான செயல்திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.
செய்தாரா சீமான்?

ராமநாதபுரம், துறை முகம், ஆயிரம் விளக்கு, ஆம்பூர், வாணியம்பாடி, பூம்புகார், தொண்டா முத்தூர், நாகப்பட்டினம், வேப்பனப் பள்ளி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கடையநல்லூர் போன்ற பகுதிகளில்தாம் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்திகளாக இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.

மற்ற இடங்களில் சீமான்
கட்சியின் நிலை என்ன?

திராவிட இயக்கங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. அங்கு ஊழல் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவை தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியலைக் காப்பாற்றி வருகின்றன. வாரிசு அரசியல்கூட இருக்கலாம். ஒருபோதும் ஸ்டாலினோ, உதயநிதியோ சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதில்லையே. ஆனால் சீமான் தன்னை சாவர்க்கரின் வாரிசாக அல்லவா, பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.

  • கரிகாலன்.
    முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here