ந்தியாவின் மக்கள் தொகை 2023 கணக்கின்படி 142.80 கோடி ஆகும். சமீபத்திய இந்திய ஒன்றிய அரசின் அறிக்கையின்படி 85 முதல் 90 கோடி வரை மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 53 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் ஏழு சதவீதம் மட்டுமே நிரந்தர வேலையில் உள்ளனர். மீதமுள்ள 93 சதவீதம் பேர் நிரந்தரமற்ற கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

இந்த மக்கள் தொகையில் 45 சதவீதம் மக்கள் மட்டுமே சமீபத்தில் தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. 143 கோடியில் 65 கோடி மக்கள் தான் பண்டிகை காலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 78 கோடி மக்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் பொருளாதார நிலைமையில் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.

நுகர்வு பொருட்களை விற்பனை சந்தையில் கொட்டும் கார்ப்பரேட்டுகளில் புண்ணியத்தில் இந்தப் பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் வர்த்தகம் மூன்றரை லட்சம் கோடியை தாண்டி உள்ளது என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் தந்தோரா தினம் என்ற பெயரில் தன்வந்திரி அவதரித்த நாள் என்று முன்வைத்து தங்கம் மற்றும் வெள்ளியை விற்பனை செய்ததால் 30 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்று இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்ல, தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் சுமார் 65 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கம், வெள்ளி நகைகள், புதிய வாகனங்கள், புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பரிசு பொருட்கள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், காய்கனிகள், அழகு சாதன பொருட்கள் பட்டாசு மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி கொண்டாடியுள்ளனர்.

தீபாவளியை ஒட்டி உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜவுளி விற்பனை 12 சதவீதமும், தங்க நகைகள் விற்பனை 9 சதவீதமும், உலர் பழங்கள் விற்பனை 4 சதவீதமும், மின்னணு சாதனங்கள் விற்பனை 8 சதவீதமும், பரிசு பொருட்கள் 8 சதவீதமும், அழகு சாதன பொருட்கள் விற்பனை 6 சதவீதமும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: கசக்கும் தீபாவளி! கையேந்தும் உழைக்கும் வர்க்கம்!

ஆட்டோமொபைல்ஸ் துறையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு நபருக்கு ரூபாய் 5500 என்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற தயாரிப்புகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹோட்டல்கள், திரையரங்குகள், டாஸ்மாக்குகள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். அது மட்டுமின்றி நாடு முழுவதும் 35 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாகவும் அறிக்கை விட்டுள்ளது.

கடந்த தண்டோரா தினத்தில் நாடு முழுவதும் 22 டன் தங்க நகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு 41 டன் தங்க நகைகள் 400 டன் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள், நாணயங்கள் விற்பனையாகியுள்ளது. இதன்படி ஒரே நாளில் 30 ஆயிரம் கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அகில இந்திய நகைக்கடை உரிமையாளர்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா கூறியுள்ளார்.

வழக்கமான வாகன விற்பனைகளை விட 21 சதவீதம் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்றும், மின்னணு சாதனங்களின் விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும் மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு கடந்து போன தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது தமிழ் இந்து போன்ற ஊடகங்கள்.

தமிழகம் முழுவதும் ஒரு நாளொன்றுக்கு 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேருகிறது. இது போதாது என்று தீபாவளி அன்று சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உட்பட சுமார் 5000 டன் பட்டாசு கழிவுகள் சேர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கழிவுகளுடன் சேர்த்து நுகர்வு பொருட்களாக மூன்றரை லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் தலையில் புதிய குப்பை சேர்ந்துள்ளது.

தொகுப்பாக பார்த்தால் ஊடகங்கள் பண்டிகை கால கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் நுகர்வு சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட உபயோக பொருட்கள், போதை, பொழுதுபோக்கு போன்றவற்றின் மூலம் சுருட்டப்படும் பல்லாயிரம் கோடிகள் என இந்த தீபாவளி பண்டிகைகளில் சிறந்த பிராண்டாக மாறியுள்ளது.

நாட்டின் 55 சதவீத மக்கள் இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை என்பது அவர்களின் வறுமையையும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும் காட்டுகிறது. ஊடகங்களும், அரசாங்கமும் உருவாக்கும் மாயையில் இருந்து விடுபட்டால் தான் இந்த உண்மை விவரம் நமக்கு புரிய வரும்.

“வேலை செய்யும் கம்பெனியில் இந்த மாதம் சம்பளமும் கொடுக்கவில்லை,. போனசும் வரவில்லை, நவம்பர் தினத்தையோ, தீபாவளியையோ எப்படி தோழர் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்” என்றார் சக நண்பர் ஒருவர்.

“உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இதுதான் நிலைமை” என்று மேற்கண்ட விவரங்களை எடுத்துக் கூறி அவரை தேற்றினேன். ஆனால் இது வெறும் ஆறுதலுக்கு கூறும் வார்த்தை என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here