2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருவது அவர்கள் நடக்கும் விதத்தில் இருந்து புரிந்துக் கொள்ள முடியும். மணிப்பூர் கலவரத்தால் கடந்த மூன்று மாதங்களாக மாநிலமே பற்றி எரிகிறது. பழங்குடியின குக்கி மக்கள் கொல்லப்படுவதும் அவர்களது பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதும் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது ஹரியானாவில் கலவரத்தை உருவாக்கியுள்ளது பாசிச கும்பல். கலவரத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளார்கள். 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.

விஹெச்பி கும்பலின் கலவர ஊர்வலம்

கடந்த ஜூலை 31 திங்களன்று ஹரியானாவின் குருகிராம் அடுத்துள்ள நுஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக்’ யாத்திரையின் ஒரு பகுதியாக ஊர்வலம் இஸ்லாமியர்கள் வசிக்கும் கெட்லாமோட் பகுதியை வந்தடைந்த போது நிறுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.

பின்னர் இஸ்லாமியர்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக நுஹ்வில் வன்முறை தொடங்கியுள்ளது. ஊர்வலத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியவர்கள் மீது கற்களை வீசியதாக பிடிஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 4 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஊர்காவல் படை வீர்ர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வன்முறைக்கான காரணம் என்ன?

இந்த கலவர ஊர்வலத்தை குருகிராமின் சிவில் லைன்ஸில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கார்கி கக்கர் கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். ஹரியானாவில் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதும் பாஜக தான் என்பது முக்கியம்.

பஜ்ரங்தள்ளை சேர்ந்த ஒருவன் சமூக ஊடகங்களில் பரப்பிய காணொளி தான் வன்முறைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் பஜ்ரங்தள்ளை சேர்ந்த மோனு மானேசர் என்பவன் தான் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள போவதாக அறிவித்த காணொளி தான் இந்த கலவரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

மோனு மானேசர் கலந்துக் கொள்வதால் என்ன பிரச்சினை? யார் இவர்?

ராஜஸ்தானில் பசு பாதுகாவலர் என்ற பெயரில் பசுவை கடத்தி சென்றதாக கூறி 2 இஸ்லாமிய இளைஞர்களை கொன்ற வழக்கில் ராஜஸ்தான் அரசால் தேடப்படும் குற்றவாளி தான் இந்த மோனு மானேசர். இவர் இந்த ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதால் தங்களுக்கு ஆபத்து என்பதால் தான் இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஹரியானா படுகொலை: பிணந்தின்னி கழுகுகளிடம் சிக்கியிருக்கும் நாடு!

இதற்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என்கிறார் காங்கிரஸை சேர்ந்த நூஹ் எம்எல்ஏ அஃப்தாப் அகமது. “இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது துரதிர்ஷ்டமானது, கடந்த 2-3 நாட்களாக ஆத்திரமூட்டும், வெறுப்பூட்டும் வகையில் வீடியோக்கள் பரவிய போதிலும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுக்க தவறி விட்டது” என தெரிவித்தார்.

இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது ஆபத்தான காணொளிகள் பரவியதில் இருந்தே தெரிகிறது. மணிப்பூர் கலவரத்தின் தொடக்கமும் ஒரு காணொளி தான் என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

குறிப்பாக இந்த கும்பல் நடத்திய யாத்திரையானது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நூஹ் பகுதி வழியாக செல்லுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அதே வீடியோவில் நூஹ் மக்களுக்கு எதிராக அவர்களை அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அகமது இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் “இவ்வாறான சமூக விரோதிகள் அரசாங்கத்தின் அனுமதியோடு செயல்படுகிறார்கள். அவர்கள் சட்டத்திற்கு பயப்படாமல் நடமாடுகிறார்கள்” என்றார்.

‘பணயக்கைதிகள்’ கதை பரப்பும் சங்கிகள்!

இந்த கலவரத்தில் இன்று(01.08.2023) நூஹ்வில் உள்ள மசூதிக்குள் சென்று நடத்திய தாக்குதலில் இமாம் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தை மேலும் தூண்டிவிடும் விதமாக கலவரத்திற்கு பயந்து 2000க்கும் மேற்பட்டோர் கோவில்களிலும், காவல் நிலையங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதனை திரித்து கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று வதந்தியை பரப்பி வருகிறது சங்பரிவார் கும்பல்.

ஹரியானா மதக்கலவரம்; பாஜகவின் திட்டம்!
ஹரியானா முதல்வர் பாஜகவின் மனோகர்லால் கட்டார்

ஆனால் அந்த கோவிலின் பூசாரி, கோவில் உள்ளவர்கள் கலவரத்திற்கு பயந்து தான் கோவிலை விட்டு வெளியேறாமல் உள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கலவரம் நூஹ் பகுதி மட்டுமல்லாமல் அருகிலுள்ள குர்கான், ஃபாரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தின் நோக்கம் என்ன?

கலவரம் நடந்த குறிப்பிட்ட பகுதியான நூஹ்கில் வரலாற்று ரீதியாக கலாச்சார சகோதரத்துவத்திற்காக அறியப்படும் பகுதியாகும். இதுபோன்ற பகுதிகளில் தான் வெறுப்பரசியலை பரப்பி அரசியல் லாபம் பார்க்கிறது பாஜக.

குஜராத்தில் இந்து முஸ்லீம் கலவரம் நடக்கும் வரை அந்த பகுதி மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்துள்ளனர். குஜராத் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் – பாஜக கலவரம் செய்த அனைத்து பகுதி மக்களும் அதற்கு முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான்.

இதையும் படியுங்கள்: கலவரம் செய்ய காத்திருக்கும் சங்பரிவார் கும்பல்!

கலவரத்தின் மூலம் ஆட்சியை 2024-ல் தக்க வைக்கலாம் என கனவு காண்கிறது பாசிச பாஜக. அதற்காக தான் அடுத்த அஜெண்டாவாக பொதுசிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பற்றி எரிந்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் அண்ணாமலை பாதயாத்திரை மூலம் ஏதாவது நடக்குமா என காத்திருக்கிறது பாசிச பாஜக. இன்று ஹரியானா நாளை இதுவரை அமைதி பூங்காவாக திகழும் தமிழகமாகவும் இருக்கலாம்.

அதற்கு முன்னர் பாசிச பாஜகவையும் அதன் கலவர திட்டங்களையும், கார்ப்பரேட் சேவைகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதன் மூலமும் இதற்காக மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான இயக்கங்களை கட்டி மக்களை பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒன்றிணைப்பதன் மூலமுமே பாசிஸ்டுகளின் கனவை தகர்க்க முடியும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here