கம்யூனிஸ்ட் கட்சியை பாட்டாளி வர்க்கத் தலைமைக்குப் பதிலாக குட்டி முதலாளித்துவ தலைமை கைப்பற்றும் போது இத்தகைய திருத்தல்வாத போக்குகள் அதிகரித்து மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்கு பதிலாக அவநம்பிக்கையை உருவாக்கி கம்யூனிச பாதையிலிருந்து விலகிச் செல்வதற்கும், ’யாருமே சரியில்லை, இருக்கும் வரை அனுபவித்து விட்டு செத்து மடிவோம்’ என்ற கேடுகெட்ட முதலாளித்துவ கழிசடை கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்களாக மாறுவதற்கு வழிவகை செய்கிறது.
இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளை அவதானித்து ஏற்கனவே எமது அமைப்பு கீழ்க்கண்ட வகையில் உலகில் உள்ள கம்யூனிச இயக்கங்களின் போக்குகளை வரையறுத்து 2010 வாக்கிலேயே முன் வைத்தது. ”1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1950-ஆம் ஆண்டுவரை கட்சித் திட்டம் இல்லாமலேதான் செயல்பட்டு வந்தது. அதற்குப்பின் இ.க.க., அதன்பின் இ.க.க. (மார்க்சிஸ்ட்), இ.க.க. (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளும் இவற்றிலிருந்து பிரிந்து, பிளவுபட்டுச் சென்ற பல்வேறு குழுக்களும் கட்சித் திட்டங்களை முன்வைத்துச் செயல்பட்டாலும், கட்சித் திட்டம் ஒன்றை வரையறுக்கவே மிகவும் அவசியமான, அடிப்படையான அரசியல் கோட்பாட்டு ஆவணங்களை, எமது அமைப்பைத் தவிர, வேறு எந்தக் கட்சியும் குழுவும் இன்றுவரை வகுத்து முன்வைக்கவில்லை.
மார்க்சிய லெனினிய-மாசேதுங் சிந்தனை மீது உறுதியான நம்பிக்கை வைத்து, மார்க்சிய ஆய்வுமுறையை (Methodology) மேற்கொண்டு வகுக்கப்பட்ட அரசியல் – கோட்பாட்டு ஆவணங்கள், அதன் அடிப்படையிலான கட்சித் திட்டம் இல்லாத போது, கட்சியானது ஒன்று வலது சந்தர்ப்பவாதம் அல்லது இடது தீவிரவாதப் பாதையில் செல்வதும், அதனால் ஏற்படும் பின்னடைவுகளையும் பிளவுகளையும் களைந்து கொண்டு சரியான பாதைக்குச் செல்லும் முயற்சியானது வேறுவழியின்றி மீண்டும் ஒன்று வலது அல்லது இடது விலகலில் கட்சியை இட்டுச் செல்வதும் தவிர்க்க முடியாததாகும். இதுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அனுபவமாக உள்ளது.
படிக்க: சீனப்புரட்சியின் 75 ஆண்டு நிறைவும், நமது பணிகளும்!
இ.பொ.க. (மா-லெ) இந்தியாவின் பருண்மையான நிலைமைகளை யதார்த்தமாக ஆய்வு செய்து, இதன் தனிச்சிறப்பான அம்சங்களை வரையறுப்பதற்கு மாறாக, சீனத்தின் புரட்சிக்கு முந்தைய நிலைமைகளைப் பிரதியெடுத்திருந்தது. அதையே பிற மார்க்சிய-லெனினியக் குழுக்கள் அங்கீகரித்துக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு சமூகப் பொருளாதாரப் படிவத்தை ஆய்வு செய்வதற்குரிய மார்க்சிய-லெனினிய அடிப்படைகளை எமது ஆவணம் வரையறுத்தது.
எடுத்துக்காட்டாக, முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகப் பொருளாதார படிவங்களின் பொதுத் தன்மைகளையும், ஆசியச் சொத்துடைமைச் சமுதாயப் படிவத்தின் தனிச்சிறப்பான தன்மை களையும் கூறமுடியும். அந்த அடிப்படையில் இந்தியாவின் பருண்மையான நிலைமைகளை ஆய்வு செய்து, இதன் தனிச்சிறப்பான அம்சங்களை எமது ஆவணம் முன்வைத்தது. இந்தியச் சமுதாயத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்பு, ஒரே சமயத்தில் அது அடித்தளத்திலும் மேல் கட்டுமானத்திலும் பதிந்திருப்பது, இந்திய விவசாய அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பிரஷ்யன் ஜங்கர் முறையிலான முதலாளித்துவ மாற்றங்கள் ஆகியவற்றை எமது ஆவணம் முன்வைத்தது.
“சாதியமைப்பு, உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலான சமூக வேலை பிரிவினையால் தீர்மானிக்கப்படுகிறது; அது சமூக, அரசியல் பொருளாதார அடித்தளத்தில் இருக்கிறது. சமூக அரசியல் பொருளாதார அடித்தளத்தை, சமூக அரசியல் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கும் சமுதாயப் புரட்சி நடந்தேறும்போது அதோடு சேர்ந்து சாதியமைப்பு தானாகவே ஒழிக்கப்படும். ஆகவே, புரட்சி முடியும்வரை சாதியை ஒன்றும் செய்ய முடியாது; சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று போலிக் கம்யூனிஸ்டுகள் கூறிவருவதை வைத்து புரட்சியாளர்களும் சாதியப் பிரச்சினையை புறக்கணித்து, வருவதாகப் பல குட்டி முதலாளித்துவ அறிஞர்களும், தலித்திய அமைப்புகளும் அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆப்பறையும் வகையில், சாதியமைப்பு ஒரே சமயத்தில் அடித்தளத்திலும் அதன் மேல்கட்டுமானத்திலும் பதிந்திருக்கிறது என்று தனது நிலைப்பாட்டையும், அடித்தளத்துக்கும் மேல்கட்டுமானத்துக்கும் இடையிலான இயங்கியல் ரீதியிலான உறவையும், அரசியல் கோட்பாட்டு ஆவணம் மூலம் எமது அமைப்பு முன்வைத்தது. ஆனால் பிற மா-லெ. குழுக்கள் இன்றும் சாதியப் பிரச்சினை குறித்து பலவாறு சவடால் அடித்தாலும், அவை மார்க்சிய -லெனினிய நிலைப்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை
ஒரு முரண்பாட்டில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று இல்லை. ஒன்றுக்கொன்று எதிர்மறையான இரு அம்சங்கள் ஓர் ஐக்கியத்தில் இயங்கி ஒரு நிகழ்ச்சிப்போக்கை உருவாக்குகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கின் வாழ்வும், வளர்ச்சியும், தாழ்வும் மற்ற முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிற நிகழ்ச்சிப்போக்குகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் ஒன்றையொன்று பாதிக்கின்றன இவ்வாறு புரிந்துகொள்ளாமல், இந்த முரண்டாடுகளில் உள்ள தனித்தனியான அம்சங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு முரண்பாடுகளின் பாத்திரத்தைத் தீர்மானிக்கக் கூடாது. இப்படி செய்வது இயக்கவியல் பரிசீலனை முறைக்கு விரோதமாகும்.
இந்திய சமுதாயத்தில் உள்ள இரு அடிப்படை முரண்பாடுகளில், நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய நிகழ்ச்சிப்போக்கு, ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய நிகழ்ச்சிப்போக்கு – என்ற இரண்டு நிகழ்ச்சிப் போக்குகள் வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு நிகழ்ச்சிப் போக்குகளும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டு ஒன்றையொன்று பாதித்து செயல்பட்டு வருகின்றன. அடிப்படை முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிற சமுதாய நிகழ்ச்சிப்போக்குகளாக இருப்பதால், மொத்த சமுதாய நிகழ்ச்சிப் போக்குக்கும் இவை அடிப்படைகளாக இருக்கின்றன.
படிக்க: நூல் அறிமுகம்; சோசலிச சீனாவும் முதலாளித்துவ சீனாவும்.
இந்த இரண்டு நிகழ்ச்சிப் போக்குகளும் சமுதாயத்தின் அடித்தளமாக இருந்து கொண்டு மற்ற எல்லா நிகழ்ச்சிப்போக்குகளின் மீதும் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துகின்றன. எனவே, இந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்கில் எந்த நிகழ்ச்சிப் போக்கு குறிப்பிட்ட இடைக்கட்டத்தில் பிரதான பாத்திரம் வகிக்கிறது என்று தீர்மானித்து, அதனடிப்படையில் பிரதான முரண்பாடாக அந்த நிகழ்ச்சிப் போக்குக்குக் காரணமான முரண்பாட்டைக் கொள்ள வேண்டும்
இதற்கு மாறாக, பிரதான முரண்பாட்டைத் தீர்மானிப்பதில் தவறான அணுகுமுறையைப் பிற மார்க்சிய-லெனினியக் குழுவினர் பின்பற்றினர் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். அதாவது, இந்தியாவில் உள்ள இரு அடிப்படை முரண்பாடுகளில் உள்ள வெவ்வேறு முரண்பாடுகளின் இரு அம்சங்களை – நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் – தனித்தனியே எடுத்துக் கொண்டு பரிசீலித்து, அவற்றை ஒப்பிட்டு அதனடிப்படையில் பிரதான முரண்பாட்டைக் கணிக்கும் மிகத் தவறான ஒரு அணுகுமுறையை மேற்கொண்டிருந்தனர்.
உற்பத்தியில் எந்த முரண்பாட்டின் எந்த அம்சம் மிகுநிலை பெற்றிருக்கிறது, எதில் அதிக மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள், எது பலம் வாய்ந்ததாக உள்ளது என்ற அளவுகோல்களைக் கொண்டு இந்த இரண்டு அம்சங்களையும் ஒப்பீடு செய்து எந்த அம்சம் மேலாண்மைப் பெற்றிருக்கிறது, எது பிரதானமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து, பின்னர் அதை ஓர் அம்சமாக கொண்டுள்ள முரண்பாடே, பிரதான முரண்பாடு என்ற நேரெதிரான முடிவுக்கு வந்தார்கள்.
அதாவது, வேறுபட்ட முரண்பாடுகளிலுள்ள வெவ்வேறு அம்சங்களைத் தனித்தனியே பிரித்தெடுத்து, அந்த அம்சங்களை ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் முரண்பாடுகளின் பாத்திரத்தை பலரும் தீர்மானித்தார்கள். முரண்பாடுகள் என்பது எதிர்மறைகளின் ஐக்கியம் என்பதையும், அவ்வாறு இரு எதிர்மறைகள் ஐக்கியமாக இருக்கும் பொழுதுதான் ஒரு சாரம், ஒரு பொருள், அல்லது ஒரு நிகழ்ச்சிப்போக்கு உருவாகிறது என்பதையும், இதன் மூலம் அவர்கள் மறுத்தார்கள். பிரதான முரண்பாடு எது எனத் தீர்மானிக்கும் பொழுது முரண்பாட்டின் சாரம், அதனால் தீர்மானிக்கப்படுகின்ற நிகழ்ச்சிப்போக்கு, அதன் பாத்திரம் ஆகியவைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமேயல்லாது, ஒப்பிடுகின்ற முரண்பாடுகளின் தனித்தனி அம்சங்களை எடுத்துக் கொண்டு ஒப்பிடக் கூடாது மேற்கண்ட கண்ணோட்டத்தில் இந்திய சமுதாயத்தில் உள்ள இரு அடிப்படை முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிற நிகழ்ச்சிப்போக்குகளில், எது பிரதானமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிரதான முரண்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும் என்று எமது அமைப்பு வரையறுத்தது. – தொடரும்.
ஆல்பர்ட்.