துறவி – சாது, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வரிசையில், ஃபதெபூர் மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று இரவு திலிப் சைனி என்ற ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, அக்டோபர் 27ஆம் தேதி அன்று, ஹமிர்பூர் மாவட்டத்தில் அமித்திவேதி, சைலேந்திர குமார் மிஸ்ரா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிரிலாநகர் பஞ்சாயத்து சேர்மன் பவான் அனுராகியும் அவரது அடியார்களும் தான் இந்தக் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதுதான் முக்கியமானது.
இந்த பாஜகவின் பஞ்சாயத்து சேர்மன் அத்துடன் நிற்கவில்லை. இந்த பத்திரிகையாளர்களை மிரட்டி கைகளில் ஆயுதங்களை திணித்து வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டியுள்ளார்.
அதையும் மீறி தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களை தாக்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் பத்திரிக்கையாளர்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும்; வழக்கை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த இரு பத்திரிக்கையாளர்கள் மீது பாஜகவின் பஞ்சாயத்து சேர்மன் தரப்பில் காவல்துறையில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இனி, வழக்கம் போல, இந்த பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வழக்கு காவல்துறையால் தாலாட்டி தூங்க வைக்கப்படலாம். அல்லது பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு குழி தோண்டி புதைக்கப்படலாம். இவ்விரண்டும் இல்லை எனில் இந்தப் பத்திரிக்கையாளர்களின் வீடுகளை இடிக்க புல்டோசர்கள் அனுப்பப்படலாம். காவி வெறி பிடித்த பாஜக வினர் இவற்றில் எதையும் செய்வதற்கு சக்தி படைத்தவர்கள்.
இரண்டு பத்திரிக்கையாளர்கள் மீதான இந்த தாக்குதலும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இப்பொழுது மட்டும் நடக்கும் சம்பவங்கள் அல்ல. பாசிச பஜக வின் ஆட்சியில், உத்தரப்பிரதேசத்தில், பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் என்பது மிகவும் சகஜமான நிகழ்வுகளாக மாறி வருகிறன.
பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாப்பதில் இந்தியா எந்த அளவிற்கு கேடுகெட்ட நிலையில் உள்ளது என்பதை Reporters Without Borders என்ற அமைப்பு 180 நாடுகளை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 159 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆட்சியாளர்களுக்கு எதிரான உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிக்கையாளர்கள் மீது கொடுக்கப்படும் அழுத்தங்களும் தொடுக்கப்படும் அடக்குமுறைகளும் தான் இந்தியா இவ்வளவு மோசமான இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம்.
பாஜக நடத்தும் கார்ப்பரேட் காவி பாசிச ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் காவிகளின் பாசிச ஒடுக்கு முறைகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்று காவிகள் நினைக்கின்றனர். காவிகளின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த விபரங்கள் மக்கள் கவனத்திற்கு சென்றடைவது தடுக்கப்பட்டால் தான் இது சாத்தியம். அதை சாதிப்பதற்காக தான் பத்திரிக்கையாளர்கள் மீதான ஒடுக்கு முறைகளை பாசிஸ்டுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.
படிக்க: எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் ஐபோன்களை உளவு பார்க்கும் பாஜக அரசு!
காவிகள் அவர்களது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire