சிவகார்த்திகேயனின் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்தை தினமணி பாராட்டுகிறது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்தையும் பாராட்டியதோடு, திரைக்கதையின் வேகம் போதவில்லை என்றும் குறைப்பட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் இந்து தமிழ்திசையோ மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்புலத்தை மறைத்தது நியாயமா என அறச்சீற்றம் கொள்கிறது. முகுந்தின் மனைவி “இந்து ரெபெக்கா வர்கீசை” கிறிஸ்தவ பெண்ணாக காட்டியபடி, முகுந்தை பிராமண பையனாக, ராணுவ குடும்பத்தில் பிறந்தவனாக காட்டாமல், முகுந்த் தனது தந்தையை ”நைனா” என்று அழைப்பதாக வலிந்து காட்டியது ஏன்? என்கிறது. உள்ளே போய் காரணத்தையும் துப்பறிகிறது.
தயாரிப்பாளரான கமலஹாசன் பிராமணராக இருந்தும் கூட முகுந்தின் ஜாதி பற்றிய உண்மையை மறைத்துள்ளதற்கு, வெளியீட்டளரான தி.மு.க.வினரின் ”ரெட் ஜெயண்ட் மூவீஸ்” தந்த அழுத்தம் தான் காரணமா என்றும் கூட இந்துதமிழ் கேட்டுள்ளது. நாம் விவாதிக்க வேண்டியது முகுந்தின் சாதி குறித்த இந்த அக்கப்போர்களையல்ல.
முகுந்த் யாருக்காக ”தியாகி”யானார்?
படத்தின்படியும், உண்மை சம்பவங்களின்படியும் காஷ்மீரில் போராளிகளுடனான (ஆளும் வர்க்கத்தின் பார்வையில் தீவிரவாதிகளுடனான) சண்டையில் தான் முகுந்த் உயிரை விட்டுள்ளார். அவர் நாட்டுக்காகத்தான் தியாகம் செய்துள்ளார் என விருதுகள் தரப்பட்டும் உள்ளன. இதைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டி உள்ளது.
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்திலும் ராணுவம், போலீசு உள்ளிட்டவை இருந்துள்ளது. அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பலரையும் தேடிப்பிடித்து கொன்றுள்ளனர். அப்படி கொல்லப்பட்ட கட்டபொம்மன், மருதிருவர், திப்பு தொடங்கி பகத்சிங், சந்திரசேகர ஆசாத் வரை நீண்ட பட்டியலும் உள்ளது.
காலனியாதிக்கத்தை எதிர்த்தவர்களை, போராடி உயிரை விட்டவர்களை நாம் தியாகிகள் என மதிக்கிறோம். ஆனால் இவர்கள் ஆங்கிலேய அரசின் பார்வையில் குற்றவாளிகள். இவர்களை வேட்டையாடிய படையினர், அதிகாரிகள்தான் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள். இப்படி ஆங்கிலேய ஆட்சியாளரிடம் விருதை வாங்கியவர்களை நாம் கொண்டாட முடியுமா? நிச்சயமாக முடியாது. நாம் தற்போதைய காஷ்மீருக்கு வருவோம்.
காஷ்மீரில் என்ன நடக்கிறது?
திரைப்படத்தில் காட்டியபடி மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் இணைய மறுத்ததால் ராணுவத்தால் முற்றுகையிடப்படுகிறது காஷ்மீர். இந்தியாவின் உதவியை கேட்டதன் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தை காஷ்மீரிலிருந்து விரட்ட படையை அனுப்பியது இந்தியா. அந்த படைகளை துரத்திவிட்டு நம் நாட்டுக்குள் படைகள் திரும்பி வந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இன்றுவரை நிற்கிறது. இப்பொழுது நடக்கும் சண்டை காஷ்மீரிகளுக்கும் இந்தியாவுக்குமானதாக மாறியது எப்படி என்ற விசயத்துக்குள் இப்படம் போகவில்லை.
இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் ’தீவிரவாதியின்’ உடலை அடக்கம் செய்ய, ஊரடங்கு உத்தரவையும் மீறி லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கூடுவது ஏன் என்பதையோ, இந்திய ராணுவத்தை சிறுவர்கள் கல்லால் அடிப்பதையோ நேர்மையாக காட்டவில்லை. இப்படம் உண்மையை பேசவில்லை. நமக்கு தீவிரவாதிகளாக தெரிபவர்கள் காஷ்மீரிகளுக்கு போராளிகளாக தெரிகிறார்கள். பாகிஸ்தானின் தலையீடு தவறு என்றால் இந்தியா செய்வதும் தவறுதானே.
நடக்கும் அனைத்தையும் சகித்துக்கொண்டு உயர்கல்வி கற்க இந்தியாவிற்கு – டெல்லிக்கு வரும் ஒரு சில காஷ்மீரிகளையும்கூட படிக்க விடுகின்றனரா காவிகள். ABVP மூலமும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலமும், உள்ளூர் போலீசை கொண்டும் அச்சுருத்தி, பழிபோட்டு விரட்டித்தானே அடித்து வருகிறோம். சாட்சியே இல்லை என்றாலும் ‘சட்டப்படி’ அப்சல்குருக்களை தூக்கில்தானே தொங்க விடுகிறோம். இதுவெல்லாம் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இந்தியாவிற்குள் வரும் காஷ்மீரிகள் மட்டுமல்லாமல், இந்திய குடிமகன்களான சிறுபான்மையினர் கதறுவதையும்கூட நாம் மறக்கலாமா?
படிக்க: இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட 3 காஷ்மீர் பழங்குடிகள்
பல ஆண்டுகள் காஷ்மீரில் இணையத்துக்கு தடைபோடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, பாராளுமன்ற பிரதிநிதிகள் கூட காஷ்மீருக்கு செல்ல தடை விதித்தது மோடி அரசு. காஷ்மீருக்கான சிறப்பு பிரிவை ரத்து செய்து, துணை நிலை ஆளுநரை வைத்து சட்டமன்றத்தை கலைத்து, குறுக்கு வழியில் ஜம்முகாஷ்மீர், லடாக் என இரண்டாக தூண்டாடியது காவிக்கும்பல். இப்படிப்பட்ட காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முடிந்துள்ளதற்கு காரணம் எதுவாக இருக்கும். மூளையை கசக்கத்தேவையில்லை; இப்படத்தின் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும், ஆளும்வர்க்க பாசம்தான் காரணம்.
உலக நாடுகள் தடை செய்துள்ள பெல்லட் குண்டுகளை கொண்டு சுடுவதால் பெண்கள் முதல் சிறுவர்கள் வரை ஆயிரக்கணக்காணோர் கண்பார்வையை இழந்துள்ளனர். இந்த கள எதார்த்தம் நிச்சயமாக மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு தெரிந்தே இருக்கும். ஆங்கிலேய காலனி ஆட்சியில் ஆல்பிரட் பூங்காவில் சந்திரசேகர ஆசாத்தை சுற்றி வளைத்து சுட்டவர்களுக்கு ஆசாத் யார் என்பதும், அவர் தலைக்கு விலை வைத்து வெள்ளையர்கள் தேடிவந்தனர் என்பதும்கூட தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஆசாத்தை வேட்டையாடினர். பிராமணராக பிறந்து, நாட்டுப்பற்றாளராக வளர்ந்து, ஆங்கிலேயர்களை கதிகலங்க அடித்த அந்த HSRA வின் கமாண்டரைத்தான் நாம் கொண்டாடுகிறோமே தவிர அவரை வேட்டையாடியவர்களை அல்ல.
எனவே காஷ்மீரில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவத்தின், ராஷ்டிரீய ரைபிள்சின் மேஜராக உயிரை விட்டவரை நாம் கொண்டாட எதுவும் இல்லை. ஆனால் முகுந்தாக வரும் சிவகார்த்திகேயனின் சாவுக்கு தமிழக ரசிகர்கள் கண்ணீர் வடிக்கும்படி நேர்த்தியாக எடுத்துள்ளார்கள். சாய் பல்லவியின் (இந்து ரெபெக்காவின்) கண்ணீர், ஒன்றிய அரசு வழங்கும் பதக்கம், சிலைதிறப்பு என காஷ்மீரை ஆக்கிரமித்த இந்திய அரசின் குற்றம் மறைக்கடிக்கப்பட்டு விடுகிறது.
மேஜர் முகுந்த் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் இல்லாதவராக இருக்கலாம். ஆனால் அவரின் படைப்பிரிவை இயக்கும் இந்திய அரசு அப்படிப்பட்டதல்ல. விவசாயிகளின் வேளாண்சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டமான டெல்லி முற்றுகையில் பல ராணுவ வீரர்கள் நேரில் வந்து ஆதரவு தந்தனர். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல காவலர்கள் பங்கெடுத்து உடன் நின்றனர். நாம் கொண்டாட வேண்டியது இத்தகையவர்களைத்தான்.
விலைபோகும் கலை!
மனிரத்னத்தின் ”ரோஜா” முதல் ஜீவா – மோகன்லால் கூட்டணியின் ”அரண்” வழியாக தற்போது ”அமரனும்” உண்மையை பேசவில்லை. ஒருபக்க சார்புடன், உண்மையை திரித்து பொதுக்கருத்தாக்குவதன் மூலம் ஆளும்வர்க்க சேவையில், போலி தேச பக்தியை தூண்டி, மோடி அரசால் அக்னிவீர்களாக மாற்றப்பட்டு விரட்டப்படும் இளைஞர்களின் தரப்பிலும் நிற்கவில்லை. மனசாட்சி உள்ளவர்களால், உண்மையை தெரிந்தவர்களால், இப்படங்களை எப்படி ஆதரிக்க முடியும்?
படிக்க: காஷ்மீர் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் kashmir Files!
இப்படத்தை மோடியின் பாஜகவோ, அல்லது காஷ்மீரை விழுங்கவுள்ள இந்திய கார்ப்பரேட்டுகளோதான் சொந்த செலவில் எடுத்து இலவசமாக திரையிட்டிருக்க வேண்டும். ஆனால், கமல்ஹாசன் தயாரிப்பாளராக வந்து முட்டுக்கொடுப்பதை செய்திருக்கிறார். கார்ப்பரேட் காவி பாசிச கும்பலுக்கு வலுசேர்க்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது. பணம் மட்டும்தான் குறிக்கோளா என துணை முதல்வரிடம் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள்தான் கேட்க வேண்டும்.
புறக்கணிக்கவேண்டிய இப்படத்தை தமிழக மக்கள் காசை செலவழித்து பார்த்தும் வருகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். நாம் கொண்டாட வேண்டியது போராளிகளைத்தான்; அரச படைகளின் – பிரிவுகளின் தலைமைப் பொறுப்பிலுள்ள சட்டபூர்வ அடியாட்களை அல்ல.
- இளமாறன்
‘அமரன்’ திரைப்படம் தொடர்பான விமர்சன பூர்வமான கட்டுரையில் தோழர் இளமாறன் திரைப்படம் எடுத்த ‘திராவிட மாடல்’ உ.பி.க்கள். மற்றும் கமல்ஹாசன் முதலானோரையும், நடிகர் சிவகார்த்திகேயன் புரியும் ‘தியாகம்’ எப்படி
தமிழ்நாட்டு ரசிகர்களை வழக்கம்போல்
‘கண்ணீர் சிந்த’ வைத்துள்ளது என்பது பற்றியும், இத்திரைப்படத்திற்கு பாஜக ஆர் எஸ் எஸ் கும்பலின் மறைமுக மற்றும் நேர்முக ஆதரவு குறித்தும் தெளிவாகவே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. போராளிகளை ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்துவதும்,
கொலைகாரர்களின் உயிரிழப்புக்களை ‘தியாகிகளின்’ உயிரிழப்புகளாக சீன் போட்டு காண்பிப்பதும் இந்த திரைப்படத்தில் மட்டுமல்ல; இன்றைய ஆளும் வர்க்கத்தின் நடைமுறையாக உள்ளது என்பதையும், அதனை பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நிகழ்வுற்ற துரோகிகள் யார்? தியாகிகள் யார்? என்ற ஒப்பீட்டோடு, கட்டுரை சிறப்பான முறையில்
அம்பலப்படுத்துதலை மேற்கொண்டுள்ளது.
கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நான் கணிப்பது சரியாக இருக்கும் பட்சத்தில் 1980- களின் இறுதிக் காலக்கட்டத்தில் ம.க.இ.க. சார்ந்த அமைப்புக்களால் வெளியிடப்பட்ட “காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற நூலைப் படித்தவர்கள் இந்த அற்பத்தனமான – புளுகுனித்தனமான ‘அமரன்’ திரைப்படத்தை
பாராட்ட மாட்டார்கள்! ரசிக்க மாட்டார்கள்!! கதாநாயகனின் ‘சாவு’க்காக கண்ணீர் சிந்த மாட்டார்கள்!!!