கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக காவிக் கும்பல் நடத்தும் மதக்கலவரமே ஹிஜாப் தடை விதிப்பு!

போராடும் இசுலாமிய மாணவர்களுக்கு துணை நிற்போம்! கார்ப்பரேட் காவி பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்


தேதி: 09.02.2022

பத்திரிக்கை செய்தி

கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களின் சீருடையை அந்தந்த கல்வி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற ஒரு அரசாணையைப் பிறப்பித்திருந்தது. அரசின் இந்த ஆணையைக் காட்டி, பாஜக-வின் இந்துத்துவ மாணவ குண்டர்படையான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ஏ.பி.வி.பி.), உடுப்பி மாவட்டத்தில் சில கல்லூரிகளில், இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு வருவதை எதிர்த்து ரகளையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவித் துண்டுடன் கல்லூரிக்கு வருவோம் என இந்த கும்பல் மிரட்டியதைத் தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்கு வெளியே நிறுத்தியது கல்லூரி நிர்வாகம். அந்த மாணவிகள், கெஞ்சியும், கண்ணீர் விட்டு அழுத பிறகும், கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் நடு ரோட்டுக்கு வந்து போராடினர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற இஸ்லாமிய மாணவிகள் ஐ லவ் ஹிஜாப் என்று இயக்கமாக மேற்கொண்டனர்.

புர்கா அல்லது பர்தா அணிவது மத அடையாளம், பெண்ணடிமைத்தனம் என்று ஊளையிடும் பார்ப்பன நரிகள் இன்றுவரை இந்துப் பெண்களை கோவில் பூசாரிகளாக அனுமதித்ததோ, ஏற்றுக் கொண்டதோ கிடையாது., கேரளாவில் உள்ள சபரிமலைக்கு பெண்களும் சென்று வழிபடும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் இன்றளவும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பது கிடையாது. காஞ்சி, பூரி, சிருங்கேரி உள்ளிட்ட சங்கராச்சாரியார்கள் என்று கூறப்படும் பார்ப்பன குருமார்களில் ஒரு பெண்கள் கூட கிடையாது.

இவர்களின் வாதப்படி லெக்கின்ஸ், சுடிதார், துப்பட்டா, புர்க்கா, ஹிஜாப் போன்ற எதை அணிவதில் பிரச்சனை இருந்தாலும் அதை அந்த பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிவது பற்றி, இந்துத்துவ பாசிஸ்டுகள் தடுப்பது, அடுத்தவர் மத உரிமையில் தலையிடுவதாகும்.

தனது கொள்கையை விளக்கி இந்து மதத்திற்குள் யாரையும் புதிதாக சேர்க்க முடியாது. அதுபோல பாஜகவின் இந்துத்துவா கொள்கையை விளக்கி பாரதிய ஜனதா கட்சிக்கும் ஓட்டு பெற முடியாது. எனவே, பிற மதங்களை அவர்களின் வழிபாட்டு முறைகளை, மத நம்பிக்கைகளை விமர்சித்து கலவரத்தைத் தூண்டி அதன்மூலமே தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலைக் கணக்கில் கொண்டு, இந்த ஹிஜாப் பிரச்சினையை உருவாக்கி மதக்கலவரத்தை தூண்டுகிறது., அதன் மூலம் பெரும்பான்மை இந்து சமூகத்தின் மத உணர்ச்சியைக் கிளறி, அதை ஓட்டுக்களாக அறுவடை செய்து வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்படுகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக இந்துத்துவ கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கடந்த கால மதக் கலவரங்கள் பெரும்பாலும், தேர்தல் அரசியலை மையமாக வைத்து, அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நடத்தப்பட்டது. கோவை குண்டுவெடிப்பு, அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் பயங்கரவாதப் படுகொலைகள் தொடங்கி, பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி தடை, லவ் ஜிகாத் என அனைத்தும் நடத்தி வெற்றி பெற்ற ரத்த சரித்திரமே பாஜக-வின் ஓட்டரசியலாகும்.

இதே போன்ற வெற்றியைத் தமிழகத்திலும் பெற்று விட வேண்டும் என அதிமுக கட்சியை தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தமிழக மக்களிடம் பலனளிக்காமல் பல்லிளித்துப் போனது.

எனினும், தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் கிடைக்கும் ஒவ்வொரு சிறு வாய்ப்பைக் கூட பயன்படுத்தி வருகிறது, பாஜக கும்பல். கடைசியாக, தஞ்சை மைக்கேல்பட்டியில் 160 ஆண்டுகளாக கல்வி சேவை புரிந்து வரும் கிருத்தவ பள்ளியில் பயின்ற, அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை மரணத்தை வைத்து, கட்டாய மதமாற்றம் தான் அதற்குக் காரணம் என ஊதிப் பெருக்கி கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது.

இந்த வானரப் படையின் வாலில் வைத்த தீயானது தற்போது புதுச்சேரியிலும் பரவத் துவங்கியுள்ளது. தனது செல்வாக்கைப் பெருக்க, புதுச்சேரி உள்துறை அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளியில் ஷாகா பயிற்சியை நடத்தி பள்ளிச் சிறார்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது. அம்மாநிலத்தின் அரசுப் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கிறது. இப்படி மதவெறியைத் தூண்டி சமூகப் பதட்டத்தை உருவாக்குவதை தனது அன்றாட நடவடிக்கையாகவே செய்து வருகிறது.

ஏற்கனவே மாட்டுக்கறி உண்ணக் கூடாது என்று மக்களின் உணவு உரிமையில் தடை விதித்த சங் பரிவார் கும்பல், இன்று உடை உரிமைக்கு தடை விதிக்கிறது. ஆனால், பார்ப்பனர்கள் பூணூல் அணிவது, நெற்றியில் நாமம், பட்டை போடுவது, பொட்டு வைத்துக் கொள்வது, பழனி, ஐயப்பன் கோவில்களுக்கு மாலை போடுபவர்கள் துண்டு அணிவது போன்றவை தனிநபர் மத நம்பிக்கை என்ற அடிப்படையில் அவற்றை தடை செய்வது பற்றி யாரும் பேசுவதில்லை.

ஆனால், வகுப்புவாத மோதல்களை உருவாக்க ஹிஜாபை ஒரு குறியீடாக வைத்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான மத துவேசத்தைத் தான் இந்தக் கும்பல் பரப்புகின்றனர். நேற்று வரை ஒன்றாக இருந்து நட்பாக பழகிய மாணவர்கள் மத்தியில் இன்று மதவெறி வெறுப்பை விதைக்க முயற்சிக்கின்றனர். அதற்காக மாணவர்களிடம் காவித் துண்டைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்துள்ளனர். அம்மாணவர்களிடம் காவித் துண்டை திரும்ப வாங்கும் வீடியோக்கள் வெளிவந்து அவர்களது சங்கித்தனம் அம்பலப்பட்டு நாறுகிறது. தனது பிரிவினைவாத நடவடிக்கைகள் மூலம், பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற இந்துத்துவக் கும்பலின், தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, நமது நாட்டின் வரலாறெங்கும் நிறைந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தனது மானத்தை மறைக்க மார்புத் துணியைப் போடக்கூடாது என தடைவித்தனர் பார்ப்பன (இந்து) மதத்தினர். பெண்களுக்கு மார்புத் துணி தடையைப் போல்,, ஆண்களுக்கு தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என பல தடைகளைப் போட்டு கொடுமைகளை செய்து ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தான், இன்று மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை விதிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் மார்புத் துணியும், இசுலாமிய மாணவிகளின் ஹிஜாபும், தங்களது மானத்தின், சுயமரியாதையின் அடையாளங்கள் என்ற பெண்களின் போர்க்குரல் இன்றும் ஒலிக்கிறது.

எனினும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது, தனிநபர் ஆடை உரிமைகள், மத உரிமைகள் என்று சொல்லி, அரசியல் சட்டத்தாலோ, நீதிமன்றத் தீர்ப்பாலோ நிலைநிறுத்த முடியும் என்பதெல்லாம், மூட நம்பிக்கை. ராமன் இங்கு தான் பிறந்தான் என்று அயோத்தி பற்றி வழங்கப்பட்ட தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் யோக்கியதையை உலகறியச் செய்து விட்டது.

ஒரு வேளை நீதிமன்றம் ஹிஜாப்-பிற்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னால், கூட காவி பாசிஸ்டுகள் சமூக பதட்டத்தை உருவாக்கி மீண்டும் தடுப்பார்கள். இப்படிப்பட்ட காவிக் காவிக் கும்பலை, சட்டத்தால் தடுத்து விட முடியாது. மக்கள் மத்தியில் அமைதியைச் சீர்குலைத்து மத மோதல்களை ஏற்படுத்தும், மக்கள் விரோத கர்நாடக பாஜக அரசு கலைக்கப்பட வேண்டும்.

அனைவரும் இந்து என்றால் பார்ப்பானுக்கு மட்டும் பூணூல் எதற்கு? என குரல் எழுப்பி, அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதுடன், அந்தக் கும்பலுக்கு எதிராக ஜனநாயக – முற்போக்கு – புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு, நேருக்கு நேர் களத்தில் எதிர்த்து நிற்பதன் மூலமே கார்ப்பரேட் காவி பாசிசத்தை மோதி வீழ்த்த முடியும்.. அப்படிப்பட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பது தான் இன்றைய அவசிய அவசர தேவையாகும்.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 94444 42374

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here