சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை ஒப்பந்த முறைக்கு மாற்றாதே!

ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் தொழிலாளர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசின் வாக்குறுதிகளை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை மாநகரில் குவிந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மக்களது சுகாதாரத்திற்கும் எழில்மிகு சென்னை உருவாவதற்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி தங்களுடைய சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து அர்ப்பணிப்போடு பணிபுரியும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர். அதே வேலையில் ஈடுபடும் நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே பெறுகின்றனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளாக தற்காலிக தொழிலாளர்களாகவே பணிபுரிந்துவரும் அவர்களை ஒப்பந்த முறையில் மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே பணியில் நிரந்தரமின்மை, கூலி குறைவு என்ற சூழலில் ஒப்பந்த முறை வேலை என்பது தங்களின் பணி நிரந்தர வாய்ப்பை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதோடு, வாங்கும் குறைந்த கூலி மேலும் குறையும்.

எனவே, தமிழக அரசு தங்களை ஒப்பந்த முறைக்கு மாற்றாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரியும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகரான சம்பளத்தை வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வந்தனர்.

கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் அவர்களது உழைப்பை போற்றுவது, பாத பூஜை செய்வது, தங்களது வாழ்வாதாரத்திற்காக நியாயமான கோரிக்கைகள் முன்வைத்து போராடினால் போலீசை வைத்து அடக்குமுறை செலுத்துவது என அரசு இரட்டை வேடம் போடுகிறது.

அந்த சுகாதார தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தும், கட்சிகளின் தேர்தல் கால வாக்குறுதிகளை போல அல்லாமல் சிங்காரச் சென்னையின் அழகிற்காக உருக்குலையும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை 28.05.2022, காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த செய்தியை தங்களது அச்சு ஊடகம், காட்சி ஊடகத்தில் பிரசுரித்து தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை நல்குமாறு கோருகிறோம்.

இப்படிக்கு,

இல. பழனி
மாநில தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 94448 34519.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here