”நான் இயல்பாக பிறந்த மனித பிறவி அல்ல! மாறாக கடவுளின் தூதுவராக படைக்கப்பட்டுள்ளேன்” என்று பாசிச மோடி கடந்த வாரத்தில் பிதற்றி செய்தியை பரபரப்பாக்கியதை நாம் அறிவோம்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ‘ஏதோவொரு விஷயத்தை’ நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார் பாசிச கோமாளியான திருவாளர் மோடி.
இதனைப் கேட்கும் போது, ’கடவுள் பாதி; மிருகம் பாதி’ என்று ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்த ஆண்டவரையும், காசியின் அலைந்து திரியும் அகோரிகளுக்கு டஃப் கொடுத்து நான் கடவுள் என்ற திரைப்படத்தில் நடித்த ஆர்யாவையும், நடிப்பில் மோடி தூக்கி சாப்பிடுகிறாரே என்று நமக்கு தோன்றுகிறது.
தன்னை பராமரிக்க ஒரு நாளைக்கு 4 கோடி ருபாய் செலவு செய்யும் ’ஏழைத் தாயின்’ மகன், அனைத்தையும் துறப்பதைப் போல திடீரென மாறியதற்கும், தேர்தலில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்று, கோடி மீடியாக்களின் இருட்டடிப்புகளை மீறி செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதற்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.
பாசிச அரசியலின் அடிப்படையை புரிந்துக் கொண்ட புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும், தேர்தலில் தோல்வியை பாசிச பாஜக அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளாது என்பதை எச்சரித்து, அதனை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் கடவுள் அவதாரம் என்ற தனது ’கற்பனையான பிம்பத்தை’ தக்க வைத்துக் கொள்வதற்கு பாசிச மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எடுத்த எடுப்பிலேயே இதனை பித்தலாட்ட நாடகம் என்று கூறிவிட முடியும். முற்றும் துறந்த முனிவராக நடிக்கும் திருவாளர் மோடி இவ்வளவு மீடியாக்கள், பரபரப்பு, நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பு போன்றவைகளை வைத்துக்கொண்டு தியானம் செய்யப் போவதாக கூறுவது பித்தலாட்டமாகும்.
அது பற்றி நேற்றைய நாளேடுகளில் வந்துள்ள செய்தி என்ன?
“பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு 30-ம் தேதி மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு 4.35 மணியளவில் வருகிறார். அதன்பின்னர்,கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் செல்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்கிறார்.
வியாழக்கிழமை மாலையில் இருந்து ஜூன் 1ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்யும் பிரதமர் மோடி அன்று மாலை 3 மணியளவில் தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்” என்று தினமணி செய்தி வெளியிடுகிறது.
படிக்க:
♦ ஸனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் தினமணி
♦ ஆன்மசுகம் அளிப்பதாக கூறி ;ஆத்மசுகம்; அளித்த நித்தி கைலாசா பயணம்!
இந்தியாவில் உள்ள மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கார்ப்பரேட் சாமியார்களான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முதல் ஜக்கி வாசுதேவ் வரை பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து, ’நான் கடவுள்’ என்று பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனர்களுக்கு போட்டியாக கிளம்பியுள்ள சூத்திர சாமியார் நித்தியானந்தா நான் கடவுள் என்று கூறுவது மட்டுமின்றி தனக்கென்று கைலாசா என்ற நாட்டையும் உருவாக்கி அந்த நாட்டின் அதிபர் நான்தான் என்று கூறிக் கொண்டுள்ளார்.
உலகிலேயே அதிக நடுத்தர வர்க்கத்தை கொண்டுள்ள இந்தியாவில் ’மன அமைதி தேடி’ அலைகின்ற நடுத்தர வர்க்க கும்பலுக்கு கஞ்சா சாமியார் ஜக்கி, யோகா சாமியார் பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வரிசையில் ஹைடெக் சாமியாராக மோடியும் உருவாகி கொண்டுள்ளார் என்பது தான் கவனிக்கத்தக்கது.
மனிதர்களில் ஏழாவது அறிவை மேம்படுத்தப் போவதாக புளுகிக் கொண்டு திரியும் நித்தியானந்தாவை ஆதரிப்பதற்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கும் போது, நமது நாட்டின் மீது ’பயாலஜிக்கல் வார்’ தொடுக்க கிளம்பியுள்ள மோடியை ஆதரித்து மோடியின் பக்தர்கள் சாமியாட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுமைகளை சீர்திருத்த முயற்சி மேற்கொண்ட விவேகானந்தர் பார்ப்பனர்களை பற்றி கூறிய கருத்துக்கள் எதையும் மோடி அறிவாரா என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானம் செய்து முடித்த பிறகு வெளியில் வந்து அவர் சொல்லப் போகும் செய்திகளுக்காக சங்கி முட்டாள் கூட்டம் காத்திருக்கிறது.
தேர்தல் முடியும் தருவாயில் மோடி இது போன்று ஸ்டண்ட் அடிப்பது முதல் முறையல்ல 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, மகாராஷ்டிராவில் உள்ள பிரதாப்கர் கோட்டைக்குச் சென்றார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தபிறகு உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தவர், பிறகு ஒரு குகையில் தியானம் மேற்கொண்டார்.
தற்போது ஏழாம் கட்ட தேர்தல் நடக்க உள்ள 57 தொகுதிகளில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவே கணிப்புகள் வெளியாகியுள்ளதால் தான் எதற்கும் ஆசைப்படாத நபர் என்பதைப் போல காட்டிக் கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு செல்ல இருக்கிறார்.
தனது தேர்தல் ஆதாயங்களுக்காக எந்தவிதமான கூச்ச நாச்சமுமின்றி இதுபோன்று துறவற வேடம் புரிந்து நடித்து வரும் பாசிச மோடி, சமகால பாசிச பயங்கரவாதிகளான இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமின்றி ஒழிந்துபோன பாசிச பயங்கரவாதிகளான ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களை விட கொடூரமானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவரை சாதாரண வேடமணிந்த சாமியார் என்றோ, அவரே பிதற்றுவது போல பரமாத்மாவின் தூதர் என்றோ, பிற அரசியல் கட்சி தலைவர்களைப் போன்ற மற்றும் ஒருவர் என்றோ புரிந்துக் கொள்வது தவறாகும்.
2047 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ள பாசிச மோடியின் கபட நாடகங்களை அனுமதித்தால், நாடு ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாவது மட்டுமின்றி, ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தின் கீழ் சிக்கிக் கொண்டு சொல்ல முடியாத கொடூரங்களுக்கு ஆட்பட நேரிடும்.
”தேர்தலில் ஒருவேளை வென்றால் பிரதமர்! தோற்றால் பிரம்மரிஷி!” என்ற பட்டத்தை பெறுவதற்கு மோடி இப்போதே பிற சாமியார்களுடன் போட்டி போட்டு வருகிறார், இதுதான் இந்தியவகை பாசிசத்தின் வெளிப்பாடு என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
எனவே, விவேகானந்தர் பாறை தியானம் என்பது வெறும் செய்தியாக கடந்து செல்லும் பிரச்சனை அல்ல. ”தமிழர்கள் திருடர்கள் என இழிவுபடுத்திய பாசிச மோடியே தமிழகத்தின் உள்ளே நுழையாதே! விவேகானந்தர் பாறையை இழிவுபடுத்தாதே! அனைத்து இகலோக சுகங்களையும் அனுபவித்துக் கொண்டே துறவி என்ற போர்வையில் நடிக்காதே! காசி அகோரிகளுடன் இணைந்து பரமாத்மாவை தேடு” என்று முகத்தில் அறைவோம்!
- மருது பாண்டியன்.







