விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் ஹனுமான் என்ற முட்டாள் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடு!

விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் ஹனுமான் என்ற முட்டாள் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடு!
ஆர்எஸ்எஸ் பாஜகவின் சங்கிகளும் நேரடியாகவே தெருவில் இறங்கி வாரியார் வேலையை, “ஹை டெக்” முறையில் செய்யத் துவங்கி விட்டனர்.

மிழகத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு ஆன்மீக சொற்பொழிவு செய்கின்ற கிருபானந்த வாரியார் என்பவர், தான் பிரசங்கம் செய்யும்போது மாணவர்கள் மத்தியில் தவறாமல் சில கேள்விகளை கேட்பார்.

“தம்பி முருகனின் வாகனம் எது? என்பார். கூட்டத்தில் வந்த சிறுவர்கள் மத்தியில் இருந்து “மயில்” என்று சரியாக பதில் சொல்பவர்களுக்கு தம்பி சிறந்த அறிவாளி என்று கூறிக் கொண்டே கந்தர் சஷ்டி கவசத்தையோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஆன்மீக புத்தகத்தையோ பரிசாக அளிப்பார்.

பகுத்தறிவு பிரச்சாரம் மேலோங்கி இருந்த தமிழகத்தில் வாரியார் உள்ளிட்ட ஆன்மீக பிரசங்கிகள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று பகுத்தறிவுக்கு எதிரான இதுபோன்ற புராண, இதிகாச, மூடக் கதைகளை பரப்பி மக்களை மௌடீகத்திலும், ஆன்மீக மயக்கத்திலும் வைத்திருந்தனர்.

இதற்கு நிகராகவே தந்தை பெரியார் துவங்கி திராவிட இயக்கத்தினர் மற்றும் பொதுவுடமை இயக்கத்தினர் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரங்கள் மட்டுமின்றி அறிவியல் பிரச்சாரங்களையும் கிராமங்கள் தோறும் சென்று நடத்தி வந்தனர்.

மற்றொருபுறம் அறிவியல் ஆன்மீக உலகத்தின் அனைத்து புரட்டுகளையும் படிப்படியாக தகர்த்தெறிய துவங்கியது. கடைசியாக கடவுள் துகள் என்று அழைக்கப்படுகின்ற, “ஹிக்ஸ் போசான்” கண்டுபிடிக்கப்பட்டது முதல் உலகத்தை கடவுள் படைத்தார் என்ற பகுத்தறிவுக்கு எதிரான மூடத்தனங்களுக்கு முடிவு கட்டப்பட்டது.

ஆனால் இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்எஸ்எஸ் பாஜகவின் மூதாதையர்கள் துவங்கி தற்போது உள்ள இளைய தலைமுறை தலைவர்கள் வரை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் சமீபத்தில் அனுராக் தாக்கூர் பேசிய பேச்சு நிரூபித்துள்ளது.

கடவுள் நம்பிக்கை குறித்து பிரச்சாரம் செய்கின்ற ஆன்மீகப் பிரச்சார சங்கிகளும், மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவின் சங்கிகளும் நேரடியாகவே தெருவில் இறங்கி வாரியார் வேலையை, “ஹை டெக்” முறையில் செய்யத் துவங்கி விட்டனர்.

சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் முதல் முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவர் யார் என்று கேள்வி எழுப்பி மாணவர்கள் மத்தியில் பதிலை எதிர்பார்த்தார். திருவாளர் அனுராக் தாக்கூர்.
மாணவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று கூறியவுடன் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, இல்லை முதலில் விண்வெளியில் பயணம் செய்தவர் ஹனுமான் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

படிக்க: கோயில் சொத்து கல்விக்கு ஆகாது: நான் முழு சங்கியே தான்! நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி!

தமிழகத்தில் இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் போராடி வருவதால் இவையெல்லாம் ஒரு நொடியில் கேலிக்கூத்து என்று நிராகரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரபலக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்று பத்து பாகங்களில் எழுதிய போது அதை மறுத்து அர்த்தமற்ற இந்துமதம் என்று மஞ்சை வசந்தன் எழுதிய நூல் பிரபலமடைந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுபோன்ற புராண இதிகாச குப்பைகளை பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தால் உண்மை என்று நிலைநாட்டி விடுவார்கள் என்ற எச்சரிக்கையை தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியது.

“பூகோள பாடத்திலே சிவன் தலையிலே கங்கையாறு. வரலாறு சொல்லித்தர வாரியார் வருவாரு விஞ்ஞான, தமிழ் வாத்தியார் எல்லாம் விட்டா போதும்னு ஓடுவாரு அத்தனைக்கும் அத்தாரிட்டி காஞ்சி சங்கராச்சாரியாரு”
என்று பாடல் வரிகளை தமிழகத்தின் பட்டி, தொட்டிகள் எல்லாம் பரப்பியது.

இதுபோன்ற பிரச்சாரங்கள் காரணமாகவே தமிழகத்தின் கிராமங்களில் துவங்கி பெரு நகரங்கள் வரை பாசிச பாஜகவை அங்கீகரிப்பதில் மக்கள் பல கோணங்களில் சிந்திக்கின்றனர் என்பது மட்டுமின்றி அவர்களின் பித்தலாட்டங்களை கேலிக்கூத்தாக்கி எள்ளி நகையாடுகின்றனர்.

படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு லட்டு தின்ன பார்க்கும் சங்கிகள்!

இத்தனையையும் மீறி தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்று பாசிச பாஜக பல அவதாரங்களை எடுத்து வருகிறது.

அனுராக் தாக்கூரின் பித்தலாட்டங்களை தோலுரித்து எழுத வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது தெருவில் விநாயகனுக்கு கட்டியிருந்த நீண்ட குழாயில் இருந்து, “எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார்” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

நாமும் இத்தகைய பாடல்களில் உள்ள பார்ப்பன ஆதிக்க கருத்துகளையும் மூட நம்பிக்கைகளையும், அவ்வப்போது எடுத்துச் சொல்லி உண்மையை உணர்த்த வேண்டும்.

திருப்புகழ் பாடல் வரிகளில் வருகின்ற , “முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதிதீரா” என்று விநாயகனை பற்றி கூறும்போது தன்னுடைய தகப்பன் சென்ற தேர் சக்கரத்தை உடைத்தவனை அதிதீரன் என்று கூற முடியுமா என்றும்,
“முப்புரி நூலும், முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும்” என்ற கந்த சஷ்டி பாடலை எடுத்துச் சொல்லி முப்புரி நூல் அணிவது யார்? அவர் யாருடைய கடவுள் என்றும்,
“உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்” என்ற பாடல் வரிகளின் பின்னால் உள்ள பார்ப்பன கொழுப்பையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதுபோன்ற அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகின்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களின் மூளைக்குள் பக்தியின் பெயரால் திணிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கு எதிராக களமாடுகின்ற பகுத்தறிவாளர்கள் மற்றும் பொதுவுடமை இயக்கத்தினர் பகுத்தறிவுக்கு எதிராக இது போன்ற மூடத்தனங்களை எதிர்த்து போராடுவதில் பின்தங்கியே உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் தீவிரமாகவும், வெறித்தனத்துடனும் சாதி, மத, பிற்போக்கு நம்பிக்கைகளை பரப்புகின்ற இந்த காலகட்டத்தில் பகுத்தறிவு பிரச்சாரங்களை ஒருபோதும் நிறுத்தவே கூடாது.

ஏனென்றால் தனது கையில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் துவங்கி ஊடகங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் பாஜக பகுத்தறிவுக்கு எதிரான மூடநம்பிக்கைகளையும், புராண, இதிகாச குப்பைகளையும் உண்மை என்பது போல சித்தரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நிலவின் மறுபக்கம் காலடி வைத்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்தும், நவீன விஞ்ஞான படைப்புகளுக்கு மகா சக்தி என்றெல்லாம் பெயர் சூட்டி அதனை சகஜமாக்குகின்ற கேடுகெட்ட செயலில் பாசிச பாஜக இறங்கியுள்ளது.

இத்தகைய மோசடிகளுக்கு எதிராக குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகுத்தறிவு, நாத்திகம் மற்றும் அறிவியல் குறித்த மனப்பான்மையையும், உண்மையான அறிவியல் கருத்துகளையும், மத மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் அனைத்தையும் போர்க் குணமிக்க முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திராவிட இயக்கத்தினர் பல்வேறு புராண, இதிகாச குப்பைகளுக்கு எதிராக துவக்க காலத்தில் எழுதிய பல்வேறு நூல்களை மீண்டும், மீண்டும் இந்த தலைமுறையினர் படிப்பதற்கு தூண்ட வேண்டும்.

போர்குணமிக்க பொருள் முதல்வாத பிரச்சாரம் தான் இது போன்ற பித்தலாட்டங்களுக்கு நிரந்தரமான முடிவு கட்டும்.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் யார் என்ற கேள்வி துவங்கும் இது அனுமான் என்ற பதிலோடு மாணவர்கள் கூறினார்கள் என்ற விவாதத்தையும் அதன் பிறகு ஆர் எஸ் பி ஜே பி சேர்ந்த பங் பரிவார் கூட்டம் அறிவியலை எப்போதும் ஏர்ப்பதில்லை என்ற கருத்துக்களையும் அதற்கு ஆதாரங்களாக ம.க.இ.க பாடல் மற்றும் பெரியாருடைய பிரச்சாரங்கள் சில எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டுள்ளது மிகவும் சிறப்பானது நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here