”  ‘சின்னமூல்’ படத்தை நாங்கள் எடுத்தோம் என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் எனது தனிமனித உழைப்பாக அதை நான் இன்றுவரை  கருதவில்லை. சின்னமூல் சமகால முற்போக்குக் கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் உருவான படம்…..”

                   –  நிமாய்தா.

தொழிலாளர்கள் என்றால் நிமாய்தாவுக்கு உயிர் ; திரைத் தொழிலாளர்களுக்காகவே சென்னையில் சங்கம் கட்டினார், சரியான வேலைநேரம் உரிய கூலி எல்லாவற்றுக்கும் போராடினார். மேல்நாட்டு பாணியில் கால்சட்டை, டிரிம் ஆன மேல்சட்டை, தொப்பி உடுப்பில் ஒளிப்பதிவாளராக ஆரம்பித்தார். ஆனால் விரைவிலேயே ஒவ்வொன்றாக எல்லாப் பழகு முறைகளையும், தமிழ் உட்பட  கற்றுக் கொண்டார். பிறகு இறக்கும் நாள்வரை காக்கி/ வெள்ளை அரைக்கால் ஷார்ட்ஸில் தான் அவர் சுற்றினார்; வீடு, எங்கும் அப்படித்தான் இருந்தார்.

கலை : புகைப்படக்கலையை  சிறு வயதிலேயே தாய்மாமனிடம் கற்றுத் தேர்ந்து வளர்ந்தார்; முறையான ஒளிப்பதிவையும் படித்து பயிற்சிமூலமும் தாண்டினார்.  ரசிய இயக்குனர்கள் ஐஸன்ஸ்டீன், புடோவ்கின் இருவரின் தாக்கங்களையும் அவரிடம் காணலாம். அந்தக் குறிப்புகள் அனைத்தும் இரண்டு  பெரிய நோட்டு அளவுக்குப் பெருகின.

அரசியல் : இப்டா —  இந்திய மக்கள் நாடகக் கழகம், சிபிஐ –இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,   சுற்றிலும் சோசலிசம் பற்றிய விவாதங்கள் இவற்றின் மூலம் மார்க்சியம் கற்றார், வளர்ந்தார்  நிமாய்தா;

 

இதேபோல இசை, ஓவிய பாரம்பரியம் தொடங்கி, முற்போக்கு நண்பர்கள் தொடங்கி, ‘நவீனத்துவமும்’  கலந்து  கூட்டுக்கலையான சினிமா நோக்கி வளர்ந்தார் சத்யஜித் ரே. இருவரும்  சந்தித்து ஒன்றாக முனைந்து நிறுவியதே ‘கொல்கத்தா திரைப்படச் சங்கம்’. பின்னாளில்  நிமாய்தா சென்னையை இரண்டாம் வீடாக்கிக் கொண்டபிறகும் இந்தத் திரை இயக்கங்கள்,  மற்றும் உதவிகள் ரேவிடமிருந்து  இறுதிவரை நீடித்தன.

சமூக ரீதியாக: காலனியத்தையும்  ‘இந்திய இந்துமதவெறித் தேசியத்தை’ யும் நிமாய்தா வெறுத்தார், மதச்சார்பின்மை அவரது பார்வையின் அடிவேர். அதுவே ‘சின்னமூல்’ தொடங்கி  ‘சூறாவளி’ வரை மாறாமல் தொடர்ந்தது.

கல்கத்தா  விளைச்சலாக , 50 – 51 -ல-‘சின்னமூல்’,  பிரிட்டிஷாரின் வங்காளப் பிரிவினையால் அவதியுற்று, அப்போதைய கிழக்குவங்காளம் — இன்றைய பங்களாதேஷிலிருந்து  வேர்பிடுங்கி வீசியெறியப்பட்டு   அகதிகளாய்  ஓடிவந்த நிராதரவான  மக்களின் அவல வாழ்க்கை பற்றியது.   ‘சின்னமூலி’ ன் படநாயகர்கள் இவர்களே.  இப்படம் இந்திய யதார்த்தப் படங்களின் ஆரம்பம் என்றார்  ரே. சென்னை விளைச்சலாக, ‘பாதை தெரியுது பார்’ மற்றும்  ‘சூறாவளி’  ‘நீர்க்குமிழி’ படங்களில் ஒளிப்பதிவாளராகவும்,   ‘உன்னைப்போல் ஒருவன்’  படத்தில் ஒளிப்பதிவு ஆலோசகராகவும் , கன்னட ‘ஹம்ஸ கீதே’ போன்ற  ஏராளமான தமிழ், கன்னடப் படங்களுக்கும் அவர் ஒளிப்பதிவாளராக வேலை செய்தார் — அதில் ஒப்பனை, நவீனகால ஒளியமைப்பு, காட்சி அமைப்புக்கள், நடிப்புவரை தாக்கம் கொண்டுவந்தார். உலகப்பட ரசனை, விவாதங்கள் அவருக்கு உதவியாக ஒத்துழைத்தன.

சோவியத் ரஷ்யா, மக்கள்சீனம் இரண்டின் மீதும் அவருக்கு அளவற்ற பற்று, அது சோசலிசத்தின்மீதான ஆழ்ந்த பற்று. அவரது துறை சார்ந்தும் கம்யூனிசம் சார்ந்தும் பல ஆயிரம் பக்கங்கள் குறிப்பு தொகுத்திருந்தார். பின்னாளில் அவர் சீனாவுக்கு ஆதரவாக  இருந்தார்  ;  இந்தோ – சீன நட்புறவுக் கழகம்,  தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராகவும்  பணியாற்றினார். அவரது பெண்பிள்ளைகளோடு சேர்ந்து மரக்கிழங்கு மாவில் தயாரித்த கூழை வைத்து ஓவியங்கள் தீட்டி காட்சிகள் நடத்தினார்.

ஐந்தடிக்கும் குறைவான உயரம். கட்டுமஸ்தான உடல்வாகு, முறுக்கிவிட்ட மீசை. உள்ளுக்குள்ளே  ஏராளமான பலதுறை சார்ந்த பலரகத்திறமைகள்.  அவரை ஏராளமான தடைகள் மறித்தன. அவர் மனைவி  “பிறருக்காக நேரம் ஒதுக்கியதால்,குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை.அதற்காக அக்கறைப்படவுமில்லை.” என்ற ஒரே காரணம் சொல்லி மணவிலக்கு பெற்றுச் சென்றுவிட்டார்.  கழுத்தறுக்கும் போட்டி, ஊர்சுற்றி காமெரா ஷூட் செய்யும் வேலை என்று  கூட அவர் மனைவி புரிந்துகொள்ளவில்லை! என்றால்  யார் என்ன செய்யமுடியும்? இந்த நிலையிலும் எல்லாப் பிரச்சினைகளையும் அவர் தாக்குப்பிடித்தார்.

‘நிமாய்தா ‘ என்று  ரசியாவின் புடோவ்கின் முதல், உலக சினிமா நண்பர்கள் அனைவரும் அன்போடு  அழைத்த நிமாய் கோஷ்  பற்றிய   நூலை சுனிபா பாசு ( 1948 – 2021 ) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பிறப்பால்  வங்காளியாகவும் வாழ்க்கையின் இறுதிவரை நிமாய்தா போலவே  தமிழகத்தை இரண்டாம் தாயகமாகவும் கொண்டவர் சுனிபா. இவர் சிறுகதை எழுத்தாளர், நாடக இயக்குனர், ஆவணப்பட ஆலோசகர் – உதவியாளர். நிமாய்தா பற்றிய வாழ்க்கை அனுபவங்களைக் குழைத்து  உருவாக்கினார் ; நூலின் தமிழாக்கத்தை எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான  அம்ஷன்குமார் மொழியாக்கம் செய்துள்ளார்.

அழகான , சரளமான  நடை; தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவசியம் கற்றறிய வேண்டிய  வாழ்க்கைப்பாடம்.

1982  இந்தியத் திரைப்பட சம்மேளனம் கொல்கத்தாவில் நடத்திய விழாவில்  நிமாய்கோஷிற்கு , சத்யஜித்ரேயும் மிருணாள் சென்னும் இணைந்து அளித்த வாழ்த்திலிருந்து இரு வரிகள்,  உங்களுக்காக :

        “உங்களை ஒரு போர்வீரர் எனக் கூறுவோம்.
உங்களால் ஒழுக்கமும் கடமையுணர்வும்
பொறுப்பும் ஒருங்கிணைந்து  திரைப்படம்
இன்றைய கட்டுப்பாட்டினை அடைந்துள்ளது.
ஆதலால்தான் உங்களை நாங்கள் வெகுவாக
மதிக்கிறோம்…….”            –

நூலிலிருந்து…  பக். 159

நூல் :  “நிமாய் கோஷ், புதுநெறி காட்டிய திரைக்கலைஞர்.

ஆங்கில மூலம் : சுனிபா பாசு, எழுத்தாளர்.
தமிழாக்கம் : அம்ஷன் குமார், எழுத்தாளர்.
பதிப்பகம் : போதிவனம்.  நூல் விலை : ரூ. 190
பக்கங்கள் : 164

சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்.

நூல் அறிமுகம் : பீட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here