ஒடிசா ரயில் விபத்தில் மோடி அரசு தனது தோல்வியை மறைக்க RSS-BJP சங்பரிவார் கும்பலை கொண்டு ரயில் விபத்தை சதியாக மாற்ற திட்டமிடுகிறது. அது மட்டுமில்லாமல் இதனை மதகலவரமாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் இது பெரும் ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. இரயில்வே துறைக்கு ஒதுக்கிய நிதியை சரியாக பயன்படுத்தியிருந்தால், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருந்தால் இது போன்ற விபத்துகளை தடுத்திருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து. இது முழுக்க அரசின் அலட்சியத்தால் நடந்த விபத்தே.

இதனை மூடி மறைக்க, மக்களை திசை திருப்ப பாசிச கும்பலால்  சங்கிகளை ஏவி விட்டு வதந்திகளை பரப்புவதன் மூலம் மதகலவரத்தை உண்டாக்க முயற்சித்து அம்பலப்பட்டு போயுள்ளது சங்பரிவார் கும்பல்.

விபத்து நடந்த இடம் அருகே மசூதி?!

இது தான் முதல் வதந்தி.The Random Indian என்ற டிவிட்டர் கணக்கில் இந்த ரயில் விபத்தானது வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தின் அருகே மசூதி உள்ளதை பாருங்கள் என்று போஸ்ட் செய்துள்ளனர். இந்த போஸ்டை லட்ச கணக்கான மக்கள் பார்த்துள்ளனர், பகிர்ந்தும் உள்ளனர். விவரம் தெரியாத மக்களுக்கு இஸ்லாமியர்களின் சதிவேலை என்று ஒரு கருத்தை உருவாக்கியிருக்கும் இந்த பதிவு. சங்பரிவார் கும்பலின் நோக்கமும் அது தான்.

ரயில் விபத்தும் சங்கிகளின் வதந்தியும்

இது பொய் செய்தியாக இருந்தால் டிவிட்டர் ப்ளூடிக் பதிவராக இருப்பதால் பதிவிட்ட உடனேயே பலர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் பேக்ட் செக் செய்யும் பிரபல நியூஸ் சேனலான Alt News நிறுவனத்தின் சுபைர் இதனை பகிர்ந்து அருகில் இருந்தது மசூதி கிடையாது என்றும் இஸ்கான் டெம்பிள் என்றும் வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு  புகைப்படத்தை வெட்டி, ஒட்டி பரப்பி வருகின்றனர் என்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

இது தொடர்பாக வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல்துறை அறிவித்துள்ளது. ஒடிசா போலீஸார் போட்டுள்ள போஸ்டில் பாலசோரில் நடந்த மோசமான ரயில் விபத்தை சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள்(சங்கிகள்) மதக்கலவரமாக மாற்ற முயல்கின்றனர் என்று எச்சரித்துள்ளது ஒடிசா காவல்துறை எச்சரித்துள்ளது.

ஸ்டேசன் மாஸ்டர் முஸ்லீமா?!

தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளும் வதந்தி பரப்புவதில் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்க வேண்டாமா? கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் செந்தில்குமார் என்ற சங்கியை தக்கலை போலீசார் கைது செய்துள்ளனர்.

வழக்கறிஞர் செந்தில்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசா ரயில்விபத்து தொடர்பான  பதிவு ஒன்றை  போட்டுள்ளார். “இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டோரை கொன்றது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தது அது நடந்த ரயில்நிலையத்தின் ஸ்டேசன் மாஸ்டர் பெயர் ‘முகம்மது ஹரீப் அகமது’ இது குறித்து விசாரிக்க” என்று பதிவிட்டிருந்தார்.

தினேஷ்குமார் என்பவர் கொடுத்த மனுவின் அடிப்படையில் போலீசார் குற்ற எண் 283/2023 u/s, 153, 153A(1) (a), 505(1)(b), 505(2) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்ட பிறகு தான் போட்ட பதிவு தவறானது என  மோடியின் விஸ்வகுரு சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்டார். இதனை தொடார்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் 2014 ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு முன்னர் மோடியின் குஜராத் மாடல் என இல்லாத ஒன்றை போட்டோஷாப் செய்து குஜராத்தை மிகைப்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பியது. ஆட்சியை பிடிப்பதற்கு அவர்கள் பரப்பிய பொய்யும், அதனால் ஏற்பட்ட கலவரங்களுமே முக்கிய காரணம்.

பொய்யை பரப்பவே ஐடி விங்!

பாஜகவின் ஐடி விங் இதனை சிறப்பாக செய்து வருகிறது. இவர்களின் முழுநேர வேலையே பொய்யை பரப்புவது தான். கடந்த வருடம் கூட தஞ்சை மாணவி லாவண்யா மரணத்தை மதமாற்ற காரணங்களால் தான் நிகழ்ந்தது என பொய்யை பரப்பி கலவரம் நடத்த முயன்ற அண்ணாமலை கும்பல் மக்களிடம் அம்பலமாகி போனது. ஊட்டியில் முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தை கூட சதியாக மாற்ற முயன்று தோற்றுப் போனது சங்பரிவார் கும்பல். இப்படி பாஜகவின் கலவர புத்தியை பற்றி பேசிக் கொண்டே போகலாம்.

ஒருவேளை அவர்கள் பரப்பிய வதந்தியை நம்பி கலவரம் ஏற்பட்டிருந்தால் இழப்பு பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும். அதனை 2024 தேர்தலுக்கு பாஜக பயன்படுத்தியிருக்கும். பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் செய்ய துணிகிறது. மக்களை பற்றியெல்லாம் இவர்களுக்கு துளியும் கவலையில்லை. ஆனால் உழைக்கும் மக்களாகிய நாம் அப்படி விட்டுவிட முடியாது. இந்த மனித குல விரோதிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here