சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலசந்தர் தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவராக இருந்து வந்தார். சென்னை சிந்தாதிரிபேட்டையில் மர்ம கும்பலால் 24.05.2022 அன்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என சேலம் எடப்பாடியில் பதுங்கியிருந்த ரவுடி பிரதீப் உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளாதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா கொலை நடந்த அன்று, மத மோதலை உருவாக்கும் விதமாக டிவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாலசந்தர் பாஜகவுக்கு வருவதற்கு முன்னால் இந்து முன்னணியில் இருந்துள்ளார். மதமோதல்களை உருவாக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை வாரி அணைத்துக் கொண்டது தமிழக பாஜக. தமிழ்நாட்டின் பிரபல ரவுடிகள் அடைக்கலம் தேடும் இடம் கமலாலயம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்து முன்னணியில் செயல்பட்ட காலத்தில் மாட்டின் தலையை இந்து முன்னணி அலுவலகத்தின் வாசலில் வைத்துவிட்டு இதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என மதக்கலவரம் உருவாக்க முயன்று காவல்துறையில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

பாலசந்தர் இதுமட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.உள்ளூர் ரவுடிகளிடமும் அடிக்கடி மோதல் இருந்துள்ளது. போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்டு நாடகமாடியவர். பல வழக்குகளும் பாலச்சந்தர் மீது உள்ளன. பாஜகவில் இணைந்த பிறகு இந்த வழக்குகள் காணாமல் போனது வேறு விசயம்.

ஆனால் எப்படா தமிழகத்தில் மதகலவரம் உருவாக்கலாம் என காத்திருக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்கி கும்பல் பாலச்சந்தர் கொலையை மத மோதல்கள் ஆக மாற்ற முனைகிறது. பாஜகவின் எச் ராஜா ட்விட்டரில் போட்ட பதிவு பின்வருமாறு; “சென்னை பாஜக பட்டியல் இன தலைவர் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் இன்று மதவெறி சமூக விரோதிகளின் பிடியில்” இந்தப்பதிவு அப்பட்டமாக மத வெறியை உருவாக்கும் விதமாகவும் பதியப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால் காவல்துறையால் குறைந்த பட்ச நடவடிக்கை கூட இல்லை.

கடந்த காலங்களிலும் கூட ரியல் எஸ்டேட் ரவுடிகளின் பகை காரணமான கொலைகளை மத மோதல்களை உருவாக்க முயன்றது சங்கி கும்பல். இந்து முன்னணியைச் சேர்ந்த கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட் ரவுடி சசிகுமார் கொலையை மத மோதல் ஆக மாற்ற முயன்று தோற்றுப் போனது. ரவுடி சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் வெளியூரில் இருந்து குண்டர்களை வரவழைத்து இஸ்லாமியர்களின் கடைகளை சூறையாடியதையும், பிரியாணி அண்டாக்களை திருடியதையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். இதேபோல் கலவரங்களை தூண்டும் விதமாக செயல்பட்ட சங்கி கும்பலுக்கு பல உதாரணங்கள் உண்டு.

பாலச்சந்தரின் கொலையில் பிரதீப், கலைவாணன் உள்ளிட்ட சில ரவுடிகளே காரணம் என அவரது உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். காவல்துறையும் இவர்களை கைது செய்துள்ளது. ஆனால் எச்.ராஜாவின் பதிவு மத மோதலை உருவாக்கும் விதமாக உள்ளது. காவல்துறை இந்த பதிவு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மாமூல் வசூலிப்பது என பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் தான் பாஜகவில் உள்ளார்கள். தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு போட்டுவிட்டு சதியை இஸ்லாமியர்களின் மீது போடுவதன் மூலம் என பாஜகவினர் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முனைகிறார்கள். நாம் இந்து – முஸ்லிம் என்ற மத அடையாளங்களை கடந்து காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் ஒன்றிணைவோம். மதவெறி பாசிஸ்டுகளையும் அவர்களது சதிகளையும் முறியடிப்போம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here