நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் வெவ்வேறு நீதிபதிகள், ஒரே மாதிரியான பிரச்சனையை மாறுபட்ட வகையில் அணுகுவதால் தீர்ப்புகளும் வெவ்வேறு மாதிரியாக வருகின்றன. நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நியாயமான முறையில் விசாரணைகள் நடைபெற்று நீதி வழங்கப் படுவதில்லை.

மாறாக நீதிபதிகளின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்பவும், குற்றம் சாட்டப்பட்டவரின் தன்மைக்கு தகுந்தவாறும், அரசின் அழுத்தத்துக்கு ஆட்பட்டும் நீதிக்கு பதிலாக அநீதியான தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன. ஒன்றிய அரசுக்கு ஆகாதவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது என்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. 

ஜாமீனுக்கு விதிக்கப்படும் விசித்திரமான நிபந்தனை!

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விசாரித்த ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கிய போது, அவர் தனது இருப்பிடத்தை உறுதி செய்ய கூகுள் மேப்பை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிக்கு அவ்வப்போது அனுப்ப வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் ஜூலை 8 – ம் தேதி நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு, இதுபோன்று நிபந்தனை விதிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவு வழங்கிய தனி மனித உரிமையை மீறுவதாகக் கூறி இந்த நிபந்தனையை ரத்து செய்தது. 

இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஜாமீன் நிபந்தனை குறித்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே, வேறு இரண்டு அமர்வுகள் இதே போன்ற ஜாமீன் நிபந்தனையை விதித்தன என்பதுதான். ஜாமீன் வழங்குவதில் ஒரு சீரான நடைமுறையை கடைப்பிடிக்காமல் அது தனிப்பட்ட நீதிபதிகளின் விருப்பத்தை சார்ந்ததாக மாறி உள்ளது. 

குழப்பத்திலும், அழுத்தத்திலும் ஆழ்ந்துள்ள நீதித்துறை!

“ஜாமீன் என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு” என்ற குற்றவியல் சட்டத்தின் விதிமுறையை உச்ச நீதிமன்றம் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால்  நீதித்துறையானது ஜாமீன் விஷயத்தில் சீரற்ற மற்றும் தெளிவற்ற வகையில் தீர்ப்பு வழங்குவதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 

சில வழக்குகளில் ஜாமீன் வழங்கும் போது, அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேவையற்ற வகையில் காவலில் வைப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் செயல்படுகிறது. ஆனால் வேறு சில வழக்குகளில் எச்சரிக்கையான அணுகுமுறையோடு, விசாரணைக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சிகளை கலைப்பார் என்றும் காரணங்களைக் கூறி ஜாமீன் தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு  ஜூன் 28 அன்றுதான்  ஜாமீன் வழங்கப்பட்டது. மேற்கண்ட இரு முதல்வர்களையும் பண மோசடி குற்றச்சாட்டில் PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை (ED) கைது செய்திருந்தது. இதே சட்டப் பிரிவில் கைதாகி நீண்ட நாட்களாக சிறையில் உள்ள டெல்லியின் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பிணை வழங்க மறுத்து வருகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)  சட்டம் (UAPA) மற்றும் PMLA சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஜாமீன் வழங்கும் விசயத்தில் நீதிமன்றத்தில் குழப்பம் நிலவுகிறது. மிகக் கொடுமையான இந்தச் சட்டத்தின் கீழ் ஜாமீன் பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் இந்தப் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு எதிராக வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்றும், தான் ஒரு நிரபராதி என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரத்தைத் திரட்டி நிரூபிக்கத் தேவையில்லை. குற்றவியல் சட்ட நடைமுறைக்கு நேர் எதிராக உள்ளது இந்த சட்டப்பிரிவு. 

இந்த வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகள் முரண்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக இப்படியான தீர்ப்புகள் வரும் காரணத்தால், நடைமுறையில் ஜாமீனுக்கான தரநிலை என்ன என்பது இன்னும் தெளிவாக்கப் படவில்லை. 2019 ல் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, UAPA வழக்கில் நீதிமன்றம் ஆதாரத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பின் மூலம் ஜாமீன் வழங்குவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு கூட இல்லை என்பதை உறுதி செய்தனர். 

ஆனால் அதன் பிறகு 2021 மற்றும் 2023 – ல் இதே போன்ற UAPA வழக்கில், வேறு இரு அமர்வுகள் மேற்கண்ட தீர்ப்பை நிராகரித்தன. எந்தப்பிரிவில் வழக்கு இருந்தாலும் ஒருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் எனக் கூறினர். இது தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையோடு, தனிநபர் சுதந்திரம் குறித்தான கவலையையும் சேர்த்து பரிசீலிக்கும் வகையில் அமைந்தது. 

சட்டத்திற்கு முன் அனைவரும் சமமா?

கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வு இதே போன்ற UAPA வழக்கு ஒன்றில், சிறைச்சாலை என்பது விதி; ஜாமீன் என்பது விதிவிலக்கு என வழக்கத்துக்கு மாறாக விளக்கம் அளித்தது.  பீமா கொரேகான் வழக்கில், தலித் செயற்பாட்டாளர் மகேஷ் ராவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை NIA வின் மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 16 சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களில் ராவுத்தும் ஒருவர். UAPA – வின் கீழ் 2018ல் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளாக சிறையில் உள்ள அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டில் மேலோட்டமாக கூட உண்மை என்று நம்புவதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை என்று கூறியது. 

ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் அந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதன் பிறகு ஒன்பது மாதங்கள் ஆகியும் உச்ச நீதிமன்றம் இன்னும் இந்த வழக்கை விசாரிக்காமல் பலமுறை ஒத்தி வைக்கிறது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிதாக ஜாமீன் கிடைத்த போதும் உச்ச நீதிமன்றத்தின் அராஜகமான தாமதத்தால் ராவத் இன்னும் சிறையில் வாடுகிறார். 

ஆனால் இதற்கு நேர் மாறாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி 2020 நவம்பரில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஒன்றில் மகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரது ஜாமீன் மனு அவசர கதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப் பட்டது.

படிக்க: கொலையாளிகள் விடுதலை! நிரபராதிகள் சிறைக்குள்! இதுதான் “இராம ராஜ்ஜியம்”!

நீதிமன்றம் தனது தீர்ப்பில் அரசியலமைப்பின் பிரிவு 21 – ன் கீழ் தனிநபர் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை கோடிட்டு காட்டியது. ஜாமீன் என்பது விதியாக இருக்க வேண்டும் விதிவிலக்கல்ல என்றும், குற்றவியல் சட்டங்கள் துன்புறுத்தலுக்கான கருவியாக பயன்படுத்தாமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இந்த வியாக்கியானம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. 

2020-ல் டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் உமர் காலித் 14 முறை ஜாமீனுக்காக முறையிட்ட போதும், அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து வருகிறது. தொடர்ந்து சிறையில் வாடும் பல அரசியல் கைதிகளில் உமர் காலித்தும் ஒருவர். கோஸ்வாமி என்ற இந்துத்துவ நச்சுக் கிருமிக்காக துடித்த உச்ச நீதிமன்றம், ராவுத்துக்காகவோ, காலித்துக்காகவோ துடிப்பதில்லையே. ஆக சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று பீற்றிக்கொள்வது கேலிக்கூத்தாகத்தானே இருக்கிறது.

சட்டக் கமிஷனின் பரிந்துரைகள்! 

இந்திய சட்ட ஆணையம் 2017 ஆம் ஆண்டு தனது அறிக்கையில், ஜாமீன் வழங்குவதில் உள்ள பல்வேறு சவால்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியது. ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோல்கள் மற்றும் அதன் செயல்முறையை  ஒழுங்குபடுத்த விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை நிறுவும் வகையிலும், நீதித்துறையின் தன் விருப்பத்திற்கு ஏற்ப இயங்கும் தன்மையைக் குறைத்து அதில் ஒரு நிலைத்தன்மையை, ஒழுங்கை உறுதிப்படுத்தும் விதமாகவும் சில ஆலோசனைகளை முன் வைத்தது. 

ஒரு சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தும் முன் தடுப்பு காவலுக்கு மாற்றாக வீட்டு காவலில் வைத்து மின்னணு கண்காணிப்பு செய்வது போன்ற ஆலோசனைகளை வழங்கியது. ஆனால் இந்தப் பரிந்துரைகள் எதுவும் பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படவே இல்லை. ஜாமீன் வழங்கும் விசயத்தில் உச்சநீதிமன்றத்தின் தவறான, பாரபட்சமான அணுகுமுறையின் விளைவாக, கீழமை நீதிமன்றங்களும் அதே போக்கையே பின்பற்றுகின்றன. 

படிக்க: 

♦ இனியாவது மக்கள் பக்கம் நிற்குமா இந்திய நீதித்துறை?

♦ ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!

டெல்லி நீதிமன்றங்களின் ஜாமீன் குறித்தான உத்தரவுகளை ஆய்வு செய்த சட்ட வல்லுனர்கள் குழுவானது, பல்வேறு முரண்பாடுகளையும், நியாயமற்ற தீர்ப்புகளையும் கண்டறிந்தது. 2017 மற்றும் 2019 க்கு இடையில் நடந்த திருட்டு மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் ஜாமீன் மனுக்கள் மீது நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பளித்தன என்பதைப் பகுப்பாய்வு செய்ததில், ஒவ்வொரு வழக்கின் தீர்ப்பிலும் ஒரு சீரான தன்மை இல்லாததைக் குழு கண்டறிந்தது. 

இதற்கான பொறுப்பை அந்தத் துறை அமைச்சர் ஏற்க வேண்டும் என்றும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளிடம் சரியான புரிதலுடன் கூடிய ஒத்திசைவு தேவை என்றும் சுட்டிக் காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகள், சாமானிய மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 

இப்போது மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாசிச பாஜக அரசு, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனக்கு ஆதரவான இந்துத்துவ காவி சிந்தனை கொண்ட நபர்களைப் புகுத்தி வருகிறது. ஆட்சி அதிகாரத்தை எதிர்காலத்தில் இழந்தாலும் கூட, தமது சித்தாந்தம்தான் நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற நீண்ட கால நோக்கில் இதை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்த அபாயத்தை முறியடிக்க நாம் விழிப்புடன், போர்க் குணத்துடன் செயலாற்ற வேண்டியுள்ளது.

  • குரு

மூலம்: https://scroll.in/article/1070530/how-the-supreme-court-speaks-in-contradictory-voices-on-bail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here