டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையை மக்கள் உருவாக்கி விட்டனர். தேர்தலில் பல்வேறு முறைகேடுகளையும், எதிர்க்கட்சிகள் மீது பலவாறான ஒடுக்கு முறைகளையும், தகிடுதத்தங்களையும் செய்ததால்தான் அந்த கும்பலால் மீண்டும் கூட்டணி அரசாவது அமைக்க முடிந்துள்ளது.

அரசியலமைப்பை மாற்றவும், ராம ராஜ்ஜியத்தை நிறுவவும் முயன்ற ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் கனவில் மண்ணள்ளிப் போட்டு தமது கடமையை மக்கள் நிறைவேற்றி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சோரம் போன நீதித்துறை இனியாவது தனது கடமையை சரிவர செய்யுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து அதிகாரம் புரிந்த பாஜக, இப்போது கூட்டணி அரசாக அமைந்துள்ள நிலையில், தான் விரும்பியபடி அரசியலமைப்பை திருத்த முடியாது. மேலும் மதச்சார்பற்ற நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றவும் முடியாது. 

மோடி கும்பலை கைவிட்ட ராமன்!

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, “ராம் என்பது  இந்தியாவைப் பற்றிய எனது எண்ணம்” என்றார். இவரது இந்த கொடுங்கனவை மக்கள் சிதைத்து விட்டனர்.  ராமனின் அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியின் பாஜக வேட்பாளரான லல்லு சிங், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க தனது கட்சிக்கு 400 இடங்கள் தேவை எனப் பேசினார். ஆனால் இறுதியில் அவரையும் மக்கள் தோற்கடித்து விட்டனர். 

தற்போதைய கூட்டணி அரசு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு பொது வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டப்பிரிவு 16 – ஐ நீக்குவதன் மூலம் அரசியலமைப்பை திருத்த முடியாது. இந்திய மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தங்களது வாக்குகளை பயன்படுத்தி உள்ளனர். நாம் மதச்சார்பற்ற நாடாக தொடர்வோமா அல்லது சனாதன தர்மத்தால் ஆளப்படும் தேசமாக மாறுவோமா என்பதே மக்கள் மனதில் முன்புபெரியக் கேள்வியாக இருந்தது. தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்பாஜக பின்னடைவை சந்தித்திருந்தாலும் நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்து கட்டமைப்பிலும் தன் கொடுங்கரங்களை நீட்டித்தே வைத்துள்ளது.

நீதித்துறையின் முன்னிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள்!

இந்திய அரசாங்கத்தில் பணியாற்றும் சட்டத்துறை அதிகாரிகள் புதிய அரசு அமையும் சூழலில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரம்பரியம் மற்றும் மரபு கூறுகிறது. ஆனால் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலோ, சொலிசிட்டர் ஜெனரலோ, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலோ ராஜினாமா செய்ய வில்லை. சமீப காலங்களில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் சட்டரீதியாக தன்னிச்சையான நிலைப்பாட்டை எடுக்காமல், அரசாங்கம் சொல்வதை -அவர்கள் விரும்புவதை – மட்டுமே பேசும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதையும் நாம் பார்த்தோம். 

இப்படியான பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பூர்வமான தன்மைகளையும் அதன் அடிப்படை அம்சங்களையும் மறுக்கும் நபர்களாக இருக்கக் கூடாது. இதே போல சமீப அண்டுகளில் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பெருமளவு குறைந்து போயுள்ளது. 

சிறையில் உள்ளவர்கள் பிணை மனு தாக்கல் செய்யும் நிலையில், ஒரு சில நீதிபதிகளிடம் விசாரணைக்கு செல்லும்போது தங்களது மனுவை வாபஸ் பெறுவதையும் பார்க்கிறோம். ஏனெனில் கண்டிப்பாக அந்த நீதிபதி பிணை வழங்க மாட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நிறுத்துவதில் நீதித்துறையின் இயலாமை பளிச்சென தெரிவதால், அதன் மீதான விமர்சனங்களும், மீம்ஸ்களும் கூட அதிகரித்த வண்ணம் உள்ளன. 

நீதித்துறையின் சுதந்திரம் மீட்டெடுக்கப்படும்போது தான் பெயரளவு ஜனநாயகம் கூட காப்பாற்றப்படும். உச்ச நீதிமன்றத்தில் 2  நீதிபதிகளுக்கான காலியிடம் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், மேலும் ஒரு நீதிபதி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். தலைமை நீதிபதி சந்திர சூட் வரும் நவம்பரில் ஓய்வு பெறுவதற்குள் இந்த மூன்று நீதிபதிகளின் நியமனங்களும் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படியே நியமிக்கப் பட்டாலும், அவர்கள் பேலா திரிவேதிகளாகவோ அல்லது விக்டோரியா கௌரிகளாகவோ இருக்கக்கூடாது என்பதே  நமது விருப்பம். 

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள சில முக்கிய வழக்குகளில் சிலவற்றை பார்ப்போம். வழிபாட்டுத் தலங்கள்(சிறப்பு விதிகள்) சட்டம் 1991 செல்லுபடியாகுமா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். நமது நாட்டின் மதச்சார்பின்மையை தக்க வைப்பதில் தொடர்புடையது என்பதால் இவ்வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அதாவது ஞானவாபி மசூதி மற்றும் கிருஷ்ணஜென்ம பூமி குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வழிபாட்டுத் தலங்கள் குறித்தான சட்டத்தின் செல்லுபடித் தன்மையை தீர்மானிக்கப் போகின்றன. 

மற்றொரு முக்கிய வழக்கு குடியுரிமைத் திருத்த சட்டம் (CAA) 2019 – ன் அமலாக்கம் குறித்தானது. புலம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் மதத்தின் அடிப்படையில் மட்டுமே குடியுரிமை வழங்க முடியுமா என்பதை இதன் தீர்ப்பு தீர்மானிக்கப் போகிறது. அடுத்து, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதில் தலைமை நீதிபதியை நீக்கிய ஜனநாயக விரோத சட்டத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் விசாரிக்கவேயில்லை. 

பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002 – ன் செல்லுபடியாகும் தன்மை மற்றும் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் வழங்கிய தீர்ப்பின் தன்மை குறித்தும் முடிவு வரவேண்டி உள்ளது. இவ் வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வு PMLA-வின் சர்ச்சைக்குரிய விதிகளை அங்கீகரித்து ஏற்றுள்ளது. வரும் நாட்களில் இவ்வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. 

எதிர்க்கட்சிகளை உடைத்து, அதன் சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அரசியல் ஆதாயங்களுக்காக PMLA வை ஆளும் பாசிச பாஜக அரசு எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தியது என்பதை நாம் பார்த்தோம். இந்த சட்டத்தில் சிக்கலான மாற்றங்களை அறிமுகப்படுத்தி 2017 ல் பண மசோதாவாக (Money bill) நிறைவேற்றப் பட்டதன் செல்லுபடித் தன்மையையும் உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வு விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. 

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மைக் கல்வி நிறுவனமா என்ற கேள்விக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பும் வரவுள்ளது. இது சிறுபான்மையினருக்கு அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவுமான உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு 30 தொடருமா என்பதை தீர்மானிக்கப் போகிறது. 

பாஜக வின் பாசிசப் போக்குக்கு நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுமா?

வரவிருக்கும் இந்த தீர்ப்புகள் அனைத்தும் அரசியல் அமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மக்களின் வாழும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் அமையுமா என்பதைப் பொருத்தே நீதித்துறையின் செயல்பாட்டை நாம் தீர்மானிக்க முடியும். 

பொதுவாக அரசுகள், அரசியல் ரீதியாகவோ அல்லது சட்டமன்ற, பாராளுமன்றத்தின் மூலமாகவோ நிறைவேற்ற முடியாத சிலவற்றை நீதிமன்றங்களின் மூலமாக சாதிக்க முயல்வதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் நீதித்துறையானது தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கும் என்றோ, எந்தப் பக்கம் சாயும் என்றோ தெரியவில்லை. 

பொதுத் தேர்தலுக்கு முன்பு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்(SCBA) தலைவர் தேர்தல் நடந்தது. அதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏற்கனவே இருந்த தலைவர் அரசுக்கு ஆதரவான போக்கை பச்சையாக வெளிப்படுத்தியதை நாம் பார்த்தோம். அந்த வகையில் இந்த தேர்தலின் வெற்றி ஆரோக்கியமானதாக அமைந்தது உண்மையில் நமக்கு மகிழ்ச்சிதான்.

படிக்க:

♦ உச்ச நீதிமன்றத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒரே நீதிபதிக்கு ஒதுக்கப்படுவதன் மர்மம் என்ன? 

♦ ஹிஜாப் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ் காவி கும்பல் பிடியில் நீதித்துறை!

2014 ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற பினாமிகள் மூலம் நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்வதும், தான் விரும்பிய நீதிபதிகளை நியமிப்பதும் என தனக்கான காரியங்களை செய்து முடிக்கும் உத்தியை ஆளும் பாஜக அரசு கடைபிடித்தது. நாட்டில் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தப்பட்ட சேதத்தை நீக்குவதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முயலும் என நம்புவோம். 

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் பாசிச பாஜக அரசின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, ஜனநாயக விரோதமான தீர்ப்புகளை வழங்கியதை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். இறுதியாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கும் பாசிச பாஜக அரசின் நோக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உச்ச நீதிமன்றம் செயல்படுமா என்பதே நம்முன் உள்ள முக்கியமான கேள்வி. 

அப்படி செயல்படாத சூழலில், அதற்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் போராட்டங்களை கட்டியமைப்பதே இதற்கான தீர்வாக அமைய முடியும்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here