கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே தீர்வு கல்வியை தனியார் கல்விக் கொள்ளையர்களிடமிருந்து விடுவித்து அரசு அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அமல்படுத்த துவங்கியுள்ள புதிய கல்விக் கொள்கை கல்வியை முழுக்கடை சரக்காக மாற்றுவதும், முன்னாள் சாராய வியாபாரிகள், கஞ்சா கடத்தல் பேர்வழிகள், மணல் கொள்ளையர்கள், அரசியலில் குதித்து திடீரென்று சொத்து குவித்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், சினிமா நடிகர்கள் இவர்கள் அனைவரும் தாங்கள் குறுக்கு வழியில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான வழிமுறையாக தேர்வு செய்து வைத்திருப்பது கல்வித் துறையை தான்.
இந்தக் கல்வித் துறையை அரசு கட்டுப்பாட்டிலிருந்து ஒழிப்பதற்கான முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் கல்வியை பாதுகாக்க வேண்டும், அதுதான் ‘சமூக நீதி’ என்று பேசுகின்ற திமுகவின் ஆட்சியிலும் கல்வித்துறை உரிய ஆசிரியர்கள் நியமனம் இன்றி தத்தளித்து வருகிறது.
எடுத்துக்காட்டாக ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை மாணவர்களை பொருத்தமான முறையில் உருவாக்குவதற்கு தேவையான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் செய்வது, தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தினாலும் உடனடியாக அதனுடைய முடிவினை வெளிப்படுத்தாமல் காலதாமதப்படுத்துவது போன்ற தவறுகள் தொடர்கின்றன.
போட்டித் தேர்வுகள் நடந்து முடிந்து அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது கல்வித்துறையில் உள்ள இடைத்தரகர்கள், அதிகார வர்க்கம் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் மிகப்பெரும் ஊழலுக்கு வழிவகுக்கிறது என்பது சொல்லாமலே அனைவராலும் புரிந்துக்ககொள்ள முடியும்.
தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதற்காக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறவில்லை.
எனவே, காலியாகவுள்ள 8 ஆயிரம் பணியிடங்களையும் தற்போது நடந்துள்ள போட்டித் தேர்வை கொண்டு நிரப்ப தொடக்க கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வெழுதியவர்கள் அனைவருமே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். காலியிடங்களை அதிகரித்தால் கூடுதல் ஆசிரியர்கள் பணிவாய்ப்பு பெறுவர்.
எனவே, அடுத்தடுத்து புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.
2023-ம் ஆண்டில், ஆசிரியர் பணியிட போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்தது. இதில், 15,149 காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் முழுமையான வேகத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
அரசு பள்ளி ஆசிரியர் பணி நிரந்தரமும், ஆசிரியர்கள் மனநிலையும்!
அதுபோலவே தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் (நிலை 1) பணியிடங்களையும் நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு சுமார் 2000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ஆள் தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாத நிலையில் 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மே மாதம் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும் ஆள் தேர்வு அறிவிக்கை தமிழக அரசினால் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், 4 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:”அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்”என்றும் முன் வைத்துள்ளார்..
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கல்வி துறையில் பாசிச பாஜக செய்து வருகின்ற மாற்றங்கள் மற்றும் எதிர் நடவடிக்கைகள் குறித்து அம்பலப்படுத்துகின்ற வகையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.,யான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், “’2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
இதே ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 1-8 வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கான மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டும்?
2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கையும், இவை நிரப்பாததற்கான காரணங்களை தெரிவிக்கவும்?” என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியை தவிர்க்க முடியாமல் இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறைத் இணை அமைச்சரான திருமதி அன்னபூர்ணா தேவி யாதவ் தெரிவித்துள்ள பதிலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
“2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 4000 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்படுகின்றனர் என்பது துவங்கி உயர் பல்கலைக்கழகங்கள் ஐந்தில் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது என்பது வரை கல்வித் துறையில் நடக்கின்ற தீவிரமான சீரழிவு பாதையை வெளிக்காட்டுகிறது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கி கிடக்கின்றன.
கல்வியை வைத்து பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றி உள்ள சூழலை முற்றிலுமாக புறக்கணித்து, கல்வியை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், அதற்கு பொருத்தமான கொள்கையை முன்வைத்து செயல்படுகின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பதும் உடனடி தேவையாக மாறியுள்ளது.
- முகம்மது அலி.