அஜித் பவார் ஊழல் கறைபடியாத உத்தமரானது எப்படி?
மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பதவியேற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அதில் 8 பேர் அமைச்சர் பதவியை பெற்றுள்ளனர். ஏற்கனவே சிவசேனா கட்சியை இரண்டாக பிளந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டு ஆட்சியமைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே அதற்கு பரிசாக மஹாராஷ்டிரா முதல்வர் பதவி பெற்றார். இந்நிலையில், தற்போது அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளந்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் சட்டவழிகளை பின்பற்றாமல் கைது செய்தது; 2015ல் அதிமுக ஆட்சியில் நடந்ததாக சொல்லப்படும் ஊழலுக்கு 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் சோதனை செய்தது என அமலாக்கத் துறையை ஒன்றிய பாஜக அரசு எதிர்கட்சிகளை ஒடுக்கும் கருவியாக பயன்படுகிறது என விமர்சித்தவர்களிடம் அதிமுக அடிமைகள், ஆர்.எஸ்.எஸ் சங்கிகள், ‘நடுநிலை’ பத்திரிகையாளர்கள் ஊழல் வாதிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா என சண்டமாருதம் செய்தனர். அவர்கள் இப்போது அஜித் பவாரை துணை முதல்வராக்கிய பாஜகவுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் துணை முதலமைச்சராக இருந்தவர். அந்த சமயத்தில் கூட்டுறவு சங்க வங்கிகள் மூலம் ரூ.25,000 கோடி அளவுக்கு முறைகேடாக கடன்கள் அளித்தார் என 2021 ஆம் ஆண்டு அமலாக்க துறை வழக்கு பதிந்தது. அதற்கு முன்னதாக மஹாராஷ்டிரா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை குறைந்த விலைக்கு விற்றதாகவும் வழக்கு இருந்தது.
இதையும் படியுங்கள்: சிவசேனா ஆட்சிக் கவிழ்ப்பு! குளு குளு ரெஸ்டாரண்ட் குடி, கும்மாளம்! சந்தி சிரிக்கும் இந்திய ஜனநாயகம்!
கடந்த 2019 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அஜித் பவார் திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்து துணை முதல்வரானார். 48 மணி நேரத்தில் அவர் மீது அப்போது இருந்த 70,000 கோடி ரூபாய் பாசன திட்ட ஊழல் வழக்குகளை மஹாராஷ்டிரா ஊழல் தடுப்பு பிரிவு ரத்து செய்தது. அப்போது அந்த வழக்கை பதிந்தது பாஜக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பவார் 80 மணி நேரங்கள் துணை முதல்வராக இருந்துவிட்டு பாஜக கூட்டணியில் இருந்து விலகி கொண்டார். மஹாராஷ்டிரா பாஜக ஆட்சி கவிழந்தது. அப்போது அதனை பாஜகவின் அதிகாரவெறியை அம்பலப்படுத்தும் “கூக்ளி” என்று சரத் பவார் ட்வீட் செய்திருந்தார்.
தற்போது மீண்டும் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த முறை கடந்த ஏப்ரல் மாதமே ரூ. 25,000 கோடி மதிப்பிலான ஊழல் வழக்கில் இருந்து அவர் அமலாக்க துறையால் விடுவிக்கப்பட்டார். அஜித் பவார் தூய, அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக மாறிவிட்டார். பாஜகவின் கூட்டணியில் துணை முதல்வராகிவிட்டார். ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பலின் ஊழல் ஒழிப்பு முகமூடி கிழிந்து தொங்குகிறது.
- திருமுருகன்