வாக்னர் குரூப் தனியார் இராணுவ நிறுவனம் (Private Military Company – Wagner Group) என்ற ரசியாவின் கூலிப்படை திடீரென்று அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ரோஸ்டோக் என்ற ரசிய நகரத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும், தலைநகர் மாஸ்கோ-வை நோக்கி நகரத்தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் பரபரப்பான பேசுபொருளானது. ரசிய இராணுவத்துக்கும், உக்ரேனிய இராணுவத்துக்கும் இடையேதான் போர் நடந்துகொண்டிருக்கிறது என்று உலகமே நினைத்திருந்த நிலையில், இப்போரில் ரசியாவின் சார்பாக இக்கூலிப்படை அமர்த்தப்பட்டு போர்முனையில் இவர்கள் சண்டையிட்டது இக்கிளர்ச்சியின்மூலம் அம்பலமாகியுள்ளது.
பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் வந்துவிட்டால் அந்தந்த நாட்டு அதிகாரப்பூர்வமான இராணுவங்கள் தான் மோதிக்கொள்ளும். ஆனால் அப்படி மோதிக்கொண்ட போதும் அந்நாட்டு இராணுவங்கள் சர்வதேச சட்ட திட்டங்களையும், போரின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் கடைபிடிக்கவேண்டும். கைதியாகப் பிடிக்கப்படும் எதிரி நாட்டு இராணுவத்தினரை எப்படி நடத்த வேண்டும், பொதுமக்களை எப்படி நடத்த வேண்டும், எங்கெல்லாம் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உண்டு. பெரும்பாலான நாடுகள் இவற்றையெல்லாம் மதிப்பதில்லை என்றபோதும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது இத்தகைய நெறிமுறைகள், சட்டத்திட்டங்கள், கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்ற முறையில்தான் விசாரணை நடக்கும். இதற்கு இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மன் நாஜி படையினருக்கு எதிராக நடைபெற்ற நூரன்பர்க் விசாரணை போன்று உதாரணங்கள் உள்ளன.
ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டு போர்முனைக்குச் சென்று போரிடும் கூலிப்படையினருக்கு இத்தகைய சட்ட திட்டங்கள் எதுவும் பொருந்தாது. அதனாலயே இப்படைகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு வேண்டிய ஆயுதங்களும் கொடுக்கப்படுகின்றன. இக்கூலிப்படைகளில் இருப்பவர்களில் பலரும் முறையான பயிற்சி பெற்றவர்களோ, நியாய உணர்வு கொண்டவர்களோ இல்லை. மாறாக, பெரும்பான்மையாக சிறைக்கைதிகளும், சமூகவிரோதிகளுமே உள்ளனர். ஆதலால் இவர்களிடம் சிக்கும் மக்களையும், இராணுவத்தினரையும் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றொழிக்கின்றனர்.
அமெரிக்காவால் ஈராக்கில் இறக்கிவிடப்பட்ட “பிளாக் வாட்டர்” (Blackwater) என்ற கூலிப்படை ஏராளமான அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றது. அதே போல உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியா, மொசாம்பிக் உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும் கூலிப்படையினரால் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எந்தவித சித்தாந்தப் பின்புலமும், அற உணர்ச்சியும், நெறிமுறைகளும் இல்லாத இக்கூட்டம் மக்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்துவர் என்பதற்கு உக்ரைன் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களே சாட்சி.

இவ்வாறு கூலிப்படையை அமர்த்தி மக்களை கொன்று குவிப்பது ஏதோ உக்ரேன், ஆப்ரிக்க நாடுகளில்தான் அதனால் நமக்கு பிரச்சினை இல்லை என்று கடந்து போக முடியாது. நம் நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார கும்பலால் பல்வேறு இடங்களில் நாள்தோறும் சாகா என்ற பெயரில் இளைஞர்களுக்கு மதவெறியூட்டி ஆயுதப் பயிற்சியும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்து மதவெறியூட்டி வளர்த்தெடுக்கப்பட்ட காலாட்படைகள் நாள்தோறும் வன்முறையில் இறங்கி இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வேட்டையாடி வருகின்றன. மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியினர்மீது தாக்குதல் தொடுத்துவருகின்றன. இந்திய இராணுவமும் காவிப்படையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுதவிர இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் அக்னிவீரர்கள் இந்து ராஷ்டிராவுக்கான கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் மூலம் மக்கள் கொன்றொழிக்கப்படுவார்கள் என்றால் மிகையாகாது.
இதையும் படியுங்கள்: இந்திய ராணுவம் இயங்குவது இந்து மத வெறிச் செயல் திட்டத்திலா?
உலக மக்களுக்கு எதிரான இத்தகைய கூலிப்படையினரை ஒழிக்க வேண்டுமானால் உலகளாவிய முதலாளித்துவதையும், முதலாளிகளின் இலாபவெறிக்காக போர்களை நடத்தும் முதலாளித்துவ அரசுகளையும் ஒழிக்கவேண்டும்! இந்தியாவில் இந்துத்துவ மதவெறி கும்பலை ஒழிக்க வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. உள்ளிட்ட பாசிச சக்திகளை ஒழிக்க வேண்டும்!
- ஜூலியஸ்