பாசிச மோடியின் துணையுடன்  ஊதிப்பெருகும் அதானி! அதானி பவர் வரலாறு – ஒரு விரிவான பார்வை (Adani Power History – How Adani Became a Power Producing Giant?)
2006-இல் குஜராத்தின் முதல்வராக இருந்த பாசிச மோடியின் நண்பரான அதானி மின்சக்தி உற்பத்தியில் (Power Generation) நுழைந்தார். 2009 ஜூலை-இல் முந்த்ரா (Mundra) தெர்மல் பவர் பிளாண்ட்-இன் முதல் 330 MW யூனிட் செயல்பாட்டுக்கு வந்தது

இந்தியாவை ‘ஒளிர செய்யும்’ எதிர்கால மின்சாரம் அதானி (Adani) மின்சாரம்!

2026-ல் அதானி ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரனாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தச் சூழலில் அதானியின் தோற்றம் வளர்ச்சி குறித்து குறுக்குவெட்டிலாவது நாம் பார்த்தாக வேண்டும். அதானி குழுமம் இந்தியாவின் மின்சக்தி துறையில் எப்படி ஒரு ஜாம்பவானாக (Power Producing Giant) உருவானது என்பதை புரிந்துகொள்வது நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. கார்ப்பரேட்-அரசு உறவுகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் செங்குத்து ஒருங்கிணைப்பு (Vertical Integration) ஆகியவை இதற்கு அடிப்படை. கீழே வரலாற்றை கால வரிசையில் சுருக்கமாக காண்போம்.

  1. தொடக்கம் (Founding – 1996)

அதானி பவர் லிமிடெட் 22 ஆகஸ்ட் 1996-இல் அகமதாபாத்தில் (குஜராத்) நிறுவப்பட்டது. கௌதம் அதானி தலைமையில் ஆரம்பத்தில் மின்சக்தி வர்த்தகம் (Power Trading) செய்யும் நிறுவனமாக தொடங்கியது. இது அதானி குழுமத்தின் (1988-இல் அதானி எக்ஸ்போர்ட்ஸ் என தொடங்கியது) ஒரு பகுதியாக இருந்தது. எந்த முதலாளியும் நாட்டு நலனுக்காக என்று மட்டும் எந்த தொழிலையும் தொடங்குவதில்லை. உண்மையில் கொள்ளை லாபத்தை ஈட்ட வேண்டும் என்றுதான் கம்பெனிகளை தொடங்கி நடத்துகின்றனர்.

  1. மின்சக்தி உற்பத்திக்கு மாற்றம் (Entry into Power Generation – 2006-2009)

2006-இல் குஜராத்தின் முதல்வராக இருந்த பாசிச மோடியின் நண்பரான அதானி மின்சக்தி உற்பத்தியில் (Power Generation) நுழைந்தார். 2009 ஜூலை-இல் முந்த்ரா (Mundra) தெர்மல் பவர் பிளாண்ட்-இன் முதல் 330 MW யூனிட் செயல்பாட்டுக்கு வந்தது. இது இந்தியாவின் மிகப் பெரிய ஒற்றை இட தெர்மல் பவர் திட்டமாக இருந்தது. 2009-இல் அடானி பவர் ஐபிஓ (IPO) வெளியிட்டது – 21 மடங்கு சப்ஸ்கிரைப் ஆனது. இது அதானி குழுமத்தின் பெரும் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது.

  1. வேகமான விரிவாக்கம் (Rapid Expansion – 2010-2014)
  • 2010: முந்த்ராவில் மேலும் 3 யூனிட்கள் (330 MW ஒவ்வொன்றும்) மற்றும் இந்தியாவின் முதல் சூப்பர்கிரிட்டிக்கல் 660 MW யூனிட் செயல்பாட்டுக்கு வந்தது. மொத்த திறன் 1,980 MW ஆனது.
  • 2011: மேலும் 660 MW யூனிட்கள் சேர்க்கப்பட்டு திறன் அதிகரித்தது.
  • 2012: முந்த்ரா பிளாண்ட் 4,620 MW திறனை எட்டியது – நண்பர் மோடியின் துணையுடன் அதானியின் உலகின் மிகப் பெரிய தனியார் தெர்மல் பவர் பிளாண்ட் (ஒற்றை இடத்தில்).
  • 2013: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (Renewable) நுழைந்தது – கச்சில் 40 MW சோலார் திட்டம்.
  • 2014: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் மின்சக்தி உற்பத்தியாளராக (Largest Private Power Producer) உருவானது. மொத்த திறன் 9,280 MW. திரோடா (மகாராஷ்டிரா), கவாய் (ராஜஸ்தான்) போன்ற பிளாண்ட்களும் சேர்க்கப்பட்டன. அதாவது அதானி குஜராத்தை கடந்தும் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்க ஆரம்பித்தார். மோடியும் வளர்ந்தார் குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தேசிய அரசியலில் பாராளுமன்றத்தை நோக்கி கவனத்தை குவித்தார். அதானியோ தேசங்கடந்த தரகு முதலாளியாக வளர காய்களை நகர்த்தினார்.

படிக்க: 

 அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!
 ’அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!’ தேசத்தின் முழக்கமாகட்டும்!

இந்த காலகட்டத்தில் சுரங்கங்கள் (Mines), துறைமுகங்கள் (Ports) உடன் இணைந்து செங்குத்து ஒருங்கிணைப்பு (Vertical Integration) செய்யப்பட்டது. உதாரணம்: இந்தோனேசியா Bunyu Mine (2008), ஆஸ்திரேலியா Carmichael Mine (பின்னர்) – இது நிலக்கரி சப்ளை சங்கிலியை கட்டுப்படுத்த உதவியது.

  1. மேலும் வளர்ச்சி மற்றும் கையகப்படுத்தல்கள் (Acquisitions & Further Growth – 2015 முதல்)

மோடி 2014ல் இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் அமர்ந்தார். அதானியின் வளர்ச்சியும் வேகம் பெற்றது.

  • உடுப்பி (கர்நாடகா), கொர்பா போன்ற பிளாண்ட்களை கையகப்படுத்தியது.
  • 2018-இல் GMR சட்டீஸ்கர் எனர்ஜி உள்ளிட்ட கையகப்படுத்தல்கள்.
  • தற்போது (2026) அடானி பவர் திறன் சுமார் 18.15 GW (18,150 MW) வரை உள்ளது. FY32-க்குள் 41.87 GW வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ₹2 லட்சம் கோடி முதலீடு (Capex) அறிவித்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலும் (Solar, Wind) வேகமாக வளர்ந்து வருகிறது. அடானி கிரீன் எனர்ஜி FY26-இல் 5 GW புதிய திறன் சேர்த்தது.
  1. அணு சக்தி துறையில் நுழைவு (Nuclear Entry – 2025-2026)

SHANTI Bill (Sustainable Harnessing and Advancement of Nuclear Technology for India) டிசம்பர் 2025-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தனியார் Adani நிறுவனங்களுக்கு அணு சக்தி உற்பத்தியை திறந்து விட்டது.  பிப்ரவரி 2026-இல் (சில நாட்களுக்குள்) Adani Atomic Energy Limited என்ற புதிய நிறுவனத்தை அதானி அறிவித்தார். இது திட்டமிட்ட கார்ப்பரேட்-அரசு ஒத்துழைப்பின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய ஒரு துறையை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத உற்பத்தியோடு தொடர்புடைய ஒரு துறையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விட்டு மோடி தனது கார்ப்பரேட் விசுவாசத்தை நிரூபித்தார்.

  1. SMR (Small Modular Reactor) based nuclear power plant:

Baba Atomic Research Centre (BARC) உதவியுடன், உத்தரபிரதேச அரசுடன் இணைந்து 8x 200 1.6 GW மின்னுற்பத்தி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. Adani Atomic Energy Ltd, Coastal-Maha Atomic Energy Ltd போன்ற நிறுவனங்களை இதற்காகவே Adani உருவாக்கி யுள்ளார். NTPC மட்டுமில்லாமல் National Power Corporation of India Limited ஆகியவற்றையும் Adani – க்கு தாரைவார்க்க பாஜக அரசு தீவிரமாக வேலை செய்துவருகிறது. இதன் மூலம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி, விநியோகம் உள்வட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தும் முற்றதிகாரம் கொண்டவராக அதானி மாறுவார். எதிர்கால இந்தியாவின் மின்சாரம் Adani மின்சாரமாக மாறும்.

  1.  Adani அசுர வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

தொழில்துறையில் ஜாம்பவானாக இருப்பவர் வங்கித் துறையின் ஜாம்பவானுடன் கைகோர்த்தால் நிதி மூலதனமாக – நிதி மூலதன அதிபர்களாக மற்றும் பெறுகின்றனர். இவர்களின் ஏக போக வலிமைக்கு முன்னால் பிற போட்டியாளர்கள் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. இவர்களுக்கு அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் உலகை வளைக்கும் வெறியுடன் முன்னேறுவார்கள். அதானி மோடியின் கூட்டும் இப்படிப்பட்டதுதான். அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொதுவில் கார்ப்பரேட்டின் நன்மைக்கானதாக, குறிப்பாக அதானியின் சாம்ராஜ்ய விரிவாக்கத்திற்கானதாக அமைந்தது.

  • அரசு கொள்கைகள்: “எளிதான வணிகம்”, உள்கட்டமைப்பு திட்டங்கள், சுற்றுச்சூழல் அனுமதிகள்.
  • ஒருங்கிணைப்பு: சுரங்கம் → துறைமுகம் → நிலக்கரி → மின் உற்பத்தி → விநியோகம் (Distribution) வரை முழு சங்கிலியை கட்டுப்படுத்துதல்.
  • பெரும் முதலீடுகள் மற்றும் உலக அளவிலான திட்டங்கள் (Mundra போன்றவை).
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கி மாற்றம் – ஆனால் தெர்மல் பவர் உள்ளிட்டவற்றில் இன்னும் முக்கிய பங்கு என விரிவடைந்தது.

அதானி பவர் இப்படி பல்வேறு முறைகேடுகளுடன் வளர்ந்தது என்பது தனியார் மூலதனத்தின், கார்ப்பரேட்டுகளின் வெற்றியல்ல – பொதுத் துறை நிறுவனங்களான NTPC, பி.ஹெச்.இ.எல். (BHEL) போன்றவற்றை கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கும் ஆட்சியாளர்களின் -அரசாங்கத்தின் தோல்வியே. TSGENCO, TANGEDCO, RVUNL, APGENCO KPCL, UPRVUNL, KSEB, OPGC, MPPGCL, GSECL, PSPC, MAHAGENCO போன்ற மாநில அரசுகளுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இது பாதிப்புகளை உருவாக்கும்.

படிக்க: லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற மோசடி மன்னன் அதானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அதானியே மின்சாரம் வழங்குவார். அது சேவையாக இருக்குமா அல்லது கார்ப்பரேட் கொள்ளை லாபமாக இருக்குமா என்பது நமக்கு தெரியும். அதன்  அறிகுறிகள் இன்றே தெரிகின்றன. அதாவது அதானியின் நலனுக்காகவே அரசின் பொதுத்துறைகளுக்கான முதலீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது போன்றவை அரைகுறையாகத்தான் முன்னெடுக்கப்படுகின்றன. சில தடுத்தும் நிறுத்தப்படுகின்றன.

FGD திட்டங்கள், திட்டமிட்டே உருவாக்கப்பட்டு 25,000- 35,000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டு Adani நிறுவனங்களுக்குக்காக நிறுத்தப்படுதல், NTPC-இன் மூலதன முதலீடு பாதிப்பு போன்ற அறிகுறிகள் எதிர்கால நாசத்தை முன்னறிவிக்கின்றன.

எதிர்காலத்தில் மின்சக்தி விநியோகத்திலும் அதானியின் நுழைவு இருக்கும்.  இவை உள்நாட்டு மின்சார விலையை உயர்த்தும். பாஜகவின் பாசிச அரசு நீடிக்கும் பட்சத்தில் அரசு மானியங்கள் தொடருமா என்பது சந்தேகமே. தேச சேவை என்ற கருத்து கேலிக்குரியதாக கைவிடப்பட்டு, நாட்டின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி என்ற பெயரால் அனைத்தும்  கார்ப்பரேட் கொள்ளை மற்றும் லாபத்துக்கானதாகவே மாறும்.

 மாநிலங்களின் சுயசார்பு மின் உற்பத்தியின் (NTPC, NPCIL, BHEL, NPGC, State Owned Power Generation) எதிர்காலம்:

அதானியின் ஆர்டர் புக் மூலம் 2 லட்சம் கோடி பெருமானமுள்ள பணி ஆணைகளை பெற்றுள்ள பெல் நிறுவனம் தற்போது சரிவிலிருந்து மீண்டு மீண்டும் ஒளிர தொடங்கி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்று பெருமிதப்பட ஒன்றும் இல்லை. அரசு மின்னுற்பத்தி நிறுவனங்களை விழுங்கி அல்லது அழித்து, மொத்தத்தையும் செரிக்க போகும் அதானியின் தயவில் பெல்லில் நடக்கும் உற்பத்தியை முழு மனதுடன் கொண்டாட முடியாது.

படிக்க: எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!

மின் உற்பத்தியை மொத்தமாக அதானிக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) மின் உற்பத்தி நிலையங்களை (பவர் பிளான்டுகளை) நசியச் செய்யும் வேலைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. அதற்கு நேர் எதிராக, மின் உற்பத்தியில் புதிதாக கால் பதித்து வளர்ந்து வரும் அதானி மொத்தத்தையும் விழுங்குவதற்கு ஏதுவாக தாராள சலுகைகளும், தளர்வுகளும் அதானிக்கு வாரி வழங்கவும் படுகின்றன. (இதுகுறித்து பின்னர் விரிவாகவும் பார்க்க உள்ளோம்)

NTPC பலவீனமடைந்தால் பெல்லுக்கான வழமையான ஆர்டர்களும் பாதிக்கப்படும். தேசம் கடந்த தரகு முதலாளியான அதானி BHEL-க்கு பணி ஆணைகளை வழங்கி இருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. BHEL நிறுவனத்தையே கபளீகரம் செய்யும் உள்நோக்கம் கொண்ட முடிவாக கூட இருக்கலாம். ஏனென்றால் பல நிறுவனங்களை கபளீகரம் செய்துத்தான் பகாசூர Adani வளர்ந்துள்ளார். மத்திய அரசும் பல அரசு நிதிநிறுவனங்களை தூண்டி Adani நிறுவனதில் முதலீடு செய்யவைத்துள்ளது. Adani மின்சாரம் பல பொதுத்துறைகளின் மறைவிலிருந்து – அழிவிலிருந்து உருவாக்குவதாகவே தோன்றுகிறது. இது குறித்து மேலும் விரிவாக  விளக்கவும் உள்ளோம்.

(தொடரும்…)

நவீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here