பாஜகவுக்குத் தாவிய ஆம் ஆத்மி எம்.பிக்கள்: புழுத்து நாறும் பாராளுமன்ற ஜனநாயகம்!

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அதிகார வர்க்க அமைப்புகள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு விட்டதால், அவற்றை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி பாஜக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசிச் சுண்டி இழுக்கிறார்கள். 'பாஜக' எனும் 'வாஷிங் மெஷினில்' இவர்கள் போடப்பட்டு 'தூய்மை'யாக்கப்பட்டு விடுகிறார்கள்.

1
கட்சித் தாவிய ஆம் ஆத்மி எம்.பிக்கள்.. பாஜக தலைவருடன்

பாராளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10-ஆக இருந்தது.
தற்போது அவர்களில் ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, அசோக் மிட்டல், சந்தீப் பதக் -ஆகிய 7 உறுப்பினர்களும்   ஆம் ஆத்மி கட்சிக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ‘யோக்கியகட்சி’-யான பாஜக-வில் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாஜகவிற்கு விலை போய் உள்ளனர் அல்லது அதிகார வர்க்க அமலாக்கத்துறை போன்ற பாஜக கைக்கூலி அமைப்புகளின் மிரட்டலுக்கு ஆட்பட்டிருக்கலாம். ஏனெனில், 2020-லேயே மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறையை பயன்படுத்தித்தான் திருணாமுல் காங்கிரசிலிருந்த ‘சுவேந்து அதிகாரி’-யை ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி இழுத்துப் போட்டுக் கொண்டது பாஜக.

மகாராட்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவரின் அண்ணன் மகன் அஜீத்பவார் மீது அமலாக்கத்துறை மூலமாக 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றம் சுமத்தி பின்னர் பாஜகவில் இழுத்துப் போட்டுக் கொண்டது
காவிக் கும்பல். உடனே துணை முதல்வர் பதவியும் அஜீத் பவாருக்கு வழங்கப்பட்டது.

இதேபோல ராஜஸ்தான், அஸ்ஸாம், குஜராத், ஹரியானா பீகார், உ.பி., ம.பி. ஒடிசா போன்ற மாநிலங்களில் இதே துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி காங்கிரஸ் இன்ன பிற கட்சிகளின் எம்எல்ஏக்கள் விலை போனார்கள். ஆட்சிகளும் மாற்றப்பட்டன.

இழிந்த வாஷிங் மெஷினும்- சோரம் போகும் பிழைப்புவாதிகளும்!

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அதிகார வர்க்க அமைப்புகள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு விட்டதால், அவற்றை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி பாஜக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசிச் சுண்டி இழுக்கிறார்கள். ‘பாஜக’ எனும் ‘வாஷிங் மெஷினில்’ இவர்கள் போடப்பட்டு ‘தூய்மை’யாக்கப்பட்டு விடுகிறார்கள். உடனே பதவிகளையும் பெற்று விடுகிறார்கள்.

2014-நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கூட்டணிஆட்சியில் நிலவிய பெரும் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு இந்தப் பாசிச (பெரும் ஊழல் பெருத்த) காவிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தில் ‘அரியணை’ ஏறுவதற்கு வித்திட்ட ‘அன்னா ஹசாரே’
என்ற கேடுகெட்ட கிழவன் தற்போது இருக்கின்ற இடமே தெரியவில்லை? அத்தருணத்தில் இவருக்கு வலது கரமாக நின்றவர் தான் முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது ஆம் ஆத்மி கட்சி ‘ஊழலுக்கு எதிரான கட்சி’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

படிக்க:

மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!

இதுதான் இன்றைய இந்தியா! பாஜகவை எதிர்த்தால் சிறை! ஆதரித்தால் விடுதலை! பாசிச பாஜகவின் வாஷிங் மெஷின் டெக்னிக்!

ஆனால், அக்கட்சியினரே இந்த அளவிற்கு சோரம் போகிறார்கள் என்றால் அவர்களிடம் படிந்துள்ள ஊழல் கறை எவ்வளவு இருக்கும் என்பதனை யூகிக்க முடியாதா என்ன? இது தவிர, தலைமையே எப்படிப்பட்ட நபர்களை தேர்வு செய்து மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்கி விடுகிறார்கள் பாருங்கள்!

பாஜகவிற்கு கட்சி மாறும் பல்வேறு தரப்பட்ட எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் தரம் அற்றவர்களாக – தகுதியற்றவர்களாக சோரம் போகிறார்கள். இப்படித்தான் பீகாரில் நிதீஷ் குமார், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு போன்ற பதவிப் பித்தர்கள் மக்கள் நலனை அடமானம் வைத்து பாஜக-விடம் சோரம் போனார்கள். தற்போது தமிழ்நாட்டில் ‘அமித் ஷா திமுக’- வாக மாறிவிட்ட எடப்பாடியும் அவ்வலையில் முழுமையாக விழக் காத்துக் கிடக்கிறார்.

புழுத்து நாறும் பாராளுமன்ற ஜனநாயகம்!

நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு- குறு தொழில் முனைவோர், வேலையில்லா இளைஞர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்…என சகல பகுதி உழைக்கும் மக்கள் பிரிவினரும் தத்தம் வாழ்வாதாரங்களை இழக்கும் சூழல் நிலவுகின்ற பொழுது இந்தப் போலி ஜனநாயக பாராளுமன்ற – சட்டமன்ற நிறுவனங்களின் மூலம் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ள முடியாத நிலையே நீடிக்கிறது.

மாறாக வாழ்வாதார கோரிக்கைகளுக்காக இப்பிரிவு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துணிகின்ற பொழுது ஆளும் வர்க்கத்தின் ‘அடியாள்’ கருவிகளான உண்மையான ‘அரசு’ – காக்கிச் சட்டை காலிப் படை அடித்து நொறுக்கி துவைக்கிறது! பல நேரங்களில் கொலைகளையும் செய்கிறது.

மக்களை உண்மையில் ஆளுகின்ற – மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத – மக்களுக்கு எவ்வகையிலும் கட்டுப்படாத – இந்த ‘அரசு’ செய்யும் மாபெரும் தவறுகளை மூடி மறைக்கவே மக்கள் பிரதிநிதித்துவ பாராளுமன்ற – சட்டமன்ற சபைகள் உதவுகின்றன. ஏன் அவை வெளிப்படையாக தெரியவில்லை என்றால், இரு பிரிவினரது நலன்களும் ஒன்றே என்பது மட்டுமல்ல; இவர்கள் அனைவருமே பெரு முதலாளி வர்க்க நலப் பாதுகாவலர்களே என்பதே இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சமாக உள்ளது.

மேலும், சட்டத்தை இயற்றும் அதிகாரங்களைக் கொண்டதாகவே மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்கள் நீடிக்கின்றன. அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தர அமைப்புகளான – அடக்குமுறை கருவிகளான அதிகார வர்க்கத்திடமே குவிந்து கிடக்கிறது.
இங்கே சட்டத்தை இயற்றவும் அமுல்படுத்தவுமமான ஒரே வகைப்பட்ட ஆட்சி அமைப்பு முறை நிலவவில்லை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஸ்தூலமான மக்கள் பிரச்சனைகள் – பேதங்கள் – வர்க்க முரண்கள், மக்களின் கண்ணுக்கு எட்டாத வகையில் மறைப்பு வேலைகளைச் செய்வதற்காகவே மதம், சாதி, ஆன்மீகம்,மொழி, இனம் – என வேறுபடுத்தி உழைக்கும் மக்களை அதில் இறுகக் கட்டிப்போட்டு மக்களை மடைமாற்றம் செய்கிறது பாசிசக் காவிக் கும்பல்.

இன்று ஹிட்லர் பாணியில் இதே நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி  ஆர் எஸ் எஸ் – பாஜக – காவிக் கூட்டத்தினரால் படுவேகத்தில் கார்ப்பரேட்- காவிப் பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்தப் பிரதான ஆபத்தான எதிரியை தேர்தலிலும் வீழ்த்தவும், கீழிருந்து ஒரு எழுச்சியின் மூலம் ஜனநாயகக் கூட்டரசை நிறுவிடவும் முனைகிறோம்!

நமது நீண்டகால நோக்கம் மார்க்சிய- லெனினிய கோட்பாட்டு வழிகாட்டுதல்களின்படி ‘அரசு’ மற்றும் ‘அரசாங்கம்’ மீதான நமது கூர்மையான பார்வையையும், செயற்பாடுகளையும் செலுத்தி புரட்சிகர சமூக மாற்றத்திற்கு மக்களைத் தயார்படுத்துதலிலேயே அடங்கிக் கிடக்கிறது. அதன்பால் நமது முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.

எழில்மாறன்

1 COMMENT

  1. ஆம் ஆத்(மி)மா சாந்தியடைய வாழ்த்துக்கள்!
    ஊழலுக்கு எதிரான கட்சி என்று மக்களிடம் அடையாளமான கார்ப்பரேட் கைக்கூலிகள் தான் இவர்கள்.
    இன்றைய சூழலில் பாஜக எந்தெந்த கட்சியில் ஊழல் கரையோடு திரிகிறார்களோ அவர்களை விரட்டி தன் பக்கம் சாய்த்து கொள்ள வேண்டும் என்பதைதான் தீவிரவாக செய்துவருகிறது.
    எனவே தேர்தல் கட்சியில் உள்ள அனைவருமே தேர்தல் கட்டமைப்புக்கு உள்ளாகவே எதையும் சரி செய்ய முடியாது அது முழுவதும் பாசிசமயமாக மாறி இருக்கிறது.
    மக்களுக்கான நேர்மையான கட்சி என்றால் கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான் எமது அமைப்பின் நீண்ட கால நோக்கம் புதிய ஜனநாயக புரட்சி என்பது தான் மக்களுக்கான முழுமையான விடுதலையை வழங்கும்.

    தற்போது பாசிஸ்டுகளை வீழ்த்த ஜனநாயக கூட்ட அரசு அமைக்க வேண்டும் என்கிறோம் இதை சாத்தியப்படுத்த வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையும் போராட்டத்தின் மூலமாக தான் தீர்வை உருவாக்க முடியும்.

    எனவே சட்ட ஒழுங்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எந்த கட்சியாலும் அதை சரி செய்ய முடியாது அதற்கான சர்வ யோக நிவாரணி எம்மை போன்ற இயக்கங்கள்தான் ஆகையால் இந்த இயக்கங்களோடு இணைந்து மக்கள் மாற்றத்திற்கு சமர் புரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here