மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! – 3

மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள்.

0
  1. ‘மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்!
  2. மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! – 2

தொடர்ச்சி…

மே தினம் உலக தினமாக மாறியது

சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகிறார். எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்து. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.”கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்த வாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்து போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவை பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.

1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’

        1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலை தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயாக்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தது. ஆயிரக்கணக்கானவர் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891-ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையொ ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டியது.

உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 –ம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ‘’நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…’’

உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1893 அகிலத்தின் மாநாடு ஜுரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

‘’உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’.

மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்த தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தாங்களை கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களை பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாத தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டது. 1914-ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாத தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.

1900-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம் மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.

மே தினம் குறித்து லெனின்

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்த போது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

‘’பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்டகார்கோவில் மே தினம்என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். ‘’இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பதுரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்துது வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.

மே தின அரசியல் முழக்கங்கள்

உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றி கடைசியாக பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பின்வருமாறு முடிகிறது.

ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அமைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.

மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளிவர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாக சொல்கிறது.

1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்க வயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின் போது ஆயிரக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாராட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905 நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளந்து வரும் ஒரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதை தெளிவாக காட்டுகிறது”.

தொடரும்…

நாளை

முதல் உலகப்போரின் போது மே தினம்

 

முந்தைய பதிவுகள்:

  1. ‘மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்!
  2. மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! – 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here