தொகுப்பு வீடுகளின் (Gated Community ) வாழ்க்கை

பெரிய பெரிய அபார்மெண்ட்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உலகத்தின் பெருநகர பகுதிகளில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பல நூறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதால், தங்களுக்கு தேவையான பலவற்றையும் அவர்களது வளாகத்துக்குள்ளேயே உருவாக்கிகொள்கிறார்கள். தங்களை Gated Community என அழைத்துக்கொள்கிறார்கள்.

தனியார் செக்யூரிட்டிகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்கிறார்கள். வீட்டு உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், யாரும் நுழைய முடியாது. பொது சமூகத்தில் இருந்து தங்கள் குடியிருப்பை துண்டித்துக்கொண்டு  வாழ்வதின் தேவை என்ன? அதில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன? இதெல்லாம் சமூக ஆய்வுக்குரிய விசயம்.

உள்ளே செல்ல முடியாது என்றால், அவர்களின் வாழ்க்கையை எப்படி தெரிந்துகொள்வது?   இது சென்னையில் இருக்கும் ஒரு தொகுப்பு வீட்டின் வாழ்க்கையை அதன் சில தன்மைகளை சுருக்கமாய் சொல்ல முயல்கிறது.

****

ஒரு உயர் அதிகாரியை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்தின் லாபியில் காத்திருந்தேன். ஒரு நேர்முகத் தேர்வுக்காக ஒரு இளைஞரும் காத்திருந்தார்.  இருவருக்குமே வந்த வேலை தாமதமாகி கொண்டு இருந்தது. சும்மா தானே இருக்கிறோம் என மெல்ல பேச்சு கொடுத்தேன்.

சென்னையில் மிக பிரபலமான கட்டுமான நிறுவனம் கட்டிய 300 வீடுகளுக்கும் மேலாக இருந்த அந்த குடியிருப்பில் பராமரிக்கும் பணியில் சூப்பர்வைசராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

”இப்படி பெரும் கூட்டமாக வாழ்வது என்பது சிறப்பான விசயம் தானே. வீடுகளின்! வகைகள் எப்படி சார்? விலை எல்லாம் அதிகமா இருக்குமா?”

“மூன்று, நான்கு படுக்கையறை கொண்ட வீடுகள். 2 கோடி, இரண்டு கோடிக்கும் மேலான விலையில் இருக்கும்.  இப்படி கட்டப்படுகிற வீடுகளில் மிடிஸ் கிளாஸ்சுக்கும் பட்ஜெட் வீடுகள் இருக்கவேண்டும் என்கிற விதி இருப்பதால், ஒரு பிளாக் அவர்களுக்காகவும் கட்டி இருக்கிறார்கள்.  அவர்களுக்கு விலை 70 லட்சம் வரைக்கும் வரும்.”

”2 கோடி, மூன்று கோடி என்றால் அதை வாங்குபவர்களும் வசதியான ஆட்களாக தானே இருப்பார்கள்?”

”நிறைய அரசு ஊழியர்கள்; தொழில் செய்பவர்கள் என பலரும் கலவையாக இருக்கிறார்கள்.”

”இப்படி அபார்மெண்ட் வீடுகளாக இருப்பது ஒரு பாசிட்டிவான விசயம் அல்லவா! சொந்தக்காரன் எங்கேயோ இருந்தாலும், அவசரத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர் தானே வரவேண்டும்? நல்லா பழகுவார்கள் தானே?

“எங்க சார்? அப்படி ஒரு ஸ்மூத்தான உறவு பெரும்பாலும் இல்லை. அவன் நிழல் கூட என் வீட்டு பக்கம் விழக்கூடாது என காரசாரமாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்துவதில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இங்கே ஒரு கம்யூனிட்டி ஹால் இருக்கிறது. வீடு அடுத்தடுத்து இருந்தாலும்,  வீட்டு விசேசங்களில் கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பதில்லை. வருவதுமில்லை.  சொந்தக்காரர்கள் மட்டுமே வருவார்கள்.  முன்னாடி இருந்த வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் அவ்வளவு நல்லா பழகுவார்கள். இங்கே பேசக்கூட முடியலை. பிறகு எங்கே பழகுறது? என எங்களிடம் வந்து சிலர் புலம்புவார்கள்.

படிக்க:

ஐந்தாண்டுகளில் இடிந்து விழக்கூடிய பல நூறு குடியிருப்புகள்!

சிங்கார சென்னை 2.0. கார்ப்பரேட்டுகள் உள்ளே! பூர்வகுடிகள் வெளியே!!

”இப்படி மொத்தமாக இருக்கும் பொழுது என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன?”

“24 மணி நேரமும் தண்ணீர் வசதி இருக்கும். முழுக்க வெளியில் இருந்து தண்ணீர் வரவழைக்கிறோம். எலக்ட்ரிசிட்டி இல்லாமல் போனால், ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின்சாரம் தந்துவிடுவோம். கம்யூனிட்டி ஹால் உள்ளது.  100 பேர் வரை உள்ளே அமரமுடியும். விசேசம் என்றால் புக் செய்துகொள்ளலாம்.  சுத்தம் செய்வதற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கிகொள்வோம். இபி என்ன ரீடிங்கோ அதை கொடுத்துவிடவேண்டும்.  உள்ளே சகல வசதிகளுடன் சின்ன திரையரங்கு உள்ளது.  30 பேர் வரை ஒரே நேரத்தில் பார்க்கலாம். பார்க்கனும் நினைக்கிறவர்கள் எங்களிடம் பதிவு செய்துவிடுவார்கள். யார் முதலில் புக் செய்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். உள்ளே நீச்சல் குளம் இருக்கிறது. ஜிம் இருக்கிறது. பிள்ளைகள் விளையாடுவதற்கு சின்ன பார்க் இருக்கிறது. சின்ன குழந்தைகளுக்கு கிரீச் இருக்கிறது.”

”என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?”

”ஒரு மரத்தோட கிளை ஒடிஞ்சா கூட நீங்க சரியா தண்ணிர் விடலை! கழிவு நீரை சுத்திகரிச்ச தண்ணீரை விடுவதினால் தான் மரமெல்லாம் டல்லா இருக்கு என்பார்கள். பார்த்து பார்த்து செய்ஞ்சா கூட புகார் வரும். கரண்ட் கட் ஆகி, ஜெனரேட்டரை ஆன் செய்வதற்கு மூன்று நான்கு நிமிடம் ஆகுமல்லவா! அந்த சில நிமிடங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.  கரண்ட் போகுமா இல்லையா என கேட்டு முன்பே தெரிந்துகொண்டு தயாராக இருக்கமாட்டீர்களா என்பார்கள்.  மூடிக்கிடந்த ஒரு வீட்டிற்கு ரூ. 200 இபி பில் வந்தது. முறையாக தெரிவித்தோம். கண்டுகொள்ளவில்லை. இபி அலுவலகத்திலிருந்து பீஸ் கட்டையை பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் அரசு துறையில் அதிகாரத்தில் இருப்பவர்கள். செம கடுப்பாகி, அவர்கள் போன் செய்ததும், நடுநிசி இரண்டு மணியளவில் பீஸ் கட்டையை எடுத்துக்கொண்டு இபி அதிகாரி அலறியடித்து வந்து போட்டுவிட்டு போனார்.”

”நிதி, நிர்வாகம் எல்லாம் எப்படி?”

”சதுர அடிக்கு இவ்வளவு என கணக்கிட்டு பராமரிப்பு தொகை வாங்குகிறோம். வீட்டின் அளவிற்கு தகுந்தவாறு மாதம் ரூ. 4000 லிருந்து 8000 வரைக்கும் வரும். வருடத்திற்கு ஒரு முறை அங்கு குடியிருக்கும் வீட்டுக்காரர்கள் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் தான் அந்த வருடம் முழுவதும் வேலையாட்களை நியமித்துக்கொண்டு, நிதியை கொண்டு நிர்வாகம் செய்வார்கள். அந்த டீம், இந்த டீம் என புகைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.”

பொதுவாக வீட்டு கட்டுமானம் குறித்து புகார்கள் எழும். கட்டியது மிகப்பிரபலமான நிறுவனம் என்பதால் அந்த பிரச்சனை இருக்காது அல்லவா?”

”இல்லை. படுமோசம்.  வீடுகளில் குடியிருப்பவர்களிடம் நிறைய புகார்கள் வந்தப்படியே இருக்கின்றன. வீட்டில் ஒரு ஆணியடிக்க கூட முடியவில்லை.  பொல பொல உதிர்ந்து வரும். டிவியை மாட்டினால், ஸ்டாண்டோடு டிவியும் கீழே விழும். ஒரு குழந்தை ஒரு கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்படியே மொத்தமாய் விழுந்துவிட்டது. நல்லவேளை. குழந்தை தப்பித்துவிட்டது.”

”சின்ன சின்ன விசயத்திற்கே கோபப்படுவர்கள் இதை எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?”

”வீடு இரண்டு கோடிக்கு மேல் என்றால், இவர்கள் 50 லட்சம், ஒரு கோடி வரை வீட்டிற்குள் இண்டீரியருக்கு செலவு செய்திருக்கிறார்கள். ரெம்ப மோசமாக கட்டி, ஏமாற்றியிருக்கிறார்கள் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். நடந்துகொண்டு இருக்கிறது. இதையே பிரச்சனையாக்கி, சில வீட்டுக்காரர்கள் பராமரிப்பு நிதி தரமாட்டார்கள்.”

அவருக்கு அழைப்பு வந்தது. அவருக்கு வேலை கிடைக்க வாழ்த்தினேன். விடைபெற்றுக்கொண்டார்.

அவர் சொன்ன அந்த வீடுகளின் ஏரியல் வியூ பார்த்தேன். மிக பெரிதாக இருந்தது. வீடுகளின் தன்மையையும், அங்குள்ள வசதிகளையும் உள்ளடக்கி ஒரு காணொளி போட்டிருந்தார்கள்.  பலரையும் ஈர்க்கும்படி இருந்தது.

அந்த பிராஜக்ட் பற்றிய குறிப்பான கூகுள் பின்னூட்டங்களை (Comments) படித்துப் பார்த்தேன். சில பின்னூட்டங்கள் அங்குள்ள வசதிகளை புகழ்ந்து இருந்தது.  அந்த நிறுவனம் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பொறுப்பாக நன்றி தெரிவித்திருந்தது.  அதற்கு பிறகு சில பின்னூட்டங்கள் “பூச்சு வேலை சரியில்லை. கட்டுமானம் சரியில்லை. ஏமாற்றிவிட்டார்கள்” என இருந்தன. அந்த நிறுவனம் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. ஒரு எண்ணைத் தந்து அழையுங்கள் என போட்டிருந்தது. அவர் சொன்னதை இந்த பின்னூட்டங்கள் உறுதி செய்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here