பத்திரிக்கைச் செய்தி !

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய் !
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு !
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் !
வெற்றி பெறச் செய்வோம் !

கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 16.05.2022 முதல் சுமார் 700 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் CMWSSB (Chennai Metropolitan Water Supply and Sewerage Board) -ன் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இத்தொழிலாளர்கள் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, இவர்களுக்கான சம்பளத்தை இதுநாள் வரை வாரியமே நேரிடையாக அளித்து வந்தது. தொழிலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.17,000 -மும், அதிகப்பட்சமாக மாதம் ரூ.26,000 -மும் சம்பளமாக வழங்கப்படுகின்றது.

தற்போது மேற்படி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு தி.மு.க அரசு தாரைவார்த்து விட்டதால், 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதனால், ஒவ்வொரு தொழிலாளியும் தாம் பெறும் சம்பளத்திலிருந்தே ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்த கமிஷனை எடுத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.3000 முதல் ரூ.6000 வரை ஊதியம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தற்காலிக ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘உயிரே போனாலும் அறப் போராட்டம் தொடரும்’ என்று குடிநீர் வாரிய ஊழியர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பத்தில், ‘இதைத் தொடாதே’ என சொல்லும் அளவில் வெறுத்து ஒதுக்குகின்றனர். அந்த அளவில் மிகவும் மோசமான சூழலில் வேலை செய்யும் இவர்களுக்கு “ரிஸ்க் அலவன்ஸ்” கூட இல்லை. உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து நிறைந்த தொழிலாளர்களுக்கு வெறும் ரூ 17,000 முதல் 26,000 வரை மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் பெரும் சம்பளத்தில் பாதி அளவு கூட தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக தராமல் அரசு இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருவது மிகவும் கொடூரமான உழைப்பு சுரண்டலாகும்.

மேலும், சம வேலைக்கு – சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த அரசு மறுத்துள்ளதும் மிக மோசமான செயலாகும். பல ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமலும், சம வேலைக்கு சம ஊதியம் தராமலும் செயல்பட்டு வரும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இத்தொழிலாளர்கள் ஒரு நாள் கழிவு நீரை அகற்றவில்லையென்றால் சென்னை முழுவதும் நாறிவிடும். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றவும், கழிவுகளை அகற்றி நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாக்கும் இந்த தொழிலாளர்களை பாதுகாப்பது மக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பணி நிரந்தரம் செய்ய கோரி போராடும் தற்காலிக தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. ஒரு தொழிலாளி 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்பதே சட்டம். ஆனால், சட்டத்தை அரசு துறைகளே மதிக்காமல், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொத்தடிமைகள் போல் நடத்தி வருகிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப் பட்டதிலிருந்து நிரந்தர தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் 10 முதல் 15 வருடம் உழைப்பு கடுமையாக சுரண்டப்பட்டு, அதன்பிறகு பணியிலிருந்து துரத்தப்பட்டு நடுவீதியில் நிற்கின்றனர். கிடைத்த வேலையை செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அரசுத் துறையிலும் இந்நிலையே நீடிக்கிறது. சில இடங்களில் தொழிலாளர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஒப்பந்த தொழிலாளர்களாகவே இறுதிவரை வாழ்ந்து மடிகின்றனர். இவர்களிடமிருந்தே காண்டிராக்ட் முதலாளிகள் உழைப்பைச் சுரண்டி ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களை கொள்ளையடிக்கின்றனர்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்களின் போராட்டம் நியாயமான போராட்டம் என்பதால் அதனை ஆதரிப்பதுடன் அவர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுத்து அவர்களுக்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் முதற்கட்டமாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்களை சம வேலைக்கு – சம ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் வருகின்ற 27.05.2022 (வெள்ளிகிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னையில் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க அறைகூவி அழைக்கின்றோம்.

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு- புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here