ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஜெர்மனி சென்றுள்ள இந்தியாவின் பிரதமர் மோடி ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் நகரத்தில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் மத்தியில் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழிய பேசி உள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொருவரின் டிஎன்ஏ விலும் கலந்துள்ளது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி என்பதை துடிப்பான இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளி என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.
ஜனநாயகத்திற்கும் மோடிக்கும் இருக்கும் தொடர்பைவிட மோடி உரையாற்றிய முனிச் நகரத்திற்கும் பாசிசத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரை ஆதரித்த பாசிஸ்டுகள் பவேரியா பிரதேசத்தில்தான் அதிகமாக இருந்தனர்.
அன்று, முதல் உலகப் போருக்குப் பிறகு பவேரியா ஜெர்மனியின் பாசிச எழுச்சி மையமாக மாறியது. தனது அரசியல் வெறியூட்டும் செயல்பாடுகளை பவேரியாவில் இருந்து தான் அமுல் படுத்தினார்.
1923 ஆம் ஆண்டு பவேரியா அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக பீர் ஹால் புட்ச் (புரட்சி) நடத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார் ஹிட்லர்.
இன்று, இந்தியாவில் பத்திரிக்கைகள் சுதந்திரமாக கருத்து சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 150 வது இடத்தில் உள்ளது.
மோடியின் ஆட்சியை விமர்சித்து பத்திரிக்கைகள் எழுதினால் எழுதுகின்ற எழுத்தாளர்களையும் வெளியிடுகின்ற பத்திரிகையாளர்களையும் கடுமையாக ஒடுக்குகிறது மோடி கும்பல்.
மோடியின் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் முதல் சமூக செயற்பாட்டாளர்கள் வரை அனைவர் மீதும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கூட அடக்குமுறையை ஏவி விடுகிறது மோடி ஆர்எஸ்எஸ் கும்பல்.
படிக்க:
- ஜெர்மன் ஹிட்லருக்கு யூதர்கள்! இந்தியா மோடிக்கு இசுலாமியர்கள்!
- நாகாலாந்து படுகொலைகள்! பாசிச பயங்கரவாதமே ‘இந்திய ஜனநாயகம்’!
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எதிர்கட்சிகளை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்குவது, பணியாத ஆளும் கட்சிகளை ஆளுநர்களைக் கொண்டு மிரட்டுவது, மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை வெட்டுவது, ரயில்வே போன்ற பொது போக்குவரத்து துறைகளில் உரிய பங்கீட்டை மறுப்பது, நதி நீர் உரிமையில் தலையிட்டு நசுக்குவது போன்ற அனைத்திலும் ஓரவஞ்சனை ஆகவும் ஒடுக்குகின்ற வகையிலும் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கின்ற அப்பட்டமான பாசிச சர்வாதிகார மனநிலை கொண்ட மோடி ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது மிகவும் அபத்தமானது.
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முனிச் நகரத்தில் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பற்றி வாய்ச்சவடால் அடித்தது கேலிக்கூத்து.
இன்னொருபுறம், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகள் பாசிசத்திற்கும் இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் பாசிஸ்டுகளுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதே உண்மை.
ஹிட்லர் “தேசிய சோசலிசக் கட்சி” நடத்தினார்; மோடி “ஜனநாயகத்தை” காப்பாற்ற வலியுறுத்துகிறார்.
அந்த வகையில் தனது பாசிச முன்னோர்களை வழிகாட்டியாகக் கொண்டுள்ளதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
- திருச்செங்கோடன்.