” ஒட்டகம் மேய்க்க மறுத்ததால், குவைத் ஒப்பந்த வேலைக்குச் சென்ற கூத்தாநல்லூர் முத்துக்குமார் குவைத் பணக்காரனால் சித்திரவதை செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார் ” — தினத்தந்தி, 14 செப்.2022.

1.

வளைகுடாநாடுகளில் நிறைய
காசு சம்பாதித்துச் சேர்க்கும் கனவுடனும்,
மானமுள்ள வேலைகேட்டும்,
போகுமிடத்தின் புதிய நுட்பமும் சேர்த்துக்
கற்கவேண்டுமென்றும் கோரி
ஒப்பந்தம் போட்டபிறகே
கூத்தாநல்லூர் சிறு வியாபாரி முத்துக்குமார்
அந்நிய மண் சென்றார்;
சர்வதேச உழைப்புச்சுரண்டலில்
சிக்கவைத்து ஏமாற்றப்பட்டார்.

பழக்கமேயில்லாத பாலைவனத்தில்
ஒட்டகம் மேய்க்கச் சொன்னார்கள், செய்தார் ;
பொறுக்கமுடியாமல் முறையிட்டார்;
அந்த உரிமையை மறுத்தனர்;
காற்றில்லா அறையில்
சோறுதண்ணீரில்லாமல் அடைத்துவைத்தும்
மணலில் படுக்கவைத்தும் வதைசெய்து
குவைத் பண அதிகாரம் அவரைச்
சுட்டுத்தின்றது.

2.

முத்துக்குமார்,
சோழர்கால அடிமையா
சவுக்கடிகொடுத்து வேலைவாங்க ?

பிறகு தமிழகத்தில்
சோறு இல்லாத நாட்டுப்புறத்தில்
“சோற்றுக்காகத் தம்மை எழுதிக்கொடுத்த வகையில்
கூழ் ஆள் முறை”க்காகக்
குவைத்துக்குச் சென்றவரா ?

பிரிட்டிஷ் காலனிய காலத்தில்
தென்தமிழகத்திலிருந்து
இலங்கை சென்ற
தோட்டக்கூலி அடிமைகள் போலவா ?

இன்று புதியவகையாக
தமிழகமுழுதுமிருந்து உடல்உழைப்புக்காக
துபாய், அபுதாபி, குவைத்துக்கு கூலிகளாகவும்
தொழில்நுட்பக் கூலிகளாக
மேற்குலக நாடுகளுக்கும்
ஏற்றுமதியாவது போலவா ?

இதுஎன்ன,
சர்வதேச ஆளும்வர்க்கங்களின் புதிய ஏற்பாடா?
புதியஅடிமைகள் புறப்பாடா ?

3.

பத்தாண்டு முன்னால் —
நண்பரின் மருமகன் அபுதாபி சென்றார்.
தகடுகள் நட்டு பங்களா செய்வதில்
அற்புதத் திறமைசாலி.
ஒருநாள் தகடுகள் சரிந்தே பலியானார்.
மானத்தோடு சடலம் திரும்பப் பெறவே
இந்திய அதிகாரப் படிக்கட்டுக்கள் ஏறி இறங்கிய
நண்பரின் மானம் போய்விட்டது.
அந்தப் பணக்காரர்களிடம்
நியாயமும் பெறமுடியவில்லை ;
நய்யாபைசா நட்டஈடும் இல்லை.

4.

இதோ, இன்று
முத்துக்குமார் மனைவி குழந்தைகள்
மன்றாடுகிறார்கள்.
” முறையாகப் பதிவுசெய்து வெளிநாடு சென்றால்
இப்படியெல்லாம் நடக்காது ” என்றுசட்டம் பேசுகிறார்கள் தமிழகத் தலைவர்கள்.
இந்த நேரத்திலும்
சட்டக் காயிதம் புரட்டுவதுதான்
நீதியோ ?

அந்தக் குடும்பத்துக்குத் தேவை
பெரியார் சொன்ன நியாயம்,
நி- யா – ய – ம் மட்டுமே !

5.

அந்த குவைத் பணக்காரன் ( தனியார் )
தண்டிக்கப்பட வேண்டும்.
யார் விசாரிப்பது ?
யார் தண்டனை கொடுப்பது ? யார் பொறுப்பு ?

2017 – க்குப்பிறகு குவைத்தில் மரணதண்டனை வழங்கப்படவில்லை ; இந்தியா போலவேதான் வழக்குகள் நிரூபிக்கப்படவேண்டும்; இதுவே நிலைமை. கூடுதலாக, ” திட்டமிட்டகொலை என்று நிரூபணமானால்மட்டுமே மரணதண்டனை ” என்கிறது குவைத்தின் வர்க்கச்சட்டம். அதிலும் மரணதண்டனை அரிதே ; ” அரசு தானே பொறுப்பெடுத்துத் தண்டித்துவிடும் ” என்ற கதைகளெல்லாம் காற்றுவாக்கில்வரும் கற்பனைச் சரடுகளே.

வளைகுடா அரசை, ( இந்திய ) ஒன்றிய அரசு நியாயம் கேட்டுவிடும் என்பதும் பொருந்தாது ; மாட்டுக்கறி ஏற்றுமதிக்கோ, ஏல- லவங்க – வாசனாதி மசாலாக்களின் ஏற்றுமதிக்கோ, வேறு சந்தைக்கோ காசு கொட்டுமென்றால் வாய் இளிக்கும். நியாயத்துக்காக இன்றைய ஒன்றிய வர்க்க அரசு சண்டை போட்டதாக வரலாறில்லை.

அதுவும் சிறு கடைக்காரர் முத்துக்குமாருக்காக அரசின் மீது அவ்வளவு பெரியஅழுத்தம் யார் கொடுப்பார்? ஏற்கெனவே “சட்டம் பேசத்” தொடங்கிவிட்ட தமிழகத் தலைவர்கள் கருணை ஈடு கொஞ்சம்தர முன்வரலாம்; அதற்குமேல் “பார்க்கலாங்க”  என்ற பதில்மட்டுமே அரசுதரும்.

அந்தக் குடும்பத்துக்காக மக்கள்தரப்பு அமைப்புக்கள் போராடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு. மற்றப்படி, ‘ உலகமயம் ‘ நிகழ்ச்சிநிரலில் உள்ள உலகநடப்பில் மக்கள் நாம்தான் வேலை உரிமை உத்தரவாதத்துக்கும் சேர்த்து ” ஒன்றிய அரசே பொறுப்பென்று ” நின்று போராடவேண்டும் !

6.

முத்துக்குமார் கொல்லப்பட்டதற்கு, அவரது அரிய உயிர் பறிக்கப்பட்ட இந்த விசயத்தில் கேளாத செவிகள் நிறையவே உள்ளன ; காணாத கண்கள் நிறையவே உள்ளன ; அவை ” நி – யா – ய -ம் ” என்ற மக்களின் கதறலைக் கேட்கட்டும், பார்க்கட்டும் ! இந்த வழக்கிலும் இனி இதுபோன்ற வருங்கால வழக்குகளிலும் வர்க்க அரசு பாடங்கள் கற்குமா ? மக்களைப் பொறுத்தே மக்கள் இயக்கங்கள் பொறுத்தே ஒரு திசை கிடைக்கும் !

  • புதிய புத்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here