கோவை துடியலூரில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவியை “நீ மாட்டுக்கறி தின்பவள்தானே அதனால்தான் உனக்கு இவ்வளவு திமிர்” என்று மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு கேவலமான செயல் என்ற பொருளில் அம்மாணவியை சகமாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்திய ஆசிரியர்கள், அதைக்குறித்து புகார் அளித்தாலும் கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியை, திருவண்ணாமலை கோவில் விழாவிற்கு சிலையை சுமந்துசெல்லும் சீருடை அணிந்த மாணவர்கள், பள்ளிமேலாண்மைக் குழுவில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்று தனது மாணவனிடம் பாடம் எடுக்கும் ஆசிரியை, பள்ளிகளில் சாதியுணர்வுடன் தலித் மாணவர்களை ஒடுக்கும் ஆசிரியர்கள் என்று பலநூறு சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும் என்ற தனித்தனி சம்பவங்களாகத் தோன்றினாலும். இவை அனைத்தையும் இணைக்கும் புள்ளி ஒன்று பின்புலத்தில் உள்ளது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். நாட்டின் பல்வேறு கட்டமைப்புகளிலும் பீடித்துள்ள ஆர்.எஸ்.எஸ் விஷஜந்துக்கள் கல்வித்துறையிலும் மிகப்பெரிய அளவில் ஊடுருவியிருக்கின்றன. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஊடுருவி நாளைய இந்துராஷ்டிரத்திற்கான அடியாட்களையும், அறிவாளிகளையும் தயாரித்துவருகிறது. பலநூறு மாணவர்களுக்கு தனித்தனியே தனது விஷத்தை ஏற்றுவது காலம்பிடிக்கும் என்பதால் மாணவ-மாணவிகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ஆசிரியர்களை வென்றெடுத்து அவர்கள்மூலமாக விஷத்தைக் கக்கிவருகிறது. மாணவர்/ஆசிரியர்களுக்கு தியானம், சிறப்புப்பயிற்சி, தேசபக்தி, அப்துல்கலாம், அட்சயபாத்ரா என்று கல்விவளாகங்களுக்குள் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி வருகின்றனர். இவற்றைப்பற்றி தனது “நரகமாளிகை” நூலில் விளக்கியுள்ளார் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான சுதீஷ்மின்னி.

ஆர்.எஸ்.எஸ். தனது தொடர்பிலுள்ள அல்லது தனது தயாரிப்பான கல்வித்துறை உயரதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகளின் மூலம் ஆசிரியர்களுக்கான பயிற்சி என்று வித்யாபாரதி, சேவாபாரதி, மற்றும் பல லெட்டர்பேட் அமைப்புகளின் மூலம் பண்டையகால பாரதம், அதன் பெருமைகள், வாழ்வியல் விழுமியங்கள், கலாச்சாரம், பண்பாடு என்று இல்லாத புருடாக்களை அள்ளிவிட்டு விஷத்தை ஏற்றுகிறது. திருப்பூரில் முன்னர் நடைபெற்ற இதைப்போன்ற சம்பவம் அப்பயிற்சியில் பங்குபெற்ற ஒருசில சுயமரியாதையுள்ள ஆசிரியர்களால் அம்பலமானது. அரசு பள்ளிவளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடப்பது, சமீபத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யாகம் போன்றவை காவிகளின் பிடியில் கல்விவளாகங்கள் சிக்கியிருப்பதை துலக்கமாக உணர்த்துகின்றன.


இதையும் படியுங்கள்: மருத்துவக் கல்வியிலும் இந்துத்துவ சித்தாந்தமா..?


இது ஒருபுறம் என்றால் தனியார் பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவை முற்றுமுழுதாக காவிகளின் கூடாரம் ஆகிவிட்டது என்றே கூறமுடியும். குறிப்பாக, கோவையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் தர்மசாஸ்தா பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெற்றுவந்த ஆர்.எஸ்.எஸ். முகாம், தர்மபுரியில் ராதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். முகாம், ஊட்டியில் JSS சர்வதேச பள்ளிவளாகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாடு என்று காவிமயம் ஆகிவிட்டன. பள்ளிகளில் இந்து மதம் சார்ந்த பண்டிகைகளை மட்டும் கொண்டாடுவது, அசைவ உணவுகளுக்கு அனுமதி மறுப்பது, பள்ளிகளின் பெயர்களை வித்யாமந்திர், வித்யாபவன் என்று சமஸ்கிருதமயமாக்குவது, சரஸ்வதி பூஜை, ஆசிரியர்களுக்கு மாணவர்களைக்கொண்டு பாதபூஜை நடத்துவது என்று காவிமயம் ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்துமதம் இயல்பானதாக ஆக்கப்பட்டு, மற்ற மதங்களை புறக்கணித்து அம்மதங்களைப் பின்பற்றும் மாணவர்களை அந்நியமாக்கிவருகின்றன.

ஏற்கனவே சாதி, மதம் என்று மூடத்தனத்தில் மூழ்கியுள்ள நமது பின்தங்கிய சமுதாயத்தை அறிவுப்பூர்வமான, ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயமாகக் கட்டியெழுப்புவதில் முதன்மையான பங்குவகிக்கவேண்டியது ஆசிரியர்களே. ஆனால் அவர்களே கடைந்தெடுத்த பிழைப்புவாதிகளாகவும், பிற்போக்குவாதிகளாகவும், அறிவியலுக்கு எதிரானவர்களாகவும் மாறி நிற்கிறார்கள், மாறிவருகிறார்கள். பள்ளியில் சாதி, மதம் இல்லை என்றுதான் சேர்ப்போம் என்று சொன்னால் அப்படியெல்லாம் முடியாது முரண்டுபிடிப்பதும், பெண்குழந்தைகளிடம் ஏன் பொட்டுவைக்கவில்லை, கூந்தல் வளர்ப்பதில்லை, கம்மல் போடுவதில்லை என்று பிராண்டுபவர்களாக, முற்போக்குக் கருத்துக்களையும், நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக ஆசிரியர்களிடம் உள்ள சாதி, மதவெறி, ஆண்டான்-அடிமை மனோபாவம், பிற்போக்குத்தனங்கள், பிழைப்புவாதம் நாளைய சமுதாயத்தையே அடியறுப்பதாகும்.


இதையும் படியுங்கள்: கல்வித்துறையை மொத்தமாக விழுங்கத் துடிக்கும் காவி கும்பல்!


கோவை துடியலூர் அரசுப்பள்ளி விவகாரத்திற்கு காரணமான ஆசிரியை அபிநயாவோ, ராஜ்குமாரோ, தலைமையாசிரியையோ அல்லது இதுபோன்ற மதவாத, சாதியவாத செயல்களில் ஈடுபடும் ஆசிரிய/ஆசிரியர்களோ இந்துத்துவா அமைப்புகள் நடத்தும் இத்தகைய பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டுதான் இப்படிப்பட்ட கொடுமைகளை செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்களை ஏதோ ஒருவிதத்தில் கேடுகெட்ட காவிகள் தொட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களை கருத்தியல் ரீதியாகத் தங்களுக்கானவர்களாக மாற்றியுள்ளார்கள் என்ற கோணத்திலும் நாம் பார்க்கவேண்டும். மேற்சொன்ன ஏதோவொரு வழிமுறையில் கல்வி வளாகங்களைக் குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஆசிரியர் கூட்டணிகளை உடனுக்குடன் அம்பலப்படுத்தி சமூகவிரோதிகளாக மாறியிருக்கும் ஆசிரியர்களை களையெடுக்கப் போராடுவதே  நமது தற்போதைய கடமையாகும்.  மாணவர்களை தங்கள் அடியாளப்படையாக மாற்றும் இந்துத்துவ பாசிஸ்டுகளின் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம்.  பள்ளி கல்லூரிகளில் பாசிச எதிர்ப்பு மாணவர் முன்னணியைக் கட்டியமைப்போம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here