னிதகுலத்தின் வளர்ச்சியின் போக்கில் வர்க்கங்கள் தோன்றியபோது,  சொத்துடைமை வர்க்கம் மற்ற வர்க்கங்களை அடக்கி ஒடுக்க வேண்டியிருந்தது. அதற்காகவே அரசு என்ற ஒரு வர்க்கச்சார்புடைய நிறுவனமும் தோற்றம் பெற்றது.  சொத்துடைமை வர்க்கத்தை மற்ற வர்க்கங்களிடமிருந்து பாதுகாக்க அது பல்வேறு சட்டங்களைக் கொண்டு ஒடுக்கியது. இதுவே அரசு மற்றும் ஒடுக்குமுறை சட்டங்கள் குறித்து மார்க்சிய வரையறுப்பாகும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ரௌலட் சட்டம், தேசத்துரோக சட்டம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியவர்களை ஒடுக்கி வந்தது.

1947-ல் நடந்த அதிகார மாற்றத்திற்குப் பிறகும் இந்த ஒடுக்குமுறை சட்டங்கள் அடுத்தடுத்து இந்திய ஒன்றியத்தை ஆண்ட அரசாங்கங்கள் காங்கிரசு துவங்கி  சமீபகால பாசிச பாஜக ஆட்சி வரையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, மகஇக பாடகர் கோவன் மீது பார்ப்பன பாசிச ஜெயலலிதாவால் தேசத்துரோக வழக்கு (124-அ) போடப்பட்டு சமீபத்தில்தான் இரத்து செய்யப்பட்டதை நாம் அறிவோம்.

இந்தியாவில் ஒடுக்குமுறை
கறுப்புச் சட்டங்கள்

முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் மக்கள்மீது கூடுதல் வரிகளாக, அருகிவரும் வேலைவாய்ப்புகளாக, இயற்கைவளக் கொள்ளைக்காக மக்களை பலாத்கரமாக அப்புறப்படுத்துவது; நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பனுக்காக காவிரியை தடுத்து டெல்டா பகுதிகளை வறண்டுபோக வைப்பது; கார்போரேட்டுகளின் கடல்வளக்கொள்ளைக்காக பாரம்பரிய மீனவர்களை சொந்த நாட்டு இராணுவத்தைக் கொண்டு விரட்டுவது போன்ற வடிவங்களில் சுமத்தப்பட்டு வருகிறது. அதைத் தாங்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதை ஒடுக்கும் அரசுகள், காலம்தோறும் பல்வேறு ஒடுக்குமுறை சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.  முதலாளித்துவ நெருக்கடி அதிகமாக, அதிகமாக புதிது புதிதாக ஒடுக்குமுறை  சட்டங்களும் அதில் உள்ள விதிகளும், ஜனநாயக அம்சங்களும் நீக்கப்பட்டு மேலும் கடுமையான உள்ளடக்கத்துடன் அமல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 1971-இல் கொண்டுவரப்பட்ட MISA (maintenance of International security act) சட்டமும், 1985 முதல் 95-வரை அமலில் இருந்த TADA (Terrorist and Disruptive Activities(prevention) Act) சட்டம், பின்னர் 2002- POTA (Prevention of Terrorism Act ) சட்டமும் அமல்படுத்தப்பட்டது. POTA-வைப் புனரமைத்து அதில் உள்ள “குற்றவாளி யார்” என்பதையும், ஜாமீன் பெறுவதற்கான வழிமுறைகளை அடைத்தும், விசாரணை ஏதும் செய்யாமலேயே சிறையில் அடைத்து வைக்கும் ஷரத்துகளை புகுத்தி UAPA (Unlawful Activities Act) என்ற புதிய சட்டம் 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் அரசு யார்மீது வேண்டுமானாலும்  “தீவிரவாதி” முத்திரைகுத்தி கைதுசெய்து விசாரணை  நடத்தாமலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலும் வருடக்கணக்கில் சிறையில் வைத்திருக்க முடியும்.

சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கிய பீமா-கோரேகான் வழக்கு

2014-ஆம் ஆண்டு பாசிச பாஜக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்தே க்அகஅ சட்டத்தைக் கேடாகப் பயன்படுத்தி வருகிறது.  மஹாராஷ்டிராவில் பீமா-கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற பார்ப்பன பேஷ்வாக்களின் படைகளை தாழ்த்தப்பட்ட மஹர்கள் வீழ்த்திய நாளின் 200-வது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்றதற்காக 16 அரசியல், சமூக, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது ‘மாவோயிஸ்டுகளுடன்’ தொடர்பு வைத்துள்ளார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.  அவர்களுள் ஜார்கண்டில் சுரங்க நிறுவனங்களை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய 85 வயதான பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன்சாமி என்ற பாதிரியார் கொரோனா பாதிப்பாலும் சிறையில் போதுமான வசதிகள் இல்லாததாலும் சிறையிலேயே மரணமடைந்தார்.

சுதா பரத்வாஜ், வரவர ராவ்,வெர்னான் கொன்சால்வஸ், அருண் பெரரைரா, கவுதம் நவலகா, ஆனந்த் டெல்டும்டே, ஹனிபாபு, ரமேஷ் காய்சோர், சாகர் கோர்கி, ஜோதி ஜக்தாப் ஆகியோர் பலவருடங்களாக சட்டப்போராட்டம் நடத்திதான் ஜாமீனில் வெளிவரமுடிந்தது. ஆனால் மகேஷ் ராவத், ரோனா வில்சன், சோமாசென், சுதிர் தவாலே, சுரேந்திரா காட்லிங் உள்ளிட்டோருக்கு 5 வருடங்களாக ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் கைக்கூலிகளால் இயக்கப்படும் விசாரணை அமைப்புகள்

பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் அவருடைய ஆருயிர் நண்பர் அதானிக்கு எதிராகவும் பேசினால் யாராக இருந்தாலும் சிறை செல்ல நேரிடும், ஜாமீனும்  மறுக்கப்பட்டு  முடக்கப்படுவார்கள் என்று காவி பாசிஸ்டுகள் சொல்லாமல் சொல்லி வருகிறார்கள்.  மோடி – அமித்ஷா கும்பலின் கைப்பாவையாக இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய குற்றபுலனாய்வுத் துறை (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற  விசாரணை அமைப்புகள் மூலம் மக்கள் முன்னணியாளர்களின் அலுவலகங்கள், வீடுகளில் அதிரடியாக சோதனைகள் நடத்தி அச்சுறுத்துவதும், பொய்யான குற்றச்சாட்டின் பெயரிலும் கைது செய்யப்படுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இவை தவிர பத்திரிக்கையாளர்கள், CAA எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்வேறு மாணவத்தலைவர்களும் UAPA சட்டத்தின்கீழ் சிறையிலுள்ளனர். மோடி தலைமையிலான பாசிச கும்பல் பதவியேற்ற 2014 முதல் 2021 வரை 6900 வழக்குகள் UAPA சட்டத்தின்கீழ் பதியப்பட்டு விசாரணைக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 985 வழக்குகள் புதிதாகப் பதியப்படுகின்றன.

அருந்ததிராயைக் குறிவைக்கும்
கார்பரேட் காவி பாசிஸ்டுகள்

தற்போது காவி பாசிஸ்டுகளின் குறி புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஷேக் சவுகத் உசேன் மீதும் விழுந்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் ஒரு மாநாட்டில் காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசியதாகக்கூறி அவர்கள் இருவர்மீதும் சமூக மோதலை உருவாக்குதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல், அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு எதிராகவும் செயல்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் UAPA சட்டத்தின்கீழ் தற்போது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அருந்ததிராய் பாசிச மோடியின் மக்கள் விரோதப் போக்கை கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பாக ஐரோப்பாவில் அவரின் எழுத்துக்களுக்காக அளிக்கப்பட விருதை ஏற்கும் நிகழ்ச்சியில் மோடி அரசின் மீது அவர் வைத்த விமர்சனங்கள்தான் காவி பாசிஸ்டுகள் அவரைக் குறிவைக்கக் காரணம்.

அரசு அதிகாரங்களில் ‘இந்துத்துவ’ என்ற பார்ப்பன பாசிச சக்திகளின் மேலாதிக்கத்தை இயல்பாக்கும் போக்கு குறித்தும், மோடியின் புரவலர்களுக்காக அடகு வைக்கப்படும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் குறித்தும், கூர்மையடையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் அருந்ததிராய் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாது இப்போது இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் இது கும்பல் வன்முறைகளின், படுகொலைகளுக்கான காலம் என்றும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஆபத்தான காலம் என்றும் கூறியிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 62 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனைகள் நடத்தி அவர்களின் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றியிருக்கின்றனர். பங்கி நாகண்ணா என்ற தொலைக்காட்சி நிருபரையும், ப்ரகதிசீலா கர்மிகா சமக்யா என்ற அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சந்திரா நரசிம்மலு என்பவரையும் ‘மாவோயிஸ்ட்களுடன்’ தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறி UAPA சட்டத்தின்கீழ் கைது செய்திருக்கின்றனர்.

கருத்துரிமையை கல்லறைக்கு
அனுப்பும் பாசிஸ்டுகள்

‘பத்திரிகைகள் காவி பாசிஸ்டுகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தினால் சீனா தொடர்பு;

மக்கள் போராளிகள் அம்பலப்படுத்தினால், கேள்விக்குள்ளாக்கினால் – அர்பன் நக்சல்கள்;

மலைவாழ் பழங்குடியினருக்காகப் போராடினால் – மாவோயிஸ்ட் தொடர்பு;

இஸ்லாமியர்கள் போராடினால் – ஐஎஸ்ஐஎஸ், பாகிஸ்தான் தொடர்பு;

கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்டால் – வெளிநாட்டு கைக்கூலிகள்’

என்று  கதையாடல்களை உருவாக்கி அவற்றை மக்கள் மத்தியில் பரவ விடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை காவி பாசிஸ்டுகள் உருவாக்கி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: பாசிஸ்ட்டுகளின் அடுத்த குறி அருந்ததிராய்!

இந்தியாவில் கடைசி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் ‘சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயகத்துக்காகவும்’, மதச்சார்பின்மைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் முன்னெடுக்க வேண்டிய எதிர்கட்சிகள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வைத் தோற்கடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு மாறாக, ‘நியாயமான நீதி விசாரணை இன்றி சிறையில் வாடும் இஸ்லாமியர்கள், தேசிய விடுதலைப் போராளிகள், புரட்சியாளர்கள் அனைவரையும்  உடனே விடுதலை செய்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பிரச்சினைக்காக போராடிய இயக்கங்கள், மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை  திரும்பப் பெறு!’ என்பதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிர்ச்சாரத்தின் மூலமாக நிர்பந்தத்தை உருவாக்க வேண்டும் என மா.லெ புரட்சியாளர்கள் முன் வைத்து போராடுகின்றனர்.

பாசிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து
இறக்குவதே உடனடி தேவை!

அடிப்படையிலேயே கோழைகளான பாசிஸ்டுகளின் இத்தகைய கைது, சிறைப்படுத்துதல் என்பது வெறுமனே சமூக, அரசியல் செயல்பாட்டாளர்களுடன், பத்திரிக்கையாளர்களுடன் நிற்கப்போவதில்லை. அவர்கள் நம்மிடமும் அடுத்தடுத்த சுற்றுகளில் வரவிருக்கிறார்கள். அதற்கு தேவையான சட்டங்களை புதிதாகக் கொண்டுவர இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அல்லது ஒரு பகிர்வோ போதும் அவர்கள் நம்மை சோதனை செய்வதற்கு அல்லது சிறையில் அடைப்பதற்கு. இதற்கெல்லாம் அஞ்சாமல் நமக்காக குரல் கொடுப்பவர்களுக்காக குரலை உயர்த்துவோம். நமது நண்பர்கள், உற்றார், உறவினர்களிடத்தில் காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்துவோம். NIA-வைக் கலைக்கவும், UAPA போன்ற கறுப்புச் சட்டங்களை ரத்துசெய்யவும், விசாரணை அமைப்புகளில், அதிகாரமாட்டங்களில் இருக்கும் காவிகளை களையெடுக்கவும், சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் முன்னணியாளர்கள் மீதுள்ள வழக்குகளை உடனடியாக இரத்து செய்து விடுவிக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக-வை வீழ்த்துவோம், INDIA கூட்டணியை ஆதரிப்போம். நாடு முழுவதுமுள்ள இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டுவோம்.  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்பந்தித்துப் போராடுவோம்.

ஒட்டு மொத்த மனித குலத்திற்கு எதிரான வர்க்க ஒடுக்குமுறைகளும், கருப்புச்சட்டங்களும் இல்லாத வர்க்கமற்ற சமுதாயம், அதாவது கம்யூனிச சமுதாயத்தில்தான் முழுமையாக சாத்தியமாகும் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம்.

  • மதியழகன்

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here