“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”

மதவெறி சக்திகள் அதிகார பீடங்களில் அமர்ந்து, வெறுப்பையே இந்தத் துணைக் கண்டத்தின் பிரதான அரசியலாக மாற்றத் துடிக்கும் இக்காலகட்டத்தில், ‘அன்பு’ என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது ஆளும் வர்க்கத்தின் பிளவுகளைத் தகர்க்கும் ஒரு மாபெரும் தத்துவார்த்த ஆயுதம். கடந்த மே 31 அன்று கடையநல்லூரிலும், ஜூன் 4 அன்று திருச்சியிலும் அரங்கேறிய அந்த இல்லற இணை ஏற்பு விழா, வெறும் இரண்டு தனிமனிதர்களின் சங்கமம் அல்ல; அது சாதி, மதம், வர்க்க எல்லைகளைத் தகர்த்து, ஏகாதிபத்திய நுகர்வுப் பண்பாட்டைத் தூக்கி எறிந்த ஒரு மாற்றுப் பண்பாட்டுப் புரட்சி!

கடையநல்லூர்: ஆடம்பரங்களை மறுத்த மாற்றுப் பண்பாட்டு மேடை!

திருச்சி மக்கள் அதிகாரத்தின் முன்னெடுப்பாளர் தோழர் ராஜா – ஸ்டெல்லா மேரி இணையரின் மகள் மருத்துவர் லில்லி சினேகா; கடையநல்லூரின் முற்போக்குச் சிந்தனையாளர் தோழர் கலீலூர் ரகுமான் – நசீபா பானு இணையரின் மகன் மருத்துவர் முகமது அனஸ். இருவருமே ஹோமியோ மருத்துவர்கள். இவர்களின் திருமண அழைப்பிதழின் முகப்பிலேயே “செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” என்ற குறுந்தொகை வரிகள், இந்த இணைப்பின் ஆழத்தைப் பறைசாற்றின.

பொதுவாக 2K கிட்ஸின் திருமணங்கள் என்றாலே ரீல்ஸ், மாப்பிள்ளை அழைப்பு, காதுகளைச் செவிடாக்கும் டிஜே (DJ) கொண்டாட்டங்கள், பல லட்சங்களில் மண்டப அலங்காரங்கள் என நுகர்வுச் சந்தைதான் ஆக்கிரமித்திருக்கும். ஆனால், கடையநல்லூர் மறவர் அரங்கம் முற்றிலும் வேறொரு மாடலாகக் காட்சியளித்தது.

அங்கே ஆடம்பரங்கள் இல்லை. மண்டபத்தின் மூலைகளில் பெண் அடிமைத்தனத்தின் எச்சமான சீர்வரிசைப் பாத்திரப் பண்டங்களோ, வரதட்சணைக் கெடுபிடிகளோ இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இரு மதங்களின் வேதவசனங்களோ, சடங்கு சம்பிரதாயங்களோ, அடையாளங்களோ இல்லை. மதக் குருமார்களான பாதிரியார்களோ, இமாம்களோ அங்கு வரவில்லை. ஆனால், அரங்கம் முழுக்க இஸ்லாமியத் தாய்மார்களும், சகோதரிகளும், முற்போக்குத் தோழர்களும் சரிபாதியாக நிறைந்து, தங்களின் வீட்டு நிகழ்வாக அதை மாற்றியிருந்தார்கள்.

தள்ளாத வயதிலும் பெண் விடுதலைக்காகப் போராடிய தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனை அங்கு பேரழகாக வீற்றிருந்தது. ஆணாதிக்கத்தின் அடையாளமான தாலி அங்கே இல்லை; மோதிர மாற்றமோ, மங்கலத் திலகமோ இல்லை. சமூகப் போராட்டங்களின் ஊடாக வளர்ந்த மணமக்கள் மேடையில் கம்பீரமாக நின்று, நெஞ்சை உலுக்கும் அந்தப் புரட்சிகர உறுதிமொழியை ஏற்றனர்:

“ஆண்பெண் பேதமின்றி சமமாக மதிப்போம்… எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் அதை ஜனநாயகப் பூர்வமாக, வெளிப்படைத்தன்மையோடு பேசித் தீர்த்துக் கொள்வோம்… சுயநலமாக வாழாமல் சமூகக் கடமைகளை உணர்ந்து செயல்படுவோம்!”

இந்த முற்போக்கு மொழிக்குக் கூடியிருந்த மக்களின் கைதட்டல் ஒலி சாட்சியாக ஒலித்தது. மொய் வைப்பதைத் தவிர்க்கக் கோரி அழைப்பிதழிலேயே அச்சிடப்பட்டிருந்ததால், வந்திருந்த உறவினர்கள் “கீழைக்காற்று வெளியீட்டகத்தின்” முற்போக்கு, வரலாறு மற்றும் சமூக விடுதலை சார்ந்த நூல்களை வாங்கி மணமக்களுக்குப் பரிசாக வழங்கி வாழ்த்தினர். இறுதியாகச் சுடச்சுட ஆட்டுக்கறி பிரியாணியோடு வயிறும் மனமும் நிறைய, கடையநல்லூர் மேடை ஒரு புதிய வரலாற்றை எழுதியது.

மேடையில் ஒலித்த கலகக் குரல்கள்: வர்க்க முரண்பாட்டின் பகுப்பாய்வு

திருவள்ளுவர் மாவட்ட மக்கள் அதிகாரத்தின் மூத்த தோழர் எழில்மாறன் தலைமையில் இந்த இல்லற இணை ஏற்பு விழா நடைபெற்றது.  தன்னுடைய தலைமை உரையில் மனிதர்களுக்குள் நடக்கும் திருமணங்களை ‘கலப்புத் திருமணம்’ என்று அழைப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தின் முதன்மையான ஆளுமைகள் ஆற்றிய உரைகள் வெறும் வாழ்த்துரைகள் அல்ல; அவை ஆளும் வர்க்கத்தின் சதியைத் தோலுரிக்கும் தத்துவப் பகிர்வுகள்.

லவ் ஜிகாத் அல்ல! ஆதி பாவமும் அல்ல! இரு மனங்களின் இசைவு, மதங்களின் அசைவு

தோழர் வாஞ்சிநாதன்: சட்டம் தரும் உரிமையும் சமூகத்தின் முரண்பாடும்

மணமக்களை வாழ்த்திப் பேசிய தோழர் வாஞ்சிநாதன், “வயது வந்த இருவர் சம்மதத்துடன் இத்திருமணம் நடக்கிறது. சட்டம் இதற்கு முழு உரிமை அளிக்கிறது. ஆனால், இந்தச் சமூகம் ஏன் இன்னும் இதுபோன்ற திருமணங்களை எளிதில் அனுமதிப்பதில்லை? காதல் என்றாலே ஏன் ஆவணக்கொலைகள் நிகழ்கின்றன?” என்ற கூர்மையான கேள்வியை எழுப்பினார்

அரசியல் லாபத்திற்காக இஸ்லாமிய வெறுப்பை விதைக்கத் துடிக்கும் சக்திகளைத் தமிழகத்தின் மத நல்லிணக்க மரபு எப்படி எதிர்கொள்கிறது என்பதை திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினை மற்றும் அன்றைய அரசின் 144 தடை உத்தரவு நடவடிக்கைகளைச் சான்றுகாட்டி விளக்கினார். “மத வேறுபாடுகளுக்கு இங்கு இடமில்லை என்ற சூழலைத் தக்கவைக்க, இதுபோன்ற மதமறுப்புத் திருமணங்கள் சமூகத் தேவை” என அழுத்தமாகப் பதிவு செய்தார்.

தோழர் கோவன்: இரத்த உறவாக மாறும் நல்லிணக்கம்

தன் கணீரென்ற புரட்சிகரப் பாடல்களோடு மேடையை அதிரவைத்த தோழர் கோவன், “மத நல்லிணக்கம் என்பது வெறும் மேடைப் பேச்சாக இல்லாமல், இந்த விழாவின் மூலம் அது இரத்த உறவாக மாறியிருக்கிறது” என்றார்.

பாசிச சித்தாந்தங்களும் ஆளும் வர்க்கமும் மக்களின் இணக்கத்தைக் கண்டு மதங்களின் ஒற்றுமை கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகின்றன என்ற விளக்கத்தை பாடல்களோடு கலந்து தோழர் கோவன் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை, சமகால இந்திய அரசியலின் போலி முகமூடியைக் கிழிக்கும் படி இருந்தது.

கவிஞர் மகாலட்சுமி தமுஎகச  நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. உடல்நலம் சரியில்லாததால் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் வாழ்த்துக கவிதை அனுப்பி இருந்தார்கள். தோழர் கார்க்கி அந்த கவிதையை உணர்வு பூர்வமாய் மேடையில் வாசித்தார்.

தோழர் கோம்பை அன்வர்: மனிதக் காதல் முதல் இறைக்காதல் வரை

காதலின் கவித்துவத்தை சங்க இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பேசிய தோழர் அன்வர், மனிதக் காதலுக்கு அப்பால் இருக்கும் ‘இறைக்காதல்’ என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தழுவியது என்பதைத் தத்துவார்த்தமாக விளக்கினார்.

ஏழாம் நூற்றாண்டில் ‘மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்’ என்று பாடிய ஆண்டாளையும், அதே காலகட்டத்தில் பாக்தாத்தில் வாழ்ந்த சூபி பெண் துறவி ராபியத்துல் அதவியா (ஹாதியா) குறித்தும் பேசினார். சித்தர் மற்றும் சூபி மரபில் வந்த குணங்குடி மஸ்தான் சாஹிப், “கண்ணே ரகுமானே… வேட்டைதான் பெரிதென்று வெறிநாயைக் கைபிடித்துக் காட்டில் புகலாமோ” என்று பாடியதைச் சுட்டிக்காட்டி, இன்று அதிகார வர்க்கம் மதவெறி எனும் தீயைக் கையில் எடுத்துக்கொண்டு இந்தியாவைத் துண்டாட நினைப்பதை ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்போடு மிக ஆழமாக விளக்கினார்.

தோழர் மருதையன்: சனாதனப் பொய்களை முறியடிக்கும் முற்போக்கு மரபு

கடையநல்லூர் மேடையின் இறுதி உரை தோழர் மருதையனுடையது. “இங்கு ஒருபுறம் முற்போக்குத் திருமணம் நடக்கும் அதே தருணத்தில்தான், ‘கவின்’ போன்ற இளைஞர்களின் ஆவணக்கொலைகளும் அரங்கேறுகின்றன. இத்திருமணங்களை அங்கீகரிக்க ஒரு சமூகச் சூழல் வேண்டும்” என்று கவலையோடு தொடங்கினார்.

முதல் சுதந்திரப் போரில் மருதுபாண்டியருக்குத் துணையாக நின்ற திப்புசுல்தான், ஹைதர் அலி காலத்து மத நல்லிணக்கப் போராட்டங்களை நினைவூட்டிய அவர், “மதம் கடந்த இந்த திருமணம் நடப்பதான் அடிப்படை மத நல்லிணக்கம். மத நல்லிணக்கம் இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. ஆனால் அண்மைக் காலங்களில் அந்த மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. அரசியலுக்காக மத வெறுப்பு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த சூழலில் மதம் கடந்த காதல் வர வேண்டும் என்றால் அதற்கான சூழல் – அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து பழகும் சூழல் – நிலவ வேண்டும். பல நூற்றாண்டுகளாக இங்கு இருந்த, இப்போது சீர் குலையத் தொடங்கி இருக்கும் அந்த சூழலை காப்பதற்கு இது போன்ற இணையேற்பு விழா உதவும். இது சமூகத் தேவை” என்றார்.

அதிமுக, பாஜக மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்பின் போலிப் புத்தியைச் சாடிய மருதையன், “மிருதங்கம் வாசிக்கும் பார்ப்பனர்கள், அது இரண்டாவது கன்று ஈன்ற பசுவின் தோலால் செய்யப்பட்டது என்பதை மறைத்துவிட்டு, மற்றவர்கள் மாட்டுக்கறி உண்பதை வைத்துக் கலவரம் செய்கிறார்கள். அவர்கள் செய்தால் சரி, மற்றவர்கள் செய்தால் தவறா? அந்தப் பார்ப்பனியப் பொய்யை இந்த மதமறுப்புத் திருமணம் முறியடித்துள்ளது” என்று அனல் பறக்கப் பேசி முடித்தார்.

திருச்சி: நுகர்வுச் சந்தைக்கு எதிரான வர்க்கப் பிரகடனம்

தென்காசி, கடையநல்லூர் மண்ணில் நிகழ்ந்த இந்தப் பண்பாட்டுப் புரட்சியை நேரில் காணத் தவறிய தோழர்களுக்காக, ஜூன் 4 அன்று திருச்சியில் மணமக்கள் அறிமுகமும் வரவேற்பு நிகழ்வும் மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் திருச்சி செழியன் தலைமையில் நடைபெற்றது.

தோழர் செழியன்: வர்க்கத்தால் தீர்மானிக்கப்படும் திருமணங்கள்

செழியன் தனது உரையில் கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரத்தை மிகக் கடுமையாகத் தாக்கினார். “கடந்த பிப்ரவரியில் வடமாநிலத்தில் அம்பானி வீட்டுத் திருமணம் 5000 கோடி ரூபாய் செலவில், ஆடம்பரமாக நடக்கிறது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வதெல்லாம் பொய்; உண்மையில் அவை ‘வர்க்கத்தில்’ (Class) தான் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த ஆடம்பரப் போட்டிகளால் நடுத்தர மக்கள் இரண்டு பவுன் தங்கம் கூட வாங்க முடியாமல், கடனாளியாகி, கல்யாணம் என்பதே இன்பத்திற்குப் பதில் பெரும் துன்பமாக மாறும் அவலம் நிலவுகிறது. பார்ப்பனியப் பிற்போக்குத் திணிப்புகளை நிராகரித்து, எளிய தமிழ் மரபுத் திருமணங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

தோழர் காளியப்பன்: குடும்பங்களில் தேவை ஜனநாயகம்

மணமக்களின் பெற்றோர்களான தோழர் ராஜா மற்றும் தோழர் கலீலூர் ரகுமானின் தசாப்த காலப் பாட்டாளி வர்க்க அரசியல் தியாகங்களை நினைவு கூர்ந்தார் தோழர் காளியப்பன். “நம்முடைய சமூகத்தில் ஜனநாயகம் பற்றிய புரிதல் என்பது வெறும் ஓட்டுப் போடுவதோடு முடிந்துவிடுகிறது. மேடைகளில் ஜனநாயகம் பேசுபவர்கள் தங்கள் குடும்பங்களில் ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள். ஜனநாயகம் என்பது ஒரு நிர்வாக முறை அல்ல; அது குடும்பத்தின் அடிப்படைப் பண்பாடாக மாற வேண்டும். வயது வந்த இருவர் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையில் பெற்றோர்கள் கூடத் தலையிடக் கூடாது என்ற முற்போக்குச் சிந்தனையை இக்குடும்பங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன” என வாழ்த்தினார்.

தோழர் ராஜூ : எங்களை இணைத்தது தியாகமே தவிர சந்தை அல்ல!

மேடையில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய வழக்கறிஞர் ராஜூ, முதலாளித்துவச் சந்தை மனித மதிப்புகளை எப்படிச் சிதைக்கிறது என்பதை விளக்கினார். “இன்று ஒரு மனிதனை அவனது நற்குணங்களை வைத்தோ, சமூகப் பொறுப்பை வைத்தோ இந்தச் சந்தை மதிப்பீடு செய்வதில்லை; அவனிடம் இருக்கும் கார், மொபைல், நகைகளை வைத்துத்தான் மதிப்பிடுகிறது. இந்தச் சூழலில் சாதியோ, மதமோ நமக்கு எவ்விதப் பாதுகாப்பையும் தராது; அமைப்பாகத் திரள்வதே பாதுகாப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த இரு குடும்பங்களுக்கும் தங்களுக்குமான பிணைப்பை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்: “2018-ல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தோழர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, தேசியக் கொடியை இறக்கினார்கள் எனச் சித்திரவதை செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது உழைக்கும் மக்களுக்காக எந்தப் பிரதிபலனும் பாராமல் சிறைக்கொடுமைகளை அனுபவித்த தியாகக் குடும்பம்தான் தோழர் கலீலூர் ரகுமானின் குடும்பம். எங்களை இணைத்தது முதலாளித்துவச் சந்தை அல்ல; மக்களுக்கான அந்த அளப்பரிய தியாகம் மட்டும்தான்!” என்று முழங்கினார்.

சிறகுகள் பொன் சுந்தரம் & பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்: சனாதனத்தின் குழிதோண்டிப் புதைப்பு

தோழர் ராஜாவை 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரிந்த சிறகுகள் அமைப்பின் தலைவர் பொன் சுந்தரம், “ராஜா தன் பிள்ளைகள் இருவரையுமே சமுதாயத்திற்கான படிப்பைப் படிக்க வைத்திருக்கிறார். ஒருவரை மருத்துவராகவும், இன்னொரு மகளை மாற்றுத்திறனாளிகளுக்கான தெரபிஸ்ட்டாகவும் படிக்க வைத்திருப்பதுதான் அவர் செய்த ஆகச்சிறந்த காரியம்” எனப் பாராட்டினார்.

இறுதியாகப் பேசிய அங்குசம் இதழின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், “நூறு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் தாலி இல்லாத சுயமரியாதை திருமணங்களை அறிவித்தார். இன்று இந்தச் சமூகம் மதங்களையும், சாதியையும் மறுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது என்ற நற்செய்தி இது. சனாதனத்தைக் குழிதோண்டிப் புதைக்க இதுபோன்ற திருமணங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க வேண்டும்” என்று உரையை நிறைவு செய்தார்.

முடிவுரை: விடியலுக்கான விதை!

வரவேற்பு அரங்கை விட்டு வெளியேறும்போது பலரது முகங்களிலும் ஒரு நிம்மதியும், சிந்தனை ரேகைகளும் ஓடுவதைக் காண முடிந்தது. “சீர்வரிசையும் வரதட்சணையும் இல்லாத ஒரு கண்ணியமான வாழ்க்கை நம் பெண் பிள்ளைகளுக்கும் அமையாதா?” என்ற ஏக்கம் அந்தப் பொதுப்புத்தியில் நேர்மறையான உந்துதலை ஏற்படுத்தியிருந்தது.

கடையநல்லூரில் விதைக்கப்பட்டு, திருச்சியில் கிளை பரப்பியிருக்கும் இந்த இல்லற இணை ஏற்பு விழா, வெறும் ஒரு குடும்ப நிகழ்வல்ல. இது பாசிச இருளுக்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்தின் மாற்றுப் பண்பாட்டுத் தளத்திலிருந்து ஏவப்பட்டிருக்கும் ஒரு முற்போக்கு ஏவுகணை! சடங்குகள் மடிந்து, சமத்துவம் பிறக்கும் இந்த விடியல்… ஒட்டுமொத்த சமூகத்திற்குமான பேராயுதம்!

மணமக்களுக்கு மக்கள் அதிகாரத்தின் புரட்சிகர நல்வாழ்த்துகள்!

தோழர் திருச்சி செழியன்
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here