கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் துணி துவைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு காரணமான திமுக நிர்வாகி உள்ளிட்டு 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திமுகவினரை கண்டித்து அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்க போகிறார். இந்த விசயத்தில் தமிழக அரசு வேறு எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? குற்றம் நடந்தவுடன் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நீதிமன்றத்தில்  விசாரணை செய்யப்பட்டு பிறகு தண்டனை விதிக்கப்படும். இதுதானே சட்ட நடைமுறை? அப்படித்தானே செய்ய முடியும்? அதை விடுத்து திமுக அரசு உடனே அந்த குற்றவாளிகளை அடித்துக் கொல்ல‌ வேண்டும் என்கிறாரா அண்ணாமலை?

இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கோ  அண்ணாமலைக்கோ ஒரு சிறிதளவாவது அருகதை உண்டா?

உத்திரபிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்ற ஒன்றிய பாஜக அமைச்சரின்  மகனை  பாஜக அரசு கைது செய்ததா? இல்லையே.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை

விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என பலரும் விடாப்படியாக போராடிய போதும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்த பிறகு தான் பாஜக அரசு குற்றவாளியை கைது செய்து. அண்ணாமலை அவர்களே, இதை ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழர்கள் நிலத்தின்மீது காறித்துப்ப நினைக்க மாட்டார்கள்.

இப்பொழுது இப்படித் துள்ளும் அண்ணாமலையே கள்ளக்குறிச்சி கனியாமூர்  பள்ளி மாணவி சாவின் போது  குற்றவாளிகளை தண்டிக்க கோரி நீங்கள் ஏதாவது பேசினீர்களா? இல்லையே! இந்த விவகாரத்தில் குற்றவாளிகளான பள்ளி  நிர்வாகிகளை காப்பாற்றுவதற்குத் தானே நீங்கள் முயன்றீர்கள். காரணம் என்ன? பள்ளி நிர்வாகிகள் ஆர் எஸ் எஸ், பாஜகவிற்கு பணத்தை அள்ளிக் கொடுப்பவர்கள் என்பது தானே?

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக  சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளார் பாஜகவின் ஆளுநர், ரம்மி ரவி. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.   உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அண்ணாமலைஅறிவிப்பு கொடுத்த பிப்ரவரி 20 ஆம் தேதி நாளிதழில் கூட கோவையில் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டது குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.

20.02.2023 தினகரன் பத்திரிக்கை செய்தி!

இந்த நிலையில் தான் ஆன்லைன் ரம்மி ஆடி சம்பாதிக்கும் பணத்தின் மீது வரி போடுகிறது ஒன்றிய பாஜக அரசு. அதாவது அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினருக்கு ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றி கவலை இல்லை . அந்த ரம்மியின் மூலம் யாராவது பணம் சம்பாதித்தால் அந்தப் பாவப்பணத்தில் இருந்தும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் பாஜகவினர் குறியாக இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மி சூதாட்டம்: ஏகாதிபத்தியத்தின் சிலந்தி வலை!

அண்ணாமலை போன்ற பாசிஸ்டுகளுக்கு மக்கள் சாவதை பற்றி கவலை இல்லை. தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு ஏதாவது ஒரு பிரச்சனை கிடைக்காதா என்று அலைகிறார்கள். அப்படி கிடைக்காவிட்டாலும்  இல்லாத ஒன்றையாவது ஊதிப் பெருக்கி பற்றவைத்து அதன் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க வழி கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

அதற்காக, மக்களை முட்டாளாக்குவதற்காக, பல்வேறு வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் அண்ணாமலையின் உண்ணாவிரத போராட்டம். அண்ணாமலையின் போராட்டத்தை நம்புவதற்கு தமிழ் மக்கள் தற்குறிகள் அல்ல என்பது மட்டும் போதுமா? போதாது.

ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் மக்கள் விரோத செயல்களை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல என்பதை செயலில் காட்டுவோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here