இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர மாநிலங்களில் ஒன்றான ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவை ஆண்டு வந்த பிஜு ஜனதாதள் என்ற கட்சியின் நவீன் பட்நாயக் தோல்வியடைந்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் பதிவான 64 சதவீத வாக்குகளில், பாசிச பாஜக 39.96 சதவீதம் வாக்குகளை பெற்று 78 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதே சமயத்தில் 40.22 சதவீதத்தை பெற்றுள்ள பிஜு ஜனதாதள் 51 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
2024 நாடாளுமன்ற முடிவுகள் வந்த போது மோடி தனது உரையில், ”இந்தியாவில் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கின்ற ஒன்பது மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது” என்று பெருமை பீத்திக் கொண்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பழங்குடி மக்கள் பாஜகவிற்கு 48 சதவீதம் வாக்குகளை அளித்துள்ளனர் என்பதற்கும், மோடியின் பழங்குடிகள் மீதான ’பற்றுதலுக்கும்’ நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஒடிசாவில் பாசிச பாஜகவின் வெற்றியை தீர்மானிப்பதில் மூன்று முக்கிய காரணிகள் வினையாற்றியது; ஒன்று, ஒடிசாவில் 2000-ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி 2023 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளத்தில் இணைந்த விகே பாண்டியன் பற்றிய மோடியின் கீழ்த்தரமான பிரச்சாரம். குறிப்பாக பூரி ஜெகநாதர் ஆலயத்தின் சாவியை அவர் தூக்கிக்கொண்டு ஓடிப் போய் தமிழகத்தில் பதுக்கி வைத்து விட்டதாக கீழ்த்தரமான அவதூறை கட்டவிழ்த்து விட்டார். இந்த கீழ்த்தரமான பிரச்சாரம் ஒடிசாவில் உள்ள மக்களிடம் ’மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை’ என்ற பிற்போக்குத்தனமான இனவாத கண்ணோட்டத்திற்கு சாதகமான அம்சமாக மாறியது.
குறிப்பாக ஒடியா என்ற மொழி பேசும் மக்களைக் கொண்டு 1936-களிலேயே பிரிட்டன் அரசினால் ஒரிசா மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014-ல் ஒடியா செம்மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. ஒரிய இனப்பெருமிதத்துடன் ஒடிசா மக்கள் உள்ளனர் என்பதால் தான், ’அந்நியர்கள்’, ’வெளி மாநிலத்தவர்கள்’, ’தமிழர்கள்’ இங்கு ஆள்வதா என்ற இழிவான பிரச்சாரம் அங்கு எடுபட்டுள்ளது. இது போன்ற வெறுப்பு பிரச்சாரங்கள் பாசிசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
தமிழகத்திற்கு வந்தால் தமிழ் வாழ்க என்று கூச்சலிடுவதும், தமிழகத்திற்கு வெளியில் சென்றவுடன் தனது சொந்த புத்தியை காட்டுவதும் பாசிச மோடியின் வாடிக்கையாகவே உள்ளது. சாதியையும், இனவெறியையும் தனது அரசியல் வெற்றிக்கு பயன்படுத்துகின்ற கீழ்த்தரமான பாஜக தான் நவீன முதலாளித்துவ வளர்ச்சியை இந்தியாவிற்கு கொண்டு வரப் போகின்றது என்பது படித்த அறிவாளிகளின் முட்டாள்தனமான கற்பனை ஆகும்.
இரண்டாவதாக, ஒடிசா போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்ற மாநிலங்களை கவர்வதற்காக நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுகின்ற ஜனாதிபதியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு என்பவரை தேர்வு செய்தது ஒரு பங்காற்றியுள்ளது. ஒடிசாவில் முப்பது மாவட்டங்களில் 62 பழங்குடி பிரிவினர்களை உள்ளடக்கி, சுமார் 32.85% மக்கள் தொகையில் முக்கிய வாக்காளர்களாகவும், மக்கள் தொகையில் முக்கிய நபர்களாகவும் முன்னணியில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
மூன்றாவதாக இந்தியாவில் 90களில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டின் செல்வ வளங்களை அடுத்தடுத்த சுற்றுகளில் சூறையாடிக் கொண்டே சென்றது. அதிலும் குறிப்பாக பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை அகழ்ந்தெடுத்து சூறையாடுவது கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தை வாரி வழங்கியது.
இதன் ஒரு பகுதியாக அம்பானி, அதானி, அனில் அகர்வால் குழுமத்தின் வேதாந்தா மற்றும் ஜிண்டல் குழுமம் போன்றவை அதன் கனிம வளங்களை சூறையாடி வருகிறது. அதற்கு எதிராக போராடுகின்ற பழங்குடி மக்களையும். அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் மாவோயிஸ்டுகளையும் ஒடுக்குவதில் நவீன் சிறிதும் சளைத்தவர் அல்ல.
கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசாவை ஆண்டு வருகின்ற நவீன் பட்நாயக் ஒடிசாவின் பொருளாதாரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதாரத்தையும், கல்வி மேம்பாட்டையும் வழங்குவதில் தேசிய சராசரியை விட ஒப்பீட்டளவில் முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் அதிகம் உள்ள காண்டியாத் என்ற சாதி மற்றும் பட்நாயக் ஆகிய மேல் சாதிகளின் பிரதிநிதியாக செயல்பட்டு வருவதால் ஒடிசாவில் கார்ப்பரேட் நலனுக்கு செய்யும் வசதிகள் அந்த மாநிலத்தில் சில முன்னேற்றத்தை கொண்டு வந்தது..
அதற்கு முக்கிய அடிப்படையாக இருப்பது ஒடிசாவில் கிடைக்கின்ற கனிம வளங்கள் ஆகும். இந்தியாவின் மொத்த கனிம வளங்கள், இயற்கை வளங்களில் ஏறக்குறைய 35 சதவீதத்தை ஒடிசா மட்டுமே பெற்றுள்ளது. இங்கு கிடைக்கின்ற இரும்பு, பாக்சைட், நிக்கல், நிலக்கரி மற்றும் இரும்பு போன்ற தாதுக்களை அள்ளிக் கொண்டு செல்வதற்கு இந்திய தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒருவான ஆர்சிலர் மித்தல் குழுமம் ஒடிசாவின் நவீன் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
2022-23 வரை கனிம உற்பத்தியில் 10.78 பில்லியன் அமெரிக்க டாலர் பொருமான கனிமங்கள் அகழ்ந்தெடுத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அந்நிய முதலீடு 162.71 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த வகையில் ஒடிசாவின் பொருளாதாரம் ஜிடிபியில் 7.74 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
ஒடிசாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மாநில நிதி வளத்துறை கார்ப்பரேஷன் ஒன்றையும் (OSFC), ஒரிசாவின் தொழில்துறை ஊக்குவிப்பு முதலீட்டு கழகம் (IPICOL) என்ற முதலீட்டுக்கழகத்தையும் உருவாக்கி உள்ளது. 2023-24 பட்ஜெட் காலத்தில் கல்விக்காக 13.2 சதவீதத்தையும், சுகாதார வசதிகளுக்காக 7.6 சதவீதத்தையும், கிராமப்புற வளர்ச்சிக்காக 7.1 சதவீதத்தையும், சாலை மற்றும் இருப்புப்பாதை வசதிகளுக்காக 7.9% சதவீத தொகையையும் நவீன் பட்நாயக் அரசு ஒதுக்கியது.
2024 பிப்ரவரியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வி.கே பாண்டியன் மூலமாக ’ஸ்ரீ மந்திர் பரிக்ரமா’ என்ற திட்டத்தின் கீழ் ஒடிசாவின் புகழ் பெற்ற கோவிலான பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை சுமார் 2000 கோடி ரூபாய் செலவு செய்து, சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு முயற்சியை மேற்கொண்டது. 900 ஆண்டுகள் பழமையான அந்த கோவில் நகரத்தை மூன்றே ஆண்டுகளில் சர்வதேச நகரமாக உருவாக்குவதன் மூலமாக உலக பாரம்பரியமிக்க நகரமாக மாற்ற முயற்சித்தது. இதற்காக பூரியில் சர்வதேச விமான நிலையத்தையும், தலைநகர் புவனேஸ்வரிலிருந்து பூரி வரை எட்டு வழி சாலையையும், மெட்ரோ ரயில் திட்டத்தையும் அறிவித்தது.
ஒடிசா பொருளாதார முதுகெலும்பாக 5டி என்றழைக்கப்படும் transformation initiative என்ற திட்டங்களை உள்ளடக்கி ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் உள்நாட்டு பொருளாதாரத்தில் 15 வது இடத்தில் உள்ளது.. இவை அனைத்தும் ஏகாதிபத்திய பொருளாதார சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சுயசார்பு பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்டது அல்ல. கார்ப்பரேட் சேவைக்கான பொருளாதாரமேயாகும்.
படிக்க:
♦ ஒடிசா-மாலிபார்பத் பழங்குடிகளின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்களை தடுப்போம்.
♦ “உலகத்தரத்தில் குழாயில் குடிநீர்!” தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்குகிறதா ஒடிசாவின் பூரி!
கடற்கரையோர மாநிலமான ஒடிசா கடந்த 50 ஆண்டுகளில் மிக கொடூரமான புயல்களை எதிர்கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகின்ற புயல் காற்றுகள் பெரும்பாலும் ஒடிசாவில் கரையை கடப்பது தான் இயற்கையாக உள்ள நிலைமை. இந்த இயற்கை பேரிடர் கடந்து ஒடிசா மாநிலத்தை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கட்டியமைத்துள்ள ஒடிசாவின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது, சாலைகளை விரிவாக்குவது போன்ற அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களும் ஒடிசாவின் முன்னேற்றம் என்ற பெயரில் மக்களின் தலையில் கட்டப்பட்டது.
இந்த தனியார்மயக் கொள்கைகளினால் ஒடிசாவில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். குறிப்பாக சுரங்கத் தொழில்களில் மாஃபியா கும்பலை போல ஒடிசாவின் செல்வங்களை சூறையாடினர். இதற்கு நேர்மாறாக ஒடிசாவில் உள்ள உழைப்பாளி மக்கள் நாடோடிகளாக மாறி நாடு முழுவதும் குறைந்த கூலிக்கு உழைக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நவீன் பட்நாயக் மீது இருந்த வெறுப்பை சாதகமாக்கிக் கொண்டு, இந்த சட்டமன்ற தேர்தலில் பரப்புரை செய்த பாசிச பாஜக வெற்றியை அறுவடை செய்துள்ளது. மேற்கண்ட மூன்று காரணங்களினால்தான் பாசிச பாஜக ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரசு கட்சியில் முன்னணி பிரமுகரான பிஜு பட்நாயக், பின்னர் ஜனதாவில் சேர்ந்ததும், அதன் பிறகு தனிகட்சி துவங்கி ஒடிசாவின் ஆட்சியை அமைத்ததும், அவரது மகன் நவீன் நீண்டகாலம் தனியாகவே ஆண்ட போதிலும், அவர் செய்த மிகப்பெரிய தவறு பாசிச பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததுதான். தேர்தல் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பாஜகவை மற்றுமொரு முதலாளித்துவ கட்சியாகவே மதிப்பீடு செய்கின்றது. இதில் கடந்த காலத்தில் திமுகவும் விதிவிலக்கல்ல.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்த பாஜக படிப்படியாக தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டது. பார்ப்பனர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மேல் சாதிகளின் வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு சதித்தனமான முயற்சிகளை மேற்கொண்டது. மற்றொருபுறம் மாநிலத்தில் உள்ள 32,85% பழங்குடிகளின் வாக்குகளை பெறுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
பாசிச பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களை 100 -கால் பாய்ச்சலில் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்த நவீன் பட்நாயக் இன்று அவர்களின் கையாலேயே முதுகில் குத்தப்பட்டு, ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை கைவிட்ட பாசிச மோடி ஒடிசாவில் தனக்கு கிடைத்த ஆதரவை ஊக்குவிக்கும் விதமாக ’ஜெய் ஜெகன்நாத்’ என்ற முழங்கினார். அதையும் மோடியின் பக்தர்கள் கைதட்டி வரவேற்றனர்.
கார்ப்பரேட் சேவையை செய்வதற்கு வெறித்தனத்துடன் தமிழர்கள் ஜெகநாதர் கோவில் சொத்துக்களை திருடி விட்டார்கள் என்றும், பழங்குடி மக்களின் இரட்சகர் நானே என்ற பெயரிலும், மோடி செய்த மோசடியான பரப்புரைகளில் பலியாகி, ஒடிசா மோசமான நேரடி பாஜகவின் ஆட்சியின் கீழ் வீழ்ந்துள்ளது.
- மருது பாண்டியன்.