பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை பொதுமேடையில் அமித்ஷா கண்டித்த விதம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. என்ன பேசினார் அமித்ஷா என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவரின் பேச்சில் குரூரம் தெரிந்தது.

இது குறித்து செய்தியாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் கேள்வி எழுப்பியபோது பதில் ஏதும் அளிக்காமல் சட்டென்று கிளம்பினார்.

அமித்ஷாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பையும், தமிழிசைக்கு ஆதரவான கருத்துக்களையும் உருவாக்கியது.

கேரள காங்கிரஸ் X பதிவில் “இதுதான் பெண்களுக்கு எதிராக பாஜகவின் கலாச்சாரம் மற்றும் நடத்தை. சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும் முன்னாள் ஆளுநருமான நீங்கள் குற்றப் பின்னணி உடையவரிடமிருந்து இருந்து இதுபோன்ற அவமதிப்பை சகித்துக் கொள்ளக் கூடாது” என தனது அனுதாபத்தை தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் பாஜக என்ற பாசிச கட்சி மக்கள் மத்தியில் பிரபலமாக தமிழிசையும் முக்கிய காரணம். 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற அவர் தாமரை மலர்ந்தே தீரும் என்று விடாப்படியாக போராடினார். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தாமரை தமிழ்நாட்டில் எங்கும் மலரவில்லை. அதன் பிறகு அவரை கழட்டிவிட திட்டமிட்ட பாஜக, தெலுங்கானா ஆளுநர் பதவி அளித்தது. அங்கும், புதுச்சேரியிலும் சங்பரிவார் கும்பலுக்கு ஆதரவாக தனது வேலையை தொடர்ந்தார்.

பாசிச கட்சியின் பிரதிநிதியாக தமிழிசை இருந்தாலும் தமிழ்நாட்டில் அவருக்கு சாப்ட் கார்னர் உண்டு. பாஜகவில் உள்ளவர்களை சங்கி என்று அழைத்தாலும் தமிழகத்தில் பாஜகவின் சார்பாக மீம் கண்டென்ட் கொடுக்கும் நபராக தமிழிசை இருந்ததால் அக்கா என்று அழைத்தனர் சமூகவலைதள வாசிகள்.

அண்ணாமலையை இன்று அணுகுவது போல் தமிழிசை அணுகுவதில்லை. ஆனால் அவரது கட்சியிலேயே அவருக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. காரணம் அவர் பெண் என்பதினால் மட்டுமல்ல அவர் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற காரணமும் உண்டு.

தமிழகத்தில் பாஜக முதலில் கால் பதித்த இடம் என்றால் கன்னியாகுமரி மாவட்டம். அங்கு மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிர்ப்பாளர்கள் குறைவாகவே இருந்தனர். அதனாலேயே பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பின்னாளில் ஆக முடிந்தது.

கன்னியாகுமரி நாடார் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதி. அந்த காரணத்தினாலே அந்த சமூகத்தில் செல்வாக்கு பெற்ற நபர்களை பாஜக வளைத்து போடுகிறது. மற்றபடி அந்த சமூகத்தின் மீதான அக்கறை எல்லாம் கிடையாது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன அடக்குமுறைக்கு ஆளான சமூகங்களில் நாடார் சமூகமும் ஒன்று. அதன்படி பார்த்தால் சனாதானிகளுக்கு எதிராகத்தான் அவர்கள் நிற்க வேண்டும். மாறாக பொன்னார், தமிழிசை போன்றோர் சனாதனத்தின் பக்கம் இருக்கிறார்கள்.

தமிழிசை, எல்.முருகனுக்கு பிறகு பாஜகவின் தலைவரான அண்ணாமலை முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்ததனால் தமிழ்நாட்டில் உள்ள ரவுடிகளை பாஜகவில் தாராளமாக இணைத்தார். குற்ற வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக பல ரவுடிகள் கமலாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். இன்று தமிழக பாஜக ரவுடிகளின் கூடாரமாய் இருப்பது உண்மைதான்.

தேர்தலில் தோல்வியடைந்த தமிழிசை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூட்டணி என்பது தேர்தல் வியூகம் என்றும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நாங்கள் வெற்றிப் பெற்றிருப்போம் என்றும், இதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒத்துவரவில்லை என்றும் பேட்டியளித்திருந்தார். தமிழக பாஜகவில் ரவுடிகள் அதிகமாக உள்ளனர். நான் இருந்தவரை அப்படி இல்லை என்றும் அண்ணாமலையை டார்கெட் செய்து பேசியிருந்தார்.

இந்த பேட்டிக்கு பிறகு அண்ணாமலையின் வார் ரூம் தமிழிசையை சமூக வலைதளங்களில் அட்டாக் செய்ய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழிசை சமூக வலைதளங்களில் எல்லை மீறி பதிவிடும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் பேட்டி அளித்தார்.

ஆனாலும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் விடுவதா இல்லை தமிழிசையை தொடர்ந்து தாக்கி எழுதினார்கள். தமிழக பாஜகவுக்குள் அண்ணாமலை தரப்பு, தமிழிசையின் சீனியர் தரப்பு என்று மாறி மாறி தாக்கி கொண்டார்கள்.

இது உச்ச கட்டத்தை அடைந்த பின்புதான் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசையை பொது மேடையில் காட்டமாக அமித்ஷா கண்டிக்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அமித்ஷாவுக்கு நன்றாகவே தெரியும் பாஜக என்ற கட்சியே ரவுடிகளாலும் கொலைகாரர்களாலும் வளர்ந்த கட்சி என்று. அமித்ஷாவே போலி என் கவுண்டர் வழக்கில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்தார் என்று நாடறியும். நீதிபதி லோயாவின் மரணம் இன்னமும் மர்மமாக இருக்கிறது.

தமிழிசைக்காக பலரும் அனுதாபப்பட்டு பதிவிடுவதை பார்க்க முடிகிறது. அனுதாப படும் அளவுக்கு தமிழிசை நேர்மையான நபரா? நேர்மையான நபர் என்றால் ஏன் பாஜகவில் சேர்ந்தார்? சங்கிகள் இஸ்லாமியர்களை நர வேட்டையாடிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர் தானே இந்த தமிழிசை.

படிக்க:

♦ தமிழிசையின் ஒப்பாரி!

♦ கன்னியாகுமரி: மண்டைக்காட்டில் கலவரத்தை தூண்டி வரும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்!

மாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என்று விமானத்தில் முழங்கிய போது காவல்துறையில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் ரவுடிகளை கொண்டு மிரட்டியவர் தானே இந்த தமிழிசை.

ஸ்டெர்லைட் படுகொலையில் 13 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஸ்டெர்லைட் முதலாளிக்கு ஆதரவாக நின்றவர் தான் இந்த தமிழிசை.

அவர் எந்த இடத்திலும் பாசிஸ்டுகளுக்கு எதிராக நின்றதில்லை. மக்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்ததும் இல்லை. அப்படி இருக்கும் போது நாம் ஏன் தமிழிசைக்காக அனுதாபப்பட வேண்டும்.

பாஜகவில் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையிலான பிரச்சனை அவர்கள் கட்சியில் நடக்கும் நாய் சண்டை. ஆகையால் இதனை புறந்தள்ளி விட்டு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவோம்.

நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here