2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜக பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து தனது வெற்றியை அறிவித்துள்ளது. தனி ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதிலும் தனது அடிவருடிகளையும், பிற்போக்கு சக்திகளையும் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக் கொண்டு பெரும்பான்மையை விட சில சீட்டுகள் அதிகமாக பெற்றுள்ளனர் என்பதால் இந்திய ஒன்றியத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்கின்ற உரிமையை எடுத்துக் கொண்டுள்ளனர்.
தேர்தலின் மூலம் மட்டுமே பாசிச பாஜகவை வீழ்த்த முடியாது என்பதால் தான், ”தேர்தலில் தோற்கடிப்போம்” என்ற முழக்கத்தை மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன் வைத்தன. இந்த முழக்கத்தின் மூலம் தமிழகம் மட்டும் புதுச்சேரியில் லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் பாசிச பாஜகவிற்கு எதிரான அரசியலை கொண்டு சென்றுள்ளனர்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள முடியாத அல்லது விரும்பாத ஜனநாயக சக்திகள் அனைவரும் பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஒன்றுபட்டு நின்றனர். இந்த முயற்சியின் மூலம் மக்களிடமிருந்து கணிசமான அளவு பாசிச பாஜகவை தனிமைப்படுத்தி உள்ளனர் என்ற போதிலும், பாஜகவின் அடித்தளம் அப்படியேதான் உள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலின் நிகழ்ச்சி போக்குகளை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தான் தீர்மானித்தது. அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை தனது வர்க்க நிலைமைக்கு ஏற்ப அமுல்படுத்திய பாஜக, பெரும்பான்மை மக்களை இந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட விடாமல், அன்றாடம் வேறொரு பிரச்சினையை நிகழ்ச்சி நிரலாக முன் வைத்தது. இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஓட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினர்.
மூன்றாவது முறையாக மீண்டும் அதே வழியில் பயணத்தை செய்வது பாசிச பயங்கரவாத ஆட்சியை முழுமைபடுத்துவதற்கு உதவுமே ஒழிய அதற்கு எதிராக போராடுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தை ஓர் அணியின் கீழ் கொண்டு வராது என்பதால் நிகழ்ச்சி நிரலை நாமே தீர்மானிப்போம்.
அதற்கு முன்பாக கடந்த பத்தாண்டு காலம் பாசிச பாஜகவின் செயல்பாட்டை பற்றி பருந்து பார்வையில் பார்ப்போம். இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் செய்திகள் அனைவருக்கும் சென்றடைந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப், முகநூல் பக்கங்கள், இன்ஸ்டாகிராம் போன்றவை மூலமாக செய்திகள் சாதாரண மக்கள் வரை சென்றடைந்து வருகிறது.
ஆனால் இந்த செய்திகளை தனித்தனியாகவும், துண்டு துண்டாகவும் புரிந்து கொள்கின்ற மக்களால் இதற்கு பின்னால் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் மற்றும் பொருளாதார, பண்பாட்டு காரணிகளை புரிந்து கொள்ள இயலவில்லை.
இதனால்தான் மீண்டும், மீண்டும் போலி ஜனநாயகம் அல்லது பாசிசம் ஆகிய எதிரெதிர் துருவங்களில் ஒன்றின் கீழ் வீழ்ச்சியடைகின்றனர். பத்தாண்டு காலம் கிடைத்த பாரிய அனுபவத்திலிருந்து படிப்பினைகளை பெறுவோம். ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பதை நோக்கி விரைவாக மக்களை அரசியல்படுத்துவோம்.
முதலாவதாக தேர்தல் வாக்குறுதியாக பாசிச பாஜக தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க உத்திரவாதமளிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக இந்திய மக்களை பட்டினிக் கொடுமையின் கீழ் தள்ளியது, வேலையில்லா திண்டாட்டத்தை பல மடங்கு பெருக்கியது. இதன் காரணமாக குறைந்த கூலிக்கு தனது உழைப்பு சக்தியை விற்கின்ற கொடூரமான நிலைக்கு இந்திய உழைக்கும் மக்களை தள்ளியுள்ளது.
மற்றொருபுறம் ஏற்கனவே நிலவுகின்ற தொழிலாளர்களின் நலவுரிமை சட்டங்களை படிப்படியாக ஒழித்துக் கட்டி அவர்களை கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது. பெயரளவிலான தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளையும் பறித்துக் கொண்டு தொழிற்சங்கங்களின் மூலம் போராடுகின்ற உரிமைகளையும், வேலை நிறுத்த உரிமைகளையும் சட்டவிரோதமாக மாற்றியுள்ளது. இதற்கு நேர் மாறாக தன்னுடைய தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (BMS) மற்றும் பல்வேறு கிளை அமைப்புகளில் தொழிலாளி வர்க்கத்தை இணைத்துள்ளது.
படிக்க:
♦ உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
♦ மோடியை விமர்சித்தால் கைது சிறை! தலைவிரித்தாடும் பாசிசம்!
தொழிலாளர்களின் சேமிப்புத் தொகையான பிஎப் தொகையிலிருந்து கணிசமான தொகையை சூறையாடியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துவங்கி கார்பரேட் நிறுவனங்கள் வரை வேலை செய்கின்ற தொழிலாளர்கள் அனைவரையும் தொழிற்சாலைகளில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகிறது. அதாவது தொழிலாளர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கின்ற பொறியமைப்பை உருவாக்கி தொழிற்சாலைகளை ராணுவ கூடாரங்களை போல மாற்றியுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகளில் தங்கு தடையற்ற கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டி உள்ளது.
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வருடம் தோறும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப் போவதாக பாசிச மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக தொழிற்சாலைகளில் உள்ள இளம் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் இன்றியும், பணி பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். தனது உரிமைகளுக்காக போராடுகின்ற தொழிலாளர்கள் பல்வேறு ஆலைகளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர் பட்டாளத்தை கொண்டு இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் என்ற ’அக்னிவீர்’ காண்ட்ராக்ட் ராணுவ வீரர்களை உருவாக்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் அரசு அலுவலர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், படிப்பாளிகளுக்கும், அறிவுத்துறையை சேர்ந்தவர்களுக்கும் வாழ்க்கை பாதுகாப்பு உத்திரவாதம் தருவதாக வாக்குறுதி அளித்தது. அவர்களின் சிறு சேமிப்புகளை டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் வங்கிகளில் மூலமாக பரிவர்த்தனை செய்ய வைத்தது. அவர்களுக்கு ஆசை காட்டி அதனை பங்கு சந்தையில் சூதாடுவதற்கு வழிவகுத்தது. பங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் கொட்டப் போவதாக கதை அளந்தனர்.
செயற்கையாக பங்குகளின் மதிப்புகளை உயர்த்தி வந்ததால் சாதாரண நிகழ்வுகளின் போது கூட திடீரென்று வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் பங்கு சந்தை முதலீட்டாளர்களான அரசு அலுவலர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், படிப்பாளிகளுக்கும், அறிவுத்துறை சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கும் வருவாய் திவாலாகி, கார்ப்பரேட் முதலாளிகளின் ஒரு பிரிவினரான அம்பானி, அதானிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை லாபமாக கொட்டியது.
ஊழல் ஒழிப்பு என்பதை தனது பிரதான முழக்கமாக கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ஊழல் நடத்தியுள்ளது என்பது மட்டுமின்றி ஊழலை சட்டபூர்வமாகவும் நிறுவனமயமாகவும் ஆக்கியுள்ளது.
மத்திய கணக்குத் தணிக்கை துறை (CAG) முன் வைத்தபடி 7 லட்சம் கோடி ஊழல், வியாபம் ஊழல், ரபேல் ராணுவ விமானங்களை வாங்குவதில் ஊழல், அலைக்கற்றை ஒதுக்குவதில் ஊழல், நாடு முழுவதும் கல்வியை தனியார்மயமாக்குவதில் கார்ப்பரேட் கல்வி முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி லாபம் கிடைப்பதற்கு செய்யப்பட்ட ஊழல், நிலக்கரி வாங்குவதில் ஊழல் என்பது துவங்கி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சுமார் 60,000 கோடி செலவு செய்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தது வரை ஊழலில் உச்ச கட்டத்தை எட்டியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக செயல்பட்டது. இதன் ஒருபகுதியாகவே நைனார் நாகேந்திரன் பணம் பட்டுவாடா செய்வதற்கு வைத்திருந்த 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
பாசிச பாஜகவும் மோடியும் விவசாயிகளுக்கு அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் விவசாயத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கின்ற வகையில் அவர்களின் கையில் உள்ள நிலங்கள் படிப்படியாக ஒப்பந்த விவசாயம், குத்தகை விவசாயம் என்ற பெயரில் பறிக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விவசாய நிலங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகவே பல்வேறு மாநிலங்களில் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி உள்ளனர். இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளியும், ’விவசாயிகளாக’ மாறுவதற்கு துணை புரிந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் ஒழித்துக் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
விவசாயிகளை வாழ வைப்பது இருக்கட்டும். அதற்கு நேர்மாறாக உ.பி, பீகார், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வீட்டுக்கு பிள்ளைகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வீட்டுக்கு பிள்ளைகள் படிப்பறிவற்றவர்களாக மாற்றப்பட்டது மட்டுமின்றி, தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக நாடோடிகளாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.
வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ள தமிழகம், கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட தொழிற்சாலை பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்று கிடைக்கின்ற வேலைகளை செய்கின்ற தினக்கூலிகளாக கசக்கி பிழியப்படுகின்றனர்.
வியர்வை கூடங்களில் வாழ்ந்து வரும் அவர்களது அவல வாழ்க்கையை பற்றி விவரித்தால் பல பக்கங்களுக்கு போகும்.. எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி மருத்துவ, சுகாதார வசதிகள் இன்றி, மொழி தெரியாமல், உணவு முறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள முடியாமல் புதிய சூழ்நிலைகளுக்கு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு படாத பாடு படுகிறார்கள். புதிய பாலங்களை கட்டுவதற்கும், நான்கு வழி -ஆறு வழி, எட்டு வழி சாலைகளை போடுவதற்கும் புதிய நீர் தேக்கங்களை கட்டுவதற்கும் அனலில் வெந்து தவிக்கிறார்கள்.
மறுபுறம் அரைகுறையாக நடக்கின்ற விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகின்ற விலை கிடைக்காத காரணத்தினால் விவசாய உற்பத்தி என்பது சூதாட்டமாக மாறியுள்ளது. ஒரு எடுத்துக்காட்டாக தக்காளி, வெங்காயம் போன்றவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்ற காலங்களில் கொள்முதல் விலை பல மடங்கு குறைக்கப்பட்டு, உற்பத்தி செய்ய செலவான தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் நொந்து போகின்றனர்.
அதேபோல உணவு தானியங்களான நெல், கோதுமை துவங்கி பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் ஆகிய அனைத்தும் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு மதிப்பு கூட்டப்பட்டு நகர்ப்புற சந்தைகளுக்கு வரும்போது விவசாயிகளிடம் கொள்முதல் செய்த விலையை காட்டிலும் பல மடங்கு அதன் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிடைக்கும் லாபம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதலில் இறங்கியுள்ள அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தான்.
நாட்டின் முக்கியமான துறைகளைப் பற்றி மட்டுமே நாம் இந்த கட்டுரையில் முன் வைத்துள்ளோம். இன்னும் சிறு குறு தொழில்கள், உள்நாட்டு தயாரிப்பு என்ற பெயரில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக உற்பத்திக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ள சிறு குறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மற்றும் சிறு முதலாளிகளின் வாழ்க்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பறிபோயுள்ள வர்த்தகர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் வாழ்க்கை, கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் ஊடகங்களின் மீதான பாசிச பாஜகவின் தாக்குதல், சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுகின்ற சமூக செயற்பாட்டாளர்களின் மீது கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் NIA போன்ற கொலைகார நிறுவனங்களைக் கொண்டு பொய் வழக்குகளை போடுவது, ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அனைத்தும் பாசிச பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகள் என்றே கூறலாம்.
எனவே பாசிச பாஜக பெற்றுள்ள வெற்றியானது அதாவது தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்த மோசடிகள்; வாக்காளர்களுக்கு பல்லாயிரம் கோடி வாரி இறைத்தது; கூட்டணி கட்சிகளை விலைக்கு வாங்கி தனது கட்சியில் சேர்த்துக் கொண்டது; பல்வேறு கட்சிகளில் உள்ள ஊழல் மற்றும் கிரிமினல் பேர்வழிகளை தனது வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்து கட்சியில் சேர்த்துக் கொண்டது மட்டுமின்றி, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டுகளை வழங்கியது போன்ற அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்வதற்கும், அதனை ஒருங்கிணைந்த முறையில் பிரச்சாரம் செய்வதற்கும் பாசிச எதிர்ப்பாளர்கள் நாடு தழுவிய அளவில் தவறிவிட்டதால் தற்காலிகமாக கிடைத்துள்ள வெற்றி என்றே கூற முடியும்.
தேர்தல் வெற்றிக்கு அப்பால் மேற்கண்ட அனைத்து வர்க்கங்களையும், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சூறையாடி வருகின்ற பாசிச பாஜகவின் செயல் திட்டங்களை முன்வைத்து நிகழ்ச்சி நிரலை நாம் உருவாக்குவதன் மூலமாக அவர்களை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி, பாசிச, ஆரவாரப் பிரச்சாரத்தின் கீழ் பலியாகியுள்ள மக்களை மீட்டெடுக்கவும் முடியும்.
இதனை செய்யும்போதே மக்களை திசைதிருப்புகின்ற இந்துத்துவா பிரச்சாரங்கள், ராமர் கோயில் கட்டியது குறித்த சாதனைகள், பார்ப்பன மற்றும் மேல் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கி அனைத்து துறைகளிலும் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி இருப்பது போன்ற அனைத்தையும் ஒவ்வொரு ரகத்திலும் அவர்களின் பித்தலாட்டங்களையும், வர்க்க சார்பையும் அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்த முறை நிகழ்ச்சி நிரலை நாம் தீர்மானிப்போம்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆகக்கேடான வடிவமாக உருவெடுத்துள்ள கார்ப்பரேட் காவி பாசிசம், அதன் வர்க்க சார்பு குறித்து தொடர்ச்சியாக மக்களிடம் அம்பலப்படுத்துவதும் அதற்கு எதிராக நாட்டு மக்களை ஓரணியில் கீழ் திரட்டுவதுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழிமுறையாகும்.
- நன்னிலம் சுப்புராயன்.