ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

பங்கு சந்தை சூதாட்டம் அதில் ஏற்படுகின்ற ஏற்றம் மற்றும் வீழ்ச்சி சாதாரண மக்களிடம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் நடத்தி வருகின்ற வரி யுத்தமானது உலக பணக்காரர்களை திடீரென்று போண்டியாக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

காதிபத்திய முதலாளித்துவத்தின் உயிர் நாடி பங்கு சந்தையில் இருக்கிறது என்ற உண்மை தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  பிற நாடுகளின் மீது விதித்துள்ள வரியின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருட்களை உற்பத்தி செய்வது; அதனை சந்தைப்படுத்துவது; உலக அளவில் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவிற்கு அதிகமாகவே மீமிகு உற்பத்தியில் ஈடுபடுவது என்று லாபவெறியில் குதித்துள்ள ஏகபோக ஏகாதிபத்திய நிதி மூலதனம் உலகை சூறையாடுவதற்கு குறுக்கு நெடுக்காக அலைந்து கொண்டு உள்ளது.

இந்த நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு பதிலாக ஆலைகளை கட்டுப்படுத்துகின்ற, உற்பத்தியை கட்டுப்படுத்துகின்ற பங்கு சந்தைகளின் மூலம் தனது லாப வேட்டையை ஆடி வருகிறது.

சமீபகாலம் வரை உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தவர்தான் வாரன் பஃபெட். இவர் எந்த தொழிற்சாலையின் அதிபதியும் இல்லை. ஆனால் ஒரு பங்கு சந்தை சூதாடி.

இன்று கிரிப்டோகரன்சியில் பணத்தை அள்ளுவதற்கு அதிகாலையில் விழித்திருந்து லாபம் பார்க்கின்ற தரகர்கள், ஆர்வலர்கள் போல பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை கண்டறிந்து பங்குகளை வாங்கி விற்பது என்ற முறையில் உலக பணக்காரன் பட்டியலில் நீடித்து வந்தார்.

முதலாளித்துவத்தின் இழிநிலை என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது. பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு தகிடுதத்தங்களை செய்வது மட்டுமின்றி, எந்தப்  பொருளை வாங்குவது என்பதை நுகர்வாளர் மூளையில் திணிப்பதற்கு பல ஆயிரம் கோடி விளம்பரங்களை தயாரித்து ஊடகங்களின் மூலம் மூளையில் திணிக்கின்றனர்.

தேவையற்ற பொருள்கள் அனைத்தையும் மனிதர்களுக்கு தேவை என்ற பிரமையை உருவாக்கி மீள முடியாத கடன் வலையில் அவர்களை தள்ளுவது; அதன் மூலம் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நகர்வு பொருட்களை வாங்கி குவிக்கின்ற வெறித்தனத்தை உருவாக்கி வருகிறது ஏகாதிபத்திய நிதி மூலதனம்.

இந்த நிகழ்ச்சி போக்கில் ஊக வாணிபத்தின் மூலம் செயற்கையாக பங்கு சந்தையில் உருவாக்கப்படுகின்ற குமிழி பெருக்கங்களை கண்டு பிரமையடைந்து பங்கு சந்தையில் மூலதனம் போடுகின்ற நடுத்தர வர்க்கம் மற்றும் ஊரை கொள்ளையடித்துக் கொண்டுள்ள முதலாளித்து வர்க்கம் அவ்வப்போது சில சமயங்களில் எதிர்பாராத வீழ்ச்சியில் வீழ்கிறது.

அதுபோலத்தான் தற்போது அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் நடத்தி வருகின்ற வரி யுத்தமானது உலக பணக்காரர்களை திடீரென்று போண்டியாக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச வியாபாரம் மற்றும் பங்கு சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (-1.22%) 75,365 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து (-1.49) 22,904 புள்ளிகளில் நிலைத்தது.

அவரின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிப்பு அமலாகிறது. மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் வரி விதிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பவர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆவர். இவருக்கு சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எலான் மஸ்க்கிற்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

படிக்க:

பங்கு சந்தையில் 32 லட்சம் கோடி இழப்பு! யாருக்கு லாபம்?

பங்குச்சந்தையில், மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க உதவிய மோடி அமித்ஷா கும்பல்!

இவர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது அதனால் அவர்கள் சொத்து மதிப்பு குறைந்து விடும் என்று நாம் ஏமாந்து விடக்கூடாது. முகநூல் பக்கத்திற்கும், வாட்ஸ் அப் பக்கத்திற்கும், ஆன்லைன் வர்த்தகத்திற்கும், எக்ஸ் தளத்திற்கும் அடிமையாகி கிடக்கின்ற அதன் பயனாளர்கள் கட்டண உயர்வு மற்றும் பயன்பாட்டு வரி ஆகியவற்றினால் போண்டியாக்கப்பட போகின்றனர்.

இதனால் பங்கு சந்தை சூதாட்டம் அதில் ஏற்படுகின்ற ஏற்றம் மற்றும் வீழ்ச்சி சாதாரண மக்களிடம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வேளாண் துறை, அதிலும் குறிப்பாக மீன் இறக்குமதி துறை, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியன பாதிக்கப்படும்.

தொழில் துறையில் மருந்துகள் துறை, நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் துறை பாதிக்கக்கூடும். ரசாயனத் துறை, மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் மெஷினரி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்

எங்கோ நடக்கிறது நமக்கு இதனால் பாதிப்பு இல்லை என்று ஏமாளித்தனமாக இருக்கக் கூடாது என்பதை தான் பங்கு வீழ்ச்சிகள் மற்றும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைவது நமக்கு உணர்த்துகின்ற பாடமாகும்.

  • முகம்மது அலி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here