2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை உலுக்கிய பாசிச பாஜகவின் பங்கு சந்தை மோசடி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை சுயாதீன அமைப்பினால் வெளியிடப்பட்டது என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியாவில் உள்ள பங்கு சந்தைகளை சோதித்தறிகின்ற, கண்காணிக்கின்ற அமைப்பான செபி (SEBI) அறிவித்திருந்தது.
1988 முதல் செபி (SEBI) செயல்பட்டு வருகிறது என்ற போதிலும், குறிப்பாக இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கியது முதல் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும்(MNC), தேசங்கடந்த தொழிற் கழகங்களும்(TNC) இந்தியாவில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை கையகப்படுத்துவது, லாபத்தில் இயங்கக்கூடிய தொழில்துறைகளை கட்டுப்படுத்துவது போன்ற அம்சங்களுக்கு துணை புரிகின்ற வகையில் பங்கு சந்தை மூலம் நிதியை திரட்டி கொள்ளலாம் என்பதற்கு தாராள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவது விற்பது தொடர்பாக பல்வேறு மோசடிகளை நடத்த துவங்கினார்கள் இந்தியாவில் உள்ள பார்ப்பன மற்றும் மேல் சாதி பிரிவினர். குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்டு தேசிய வங்கிகளில் உள்ள இருப்புத் தொகையை கூட கடனாக பெற்று வங்கியை சூறையாடிய ஹர்ஷத் மேத்தா ஊழல், பங்கு சந்தை ஊழலில் மிகப்பெரிய ஊழலாக சந்தி சிரித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மோசடிகள், பங்கு சந்தையில் நடந்து வந்தாலும் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய பங்கு சந்தையில் புழங்குகின்ற தொகை 416 டிரில்லியன் ரூபாய்களாக (2024) மாறியது. அதனால் ஊழலும் பல லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது.
இந்தப் பங்குகளை கட்டுப்படுத்துகின்ற குறிப்பிட்ட நிறுவனங்கள், அதாவது குஜராத்தை சேர்ந்த பனியா கும்பலான அதானி, அம்பானி போன்ற நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் அதிக லாபத்தை கொடுப்பதாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஈர்க்கப்பட்டனர். இந்த வகையில் இந்திய பங்கு சந்தையில் 2024 ஆம் ஆண்டில் சுமார் 12 கோடி பேர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2010 ஆம் ஆண்டில் வெறும் 1.8 கோடியாகவே இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் முக்கியமான விமர்சனம் என்பது பங்கு சந்தையில் செயற்கையாக சில பங்குகளின் மதிப்பை உயர்த்துவதும், அதன் பிறகு திடீரென்று அதை வீழ்ச்சியுற செய்வதும், இதன் மூலமாக முதலீட்டாளர்களின் கையில் உள்ள சேமிப்புகளை சில கார்ப்பரேட் நிறுவனங்கள், அதுவும் ஷெல் நிறுவனங்களின் பெயரில் உருவி கொள்வதும் மோசடிகளின் முலம் நடக்கிறது என்பதுதான் முக்கியமான அம்சமாக அம்பலப்படுத்தப்பட்டது.
இந்த அறிக்கையை மறுத்த செபி மோசடி எதுவும் நடக்கவில்லை என்று பம்மாத்து காட்டியதால் உச்சநீதிமன்றம் அதில் தலையிட்டு மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை காலில் போட்டு மிதித்த செபி பல மாதங்கள் விசாரணை நடத்துவதாக இழுத்தடித்த பிறகு சென்ற மாதத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சில உண்மைகள் இருப்பதாகவும் குறிப்பாக அதானி குழுமத்தைச் சார்ந்த சில நிறுவனங்கள் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை தனியாக விசாரணைக்கு உட்படுத்த போவதாகவும் அறிவித்தது.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஎல்) மற்றும் நகர எரிவாயு விநியோகஸ்தர் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ஆகியவை கூட்டுத்தாபனத்தின் தலைவர் கௌதம் அதானி, துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தாய் அல்லது ஹோல்டிங் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறியது. , அதானி பவர், மின்சாரப் பரிமாற்ற நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் கமாடிட்டிஸ் நிறுவனமான அதானி வில்மர் ஆகியோர் செபி நோட்டீஸ்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விசாரணையின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் பனியாக்களின் தரகனான உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மோடி ஆகியவர்கள் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்தனர் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
படிக்க:
♦ பங்குச்சந்தையில், மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க உதவிய மோடி அமித்ஷா கும்பல்!
♦ கிரிப்டோ கரன்சி தூண்டிலில் சிக்கும் இளம் இந்தியர்கள்!
எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பங்கு சந்தைகளைப் பற்றிய விவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வந்தார். ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக செபி கொடுத்த விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும், பங்கு சந்தை ஊழல்கள், ஹிண்டன்பர்க் அறிக்கையின் தன்மை போன்றவை பாராளுமன்ற கூட்டுக் கமிட்டியின் மூலம் விசாரிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தனது பரப்புரைகளில் வாக்குறுதி அளித்தது. இந்த சூழலில் பங்கு சந்தையில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என்று சத்தியம் செய்த மோடி-அமித்ஷா கும்பல் தனது பரப்புரைகளில் ஜூன் நான்கு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பங்கு சந்தை பல மடங்கு லாபத்தை ஈட்டி தரும் என்பதால் இந்தியாவில் உள்ள வாய்ப்பு வசதி உள்ள அனைவரும் பங்குகளை வாங்குங்கள் என்று பகிரங்கமாகவே அறிக்கை விடுத்தனர்.
நாட்டின் பிரதமரே இவ்வாறு கூறும் போது கையில் சில ஆயிரம், பத்தாயிரம், லட்சங்களை இருப்பாக கொண்ட நடுத்தர வர்க்கம் பங்கு சந்தையில் தனது பணத்தை போடத் துவங்கியது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஜூன் 1 அன்று ஏழாவது கட்ட தேர்தல் முடிந்த பிறகு அன்று மாலையில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற செய்தி கருத்துக் கணிப்புகள் மூலம் வெளியானவுடன் பங்கு சந்தை பல மடங்கு எகிறியது. முதலீட்டாளர்களுக்கு 12.8 லட்சம் கோடி லாபம் கொட்டியுள்ளதாக கோடி மீடியாக்களும், பங்கு சந்தை சூதாடிகளும் துள்ளினர். அதாவது காளையின் பாய்ச்சல் துள்ளி குதித்தது.
ஆனால் இதற்கு நேர் மாறாக தேர்தல் முடிவுகள் வெளியான நான்காம் தேதி அன்று பாசிச பாஜக இறுதி பெரும்பான்மை பெறவில்லை என்று தெரிந்தவுடன் பங்கு சந்தை சுமார் 31 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சியை சந்தித்தது. இது பாகிஸ்தானின் GDP-க்கு நிகரானது.
இவ்வாறு பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதன் மூலம் பல லட்சம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அதானி குழுமங்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதானி குழுமங்களுக்கும் மோடி அமித்ஷா கும்பலுக்கும் உள்ள உறவு உலகமே அறிந்த ’ரகசியமாகும்’.
தினமும் காலையில் எழுந்து வேலையை தேடி 12 முதல் 14 மணி நேரம் சுட்டெரிக்கும் சூரிய வெயில் தனது உடம்பு தோலை உரித்து உள்ளே ஊடுருவி ரத்தத்தை சுண்ட வைக்கும் கொடூரமான வெப்பத்தில், இந்திய உழைப்பாளிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்ற போது, உடல் வியர்க்காத ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு இந்திய பொருளாதாரத்தை விழுங்கி வரும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் மற்றும் பங்கு சந்தை சூதாடிகள், புரோக்கர்கள் மக்களின் சேமிப்பை சூறையாடிக் கொழுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதெல்லாம் இந்திய உழைப்பாளிகளுக்கு அந்நியமாகவே உள்ளது.
நேரடியாக நமது பணம் யாரிடமும் மோசடியாக செல்லவில்லை என்று திருப்தி கொள்ளக்கூடாது. ஏனென்றால் பங்கு சந்தையில் ஏற்படும் உயர்வு மற்றும் வீழ்ச்சி ஆகிய அனைத்தும் பொருட்களின் தலையில் கட்டப்படுகிறது. அதன் மூலமாக நாம் அன்றாடம் நுகர்கின்ற உணவுப் பொருட்கள், குடிதண்ணீர், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள், இரு சக்கர வாகனங்கள், கல்வி, மருத்துவம், பொழுது போக்கு, விளையாட்டு ஆகிய அனைத்தின் மீதே கட்டப்படுகிறது. நமது உழைப்பு மேற்கண்ட பொருட்களின் விலையேற்றத்தின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமாகும்.
பங்கு சந்தை மோசடிகளின் மூலம் முதலாளிகள் சூறையாடினார்கள் போன்ற வார்த்தைகளை விட நாம் உபயோகிக்கும் பொருட்களின் விலை ஏறுகிறது, அது விரல் விட்டு எண்ணுகின்ற சில முதலாளிகளின் கையில், பல லட்சம் கோடி சொத்துக்களாக குவிகிறது என்ற எளிய நடையில் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்போம்.
பங்கு சந்தை மோசடிகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கின்ற, ஊகபேர வணிகத்தையும், நாட்டின் சொத்துக்களை பங்குகளாக மாற்றி விற்பனை செய்கின்ற தேசத் துரோகச் செயலையும் கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்ட ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி மக்களை அணி திரட்டுவோம்.
- மருது பாண்டியன்.