கார்ப்பரேட்டுகளுக்கு இலவச இந்தியா!
மக்கள் தலையில் வரிச் சுமை!
இந்தியா எனும் கார்ப்பரேட் நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கும், ‘பிரதமர்’ என்று அழைக்கப்படும் மோடி உழைக்கும் மக்களின் மீது வெறுப்பையும், தனது தொழில் கூட்டாளிகளான கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது பாசத்தையும் கொட்டுவதில் எந்த கூச்சநாச்சமும் இன்றி பட்டவர்த்தனமாக பேசிக்கொண்டு உள்ளார்.
ஆகஸ்ட் 15 ,இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் என்று அழைக்கப்பட்ட நாளில் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை கொள்ளை அடிக்க முழுமையான சுதந்திரமும், நாட்டின் உழைக்கும் மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் கட்டும் உரிமை, உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறித்து அடிமைகளாகவும் நடத்தி வருகிற பாசிச மோடி கும்பல் துணிச்சலுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் இலவசங்கள் பற்றி தனது திருவாயை திறந்ததன் மூலம் தான் ஒரு கார்ப்பரேட் கூட்டாளி தான் என்பதையும், உங்களால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று நாட்டு மக்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் அல்லது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதைப்பற்றி கேள்விகளை ஊடகங்கள், சாதாரண மக்களிடம், வியாபாரிகள் போன்றவர்களிடம் கேட்பார்கள் .அப்போது பட்ஜெட்டில் உள்ள முழு விவரங்களையும் அறியாத மக்கள் ஏதாவது ஒரு கோணத்தில் பட்ஜெட்டில் தனக்கு பிடித்தமான விஷயங்களை கூறுவார்கள். அதை வைத்துக்கொண்டு பட்ஜெட் இவ்வளவுதான் என்று மறுநாள் தனது ஊடகங்களில் முதல் பக்க செய்தியாக வெளியிடுவார்கள் ‘ஊடக மாமாக்கள்.’ மக்களைப் பொருத்தவரை கண் கட்டு வித்தைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பது தான் உண்மை நிலவரமாகும்.
இதையும் படியுங்கள்: பட்ஜெட் 2022 : பெரும்பாலான மக்களை பாதிக்கும் பட்ஜெட்! கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்!
ஆனால் இந்தியாவில் தன்னைத்தானே பொருளாதார நிபுணர்கள் என்று அழைத்துக் கொண்டு, அரைகுறை உண்மைகளை வைத்துக்கொண்டு நாடு முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், 5 ட்ரில்லியன் பொருளாதாரம் நோக்கி 100 கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கதை அளக்கிறார்கள் பாஜகவின் எடுபுடிகளான கூலிக்கு மாரடிக்கும் ஊடக மாமாக்கள் மற்றும் அரைவேக்காட்டு முதலாளித்துவ ‘பொருளாதார மேதைகள்.’
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய சுமார் பத்து லட்சம் கோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகையாக வாரி இறைத்து உள்ளனர் . இதனால் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இதன் மூலம் அரசு வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க துவங்கி விட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் 11,68,095 கோடி கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகையாக வழங்கியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள்: பாஜக அரசு இந்தியாவை திவாலாக்கிக் கொண்டுள்ளது! -சாவித்திரி கண்ணன்
நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஓரளவுக்கு வருவாய் உத்திரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் கொரோனா எனும் கொடிய நோயினால் லாக் டவுனில் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது கூட கார்ப்பரேட்டுகளுக்கு 2,02,751 கோடி ரூபாய் வரிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்து சேவை செய்தது பாரதிய ஜனதா கட்சி.
இந்த கேடுகெட்ட கும்பல் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் அளிக்கப்படும் வங்கி கடன் உதவிகளை இலவசம் என்று இழிவு படுத்துகிறது.
மற்றொருபுறம் தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் வழங்கும் ஒன்று இரண்டு இலவச பொருள்கள் பற்றி கேடுகெட்ட முறையில் விமர்சித்து வருகிறது.
தனது வாழ்க்கை தேவைகளுக்காக அன்றாடம் 15 மணி நேரம் கடுமையாக உழைக்கின்ற நாட்டின் உழைக்கும் மக்கள் மூன்று வேளை உணவை நிம்மதியாக உண்ண முடியவில்லை, அவதிப்பட்டு கொண்டுள்ளனர்.
கடன் வாங்காத குடும்பங்களே இல்லை.! வாகனக் கடன், வீட்டு வசதிக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன்,சிறு தொழில் கடன், திருமணக் கடன் என்று பல்வேறு கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு பெரும்பான்மை மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளதால் அன்றாட உணவு தேவைகளுக்காக வங்கி சாராத கடன் மற்றும் நுண் கடன் பெற்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வரிப்பணத்தில் ஒரு சிறு தொகையை மக்களுக்கு திருப்பி தருவதை இலவசம் என்று அழைப்பது அபத்தமானது மற்றும் மக்களை இழிவு படுத்தும் பார்ப்பன மேட்டிமைத்தன, குரூரமான சிந்தனை கொண்டது.
இதையும் படியுங்கள்: வங்கிகளை திவாலாக்கும் மோசடி கும்பல்! ரிசர்வ் வங்கியின் கையாலாகாத்தனம்!
தனது குடிமக்களுக்கு இலவசமாக தரவேண்டிய கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகளை காசுக்கு விற்று பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கைக்கூலி அரசாங்கம், மக்களை இலவசங்களுக்கு அழைப்பவர்கள் போல இழிவுபடுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை பலி கொடுக்கும் பொருளாதாரக் கொள்கையை தடுத்து நிறுத்த கார்ப்பரேட்-காவி பாசிச அடியாள் படையான பாஜகவை தூக்கி எறிவதும், மக்களின் தேவைகளில் இருந்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்க உடனடியாக ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும்.
நாட்டை கொள்ளை அடித்து உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் நிற்கும் அதானி துவங்கி நூற்றுக்கணக்கான தரகு முதலாளிகள் மற்றும் தேசங் கடந்த தரகு முதலாளிகளின் மீது கூடுதல் வரி மற்றும் சொத்து வரி போடுவதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும் .இதன் மூலமே பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும். அந்த திசையில் வேகமாக நாட்டை மாற்றுவதற்கு தயாராவோம்.
- பா. மதிவதனி