அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கண்மூடித்தனமான சொத்து குவிப்பும், நேர்மையின்மையும் ஏற்கனவே மக்கள் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு புறமிருக்க, நமது தற்சார்பின்மையும், இறக்குமதியை நம்பியே விவசாயம், பார்மஸி, பெட்ரோலியம்..உள்ளிட்ட பல துறைகள் இயங்குவதும் நமக்கு பல சிக்கலை தந்து கொண்டுள்ளன. வருங்காலத்தில் இவை வீரியமடையும்.

மேலும் நாம் அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்கும் வெளி நாட்டுக் கடன்களும், அதற்கான நிபந்தனைகளும், வட்டியும் நம் கழுத்தை நெரிக்க தொடங்கியுள்ளன! இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், தன்னை வல்லரசாக இந்தியா காட்டிக் கொள்ள இராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கி கொண்டிருப்பதும் நம்மை வேகமாக பொருளாதார நெருக்கடியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றன! மொத்த பட்ஜெட்டில் சுமார் 30% த்தை ராணுவத்திற்கு ஒதுக்கிறது பாஜக அரசு!

மக்களுக்கு கணிசமான வேலை வாய்ப்பையும், பொருளாதார புழக்கத்தையும் உறுதி செய்து கொண்டிருந்த பல பொதுத்துறை நிறுவனங்களை முடக்கி, அவற்றை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கும் பாஜக அரசின் போக்குகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி தற்போதைய கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43%ஆக உள்ளது. 2021 நிதி ஆண்டின் இறுதியில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தொடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடன்கள் வாங்கியதற்காக இந்திய அரசு வழங்கியுள்ள பத்திரங்களில், 28.6% பத்திரங்களுக்கான கால வரையறை ஐந்து ஆண்டுகளை விடவும் குறைவு. இந்த பத்திரங்களில் 39% வங்கிகளிடமும், 26.2% காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன என்கிறது அரசின் அறிக்கை.

காங்கிரஸிடமிருந்து நிர்வாகம் பாஜகவுக்கு கைமாறிய போது இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் 54 லட்சம் கோடியாக இருந்தது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது கடைசி ஆண்டு காலத்தில் (2014) ரூ. 4.57 லட்சம் கோடி கடன் வாங்கியது. இதில் ரூ. 4.27 லட்சம் கோடி தொகை வாங்கிய கடனுக்கான வட்டிக்காக அளிக்கப்பட்டது.  நாம் வாங்கும் கடனுக்கு 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கட்ட நேரிடுகிறது என்ற அவல நிலையை பொருட்படுத்தாமல் பாஜக அரசு ஆண்டுக்காண்டு வெளிநாட்டுக் கடனை அளவுக்கு மீறீ வாங்கி குவிக்கிறது.

இதன் விளைவாக நமது வெளி நாட்டுக் கடன் தற்போது 116 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்தியா புதிதாக கடன் வாங்குவதே, ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டத்தான் என்ற நிலையில் உள்ளது. இதைத்தான் கடன் பொறி என்கின்றனர்.

இந்த உலக வங்கி பன்னாட்டு நிதியம்..போன்றவை எல்லாம் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்துக் கொள்வதற்காக பணக்கார நாடுகள் செய்த சூழ்ச்சியே ஆகும். கடன்வலையில் சிக்க வைப்பதன் மூலம் இந்தியாவின் ஆகச் சிறந்த இயற்கை வளங்களையும், முதல் தர உற்பத்தி பொருட்களையும் தங்களுக்கு இறக்குமதி செய்ய கட்டளை இடுகின்றனர் என்பது மட்டுமல்ல, நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ தங்கள் நாட்டின் உற்பத்தி பொருட்கள் சிலவற்றை நம் தலையில் கட்டிவிடுகிறார்கள்!

கொரோனாவைக் காரணம் காட்டி நம்மை போன்ற வளரும் நாடுகளை மேலும்,மேலும் கடன் வலையில் சிக்க வைக்கும் சூழ்ச்சிகளும் அரங்கேறின! கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 4.6 பில்லியன் டாலர்களை ஆசிய வளர்ச்சி வங்கி கடனாக வழங்கி உள்ளது! ஆசிய வங்கி தடுப்பூசி கொள்முதலுக்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்கால தொற்றுநோய்க்கான தயார் நிலைக்காகவும் ஒதுக்கியது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நிதி நிலை உருவாக்கமும் சில தனிப்பட்ட பெருமுதலாளிகளை வளர்ப்பதற்காகவே உள்ளது! இதைத் தான் 2021-22 மத்திய பட்ஜெட் குறித்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “மத்திய பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்த பட்ஜெட் பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத மக்கள் நாட்டின் 73 சதவீத சொத்துக்களை கொண்டிருக்கின்றனர்” என தெரிவித்திருந்தார்!  நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரொல், டீசல், கேஸ் போன்றவற்றின் விலையை ஏற்றியவண்ணம் உள்ளன! வெகு சீக்கிரம் இவை மத்தியதர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்!

வங்கிக் கடன்களை தகுதி இல்லாத தனி முதலாளிகளுக்கு அள்ளி வழங்கி நாட்டை திவாலாக்கியதில் காங்கிரசைக் காட்டிலும் வெகு குறுகிய காலத்தில் விஞ்சிவிட்டது பாஜக அரசு! ஆட்சிக்கு வந்த எட்டாண்டுகளில் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான வாராக் கடன்களை விட்டுக் கொடுத்து தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு. வாராக்கடன்கள் ஒரு பக்கம் மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன! பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிய விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை மட்டுமல்ல, ஆன்மீகத்தின் பெயரால் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு வெளி நாட்டுக்கு தப்பிவிட்ட நித்தியானந்தா போன்றவர்களைக் கூட கைது செய்ய துப்பில்லாத அரசாகத் தான் பாஜக அரசு உள்ளது.

இவற்றை எல்லாம்விட நாம் முக்கியமாகக் கவலைப்படுவது நம் விவசாயம் என்பது தற்போது வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன உரங்களை மட்டுமே செய்யப்பட்டு வருவது தான்!

இந்தியாவில் ரசாயன உரங்களை தயாரிப்பதற்காக தனியார் துறையில் 56 பெரிய ஆலைகள், 72 நடுத்தர மற்றும் சிறு ஆலைகள்  இயங்கி வருகின்றன! இவற்றுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் விவசாயிகளின் பெயரால் மானியமாகத் தரப்படுவது தான் இருப்பதிலேயே பெரிய ஊழலாகும்! ஏனெனில், உரமானியங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனக்களுக்கு சுமார் ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் மானியம் தரப்படுகின்றது! அரசு சார்பில் வெறும் 9 பொதுத்துறை மற்றும் இரண்டு கூட்டுறவு உரத் தொழிற்சாலைகள் தான் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் வெளி நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 500 லட்சம் டன் ரசாயன உரங்களை இறக்குமதி செய்கிறது இந்தியா! இதற்காக சில லட்சம் கோடிகள் விரயமாகின்றன! நாட்டை திவாலை நோக்கி நகர்த்தும் காரணிகளில் முக்கியமானது இந்த உர இறக்குமதி தான். இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது!

கடந்த இரண்டாண்டுகளாக உர இறக்குமதி தடைப்பட்டு வருகிறது. ரஷ்ய-உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து 30 லட்சம் டன் பொட்டாஷை நாம் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். சமீப காலமாக உரம் வாங்க முடியாமல் விவசாயிகள் படும்பாடு சொல்லிமாளாது. கால்கடுக்க காத்திருந்தாலும், கிடைக்காத நிலையில் விவசாயிகள் தனியார் உர குடவுன்களை அடித்து நொறுக்கி உரத்தை கைப்பற்றிச் செல்லும் சம்பவங்கள் உ.பியில் நடந்து கொண்டுள்ளன!

அப்போதைய காங்கிரஸ் அரசு  ஒரு மிகப் பெரிய தவறை செய்தது. 2011-ம் ஆண்டில் சௌமித்ரா சௌத்ரி குழு பரிந்துரையின் அடிப்படையில் உரங்களின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உர நிறுவனங்கள் – முதலாளிகள் கையில் ஒப்படைத்தது. விவசாயிகளுக்கான மானியத்தையும் நேரடியாக கம்பெனிகளுக்கே கொடுத்து, செயல்படுத்தியும் வருகிறது மத்திய அரசு. மேலும், தேவைக்கேற்ப உரங்களை அரசை கேட்காமல் இறக்குமதி செய்யும் உரிமையையும் தனியாருக்கே தந்து விட்டது. இதன் விளைவாக உர நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தாறுமாறான விலை உயர்வை அரசாலும் தட்டிக் கேட்க முடியவில்லை.

படிக்க:

போர்ச் சூழலில் பொருளாதாரம்.

இலங்கையின் பட்டினி நிலைக்கான காரணம் என்ன?

உரத்தட்டுபாடு பெரும் கேடுகளை தோற்றுவிக்கும் முன்பாக விவசாயிகளை படிப்படியாக இயற்கை உரச் செயல்பாட்டை நோக்கி அரசு நகர்த்த வேண்டும். தீடீரென இலங்கையை போல இயற்கை உரத்திற்கு மாறுங்கள் என சொன்னால் நடக்காது. 60 ஆண்டுகளுக்கு முன்பு நாம் வெளி நாட்டு உதவி இல்லாமல் தான் விவசாயம் செய்தோம். பல்லாயிரம் ஆண்டுகளாக சுய சார்புடன் வாழ்ந்தோம். சுயசார்ப்பும். நேர்மையான கூட்டுச் செயல்பாடும் தான் வர இருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நம்மை தற்காக்கும்!

நன்றி: சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here