இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 1 | மீள்பதிவு

வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது

இராமன், வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தின் கதைத் தலைவன். இராமாயணக் கதையே மிகச் சுருக்கமானது தான். இராமாயணக் கதை எளியது, நயமானது என்பது தவிர வேறு சிறப்பு எதுவும் அதில் இல்லை.

தற்காலத்தில் வாரணாசி என வழங்கும் அயோத்தியை ஆண்டு வந்த மன்னன் தசரதனின் மகன் இராமன். தசரதனுக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்ரா என மனைவியர் மூவர் இருந்தனர். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளைத் தசரதன் தன் ஆசை நாயகிகளாக கொண்டிருந்தார். கைகேயி தசரதனைத் திருமணம் செய்து கொண்ட போது இன்னதென்று குறிப்பிடாத ஒரு நிபந்தனையை விதித்திருந்தார். கைகேயி விரும்பிக் கேட்கும்போது மன்னன் தசரதன் அவள் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

தசரதனுக்கு நெடுங்காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தது. தனக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்பதற்கு ஒரு வாரிசு தேவையென்று தசரதன் பெரிதும் விரும்பினார். தன்னுடைய மனைவியர் மூவர் மூலமாக ஒரு மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை இல்லாமற் போனதால், பிள்ளைப் பேற்றுக்காக புத்திர காமேஷ் யாகம் நடத்த முடிவு செய்தார். அதன்படி சிருங்கன் என்னும் முனிவரை அழைத்து யாகம் வளர்த்து அதன் முடிவில் மூன்று பிண்டங்களைப் பிடித்துத் தன் மனைவியர் மூவருக்கும் கொடுத்து உண்ணச் செய்தார். அப்பிண்டங்களை உண்ட மூவரும் கருத்தரித்துப் பிள்ளைகளைப் பெற்றனர். கௌசல்யா இராமனைப் பெற்றாள். கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்ராவுக்கு இலட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய இரட்டையர் பிறந்தனர்.

இவர்கள் வளர்ந்து பிற்காலத்தில் இராமன் சீதையை மணந்தான். இராமன் ஆட்சிப் பொறுப்பேற்கும் வயதை அடைந்த போது இராமனுக்கு முடிசூட்டி மன்னர் பதவியில் அமர்த்தி விட்டு, தான் அரசு பொறுப்பிலிருந்து விலகி ஓய்வு எடுத்துக் கொள்ளலாமென்று தசரதன் எண்ணினான். இந்த வேளையில், தன் திருமணத்தின் போது தசரதன் தனக்கு வாக்களித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருமாறு கைகேயி பிரச்சினையைக் கிளப்பினாள். மன்னன் அவளுடைய விருப்பம் யாது எனக் கேட்டபோது, இராமனுக்குப் பதிலாக தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமன் 12 ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி கூறினாள். மிகுந்த சஞ்சலத்திற்குப் பின் தசரதன் அவளது விருப்பத்தை நிறைவேற்ற இசைந்தான். பரதன் அயோத்தியின் மன்னனானான். இராமன் தன் மனைவி சீதையோடும் தன் சிற்றன்னையின் மகன் இலட்சுமணனோடும் வனவாசம் போனான்.

இவர்கள் மூவரும் காட்டில் வாழ்ந்திருந்த போது இலங்கையின் மன்னன் இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு போய் அவளைத் தன் மனைவியருள் ஒருத்தியாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் அரண்மனையில் வைத்தான். காணாமற்போன சீதையை இராமனும், இலட்சுமணனும் தேடத் தொடங்கினர். வழியில் வானர இனத் தளபதியான சுக்ரீவனையும், அனுமானையும் சந்திக்கின்றனர். அவர்களோடு தோழமை கொள்கின்றனர். அவர்களுடைய உதவியுடன் சீதை இருக்குமிடத்தை அறிகிறார்கள். இலங்கை மீது படையெடுத்து இராவணனுடன் போரிட்டுத் தோற்கடித்து சீதையை மீட்டு வருகின்றனர். இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் அயோத்திக்குத் திரும்புகின்றனர். அதற்குள் கைகேயி விதித்திருந்த 12 ஆண்டு கெடு முடிந்து விடுகின்றது. அதன்படி பரதன் பதவி விலகுகிறான். இராமன் அயோத்தியின் மன்னனாகின்றான்.

வால்மீகி கூறும் இராமாயணக் கதையின் சுருக்கம் இதுதான்.

இராமன் வழிபட்டு வணங்குவதற்கு உரியவன் என்னும் அளவிற்கு இந்தக் கதையில் எதுவுமில்லை. இராமன் கடமையுணர்வுள்ள ஒரு மைந்தன், அவ்வளவுதான். ஆனால் வால்மீகியோ, இராமனிடம் தனிச்சிறப்பான அருங்குணங்கள் உள்ளதெனக் கருதி அவற்றை சித்தரித்துக் காட்ட விரும்புகிறார். அவர், நாரதரிடம் கேட்கும் கேள்வியிலிருந்து இந்த விருப்பம் புலப்படுவதைக் காணலாம் (பால காண்டம், சருக்கம் 1, சுலோகங்கள் 1-5):

‘’நாரதா, நீயே சொல் – இன்றைய உலகில் உயர் பண்புகள் நிறைந்தவன் யார்?’’ – இது வால்மீகி கேள்வி, அவர் கருதும் உயர் பண்புகள் எவை என்பது பற்றி விளக்குவதாவது:

‘’வல்லாண்மையுடைமை, மதத்தின் நுட்பங்களை அறிந்திருத்தல், நன்றியுடைமை, உண்மையுடைமை, சமய ஆச்சாரங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட விரதங்களை உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து துன்புற நேர்ந்த போதிலும் கைவிடாமை, நல்லொழுக்கம், அனைவரின் நலன்களையும் காப்பதற்கு முனைதல், தன்னடக்கத்தால் எவரையும் கவர்ந்திழுக்க வல்ல ஆற்றல், சினம் காக்கும் திறம், பிறர்க்கு எடுத்துக்காட்டாக விளங்குதல், பிறராக்கம் கண்டு அழுக்காறு கொள்ளாமை, போர்க்களத்தில் கடவுளர்களை கதிகலங்கச் செய்யும் பேராற்றல்’’ ஆகியவை.

இவற்றைக் கேட்டு ஆழ்ந்து யோசித்துப் பதில் சொல்வதற்கு சற்று கால அவகாசம் கேட்ட நாரதர், இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பவன் என்பதற்கு தக்கவன் தசரத குமாரன் இராமன் ஒருவனே என்கிறார்.

இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பதால் தான் இராமன் தெய்வமாகப் போற்றிப் பூசிக்கத் தக்கவனாகின்றான் என்கின்றனர்.

ஆனால் இராமன் இத்தகைய பூசனைக்குத் தக்கவனா? இராமனுடைய பிறப்பே அதிசயமாக உள்ளது. சிருங்க முனிவரும் கௌசல்யாவும் கணவன், மனைவி என்ற உறவு கொண்டிருக்கவில்லையாயினும் இந்த முனிவன் மூலம் தான் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் எனத் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மையை மூடி மறைப்பதற்காகவே சிருங்க முனிவன் பிடித்துக் கொடுத்த பிண்டத்தின் மூலம் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப் பட்டிருக்கலாம். இராமனுடைய பிறப்பில் களங்கம் எதுவுமில்லை என்று வாதிக்கப்பட்ட போதிலும், அவனது தோற்றம் இயற்கைக்கு முரணானது என்பது உறுதியாகின்றது.

இராமனுடைய பிறப்புத் தொடர்பான மறுக்க முடியாத அருவெறுப்பான வேறு பல நிகழ்ச்சிகளும் உள்ளன.

இராமாயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகிறார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக் கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.

இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமின்றி யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமின்றி முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்கு துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்.

இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக்கேடானது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன், சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பௌத்தர்களின் இராமயணத்தின்படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்கு பிறந்த மக்கள். பௌத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை. வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்கு பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை, ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகிறது. எனவே பௌத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது.

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

பாபர் மசூதியை இடித்த வானர கூட்டம்!

இனி இராமன் ஒரு மன்னன் என்ற அளவிலும், ஒரு தனி மனிதன் என்ற முறையிலும் அவனுடைய குணநலன்களைக் காண்போம். இராமன் ஒரு தனி மனிதன் என்ற வகையில் அவனுடைய வாழ்வின் இரு நிகழ்ச்சிகளை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று வாலி தொடர்புடையது; மற்றொன்று இராமன் தன் மனைவி சீதையை நடத்திய விதம் பற்றியது. முதலில் வாலி தொடர்பான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

வாலி, சுக்ரீவன் ஆகிய இருவரும் சகோதரர்கள். கிஷ்கிந்தையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வானர இனத்தைச் சேர்ந்தவர்கள். இராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போன போது, வாலி கிஷ்கிந்தையை ஆண்டு கொண்டிருந்தான். இதற்கு முன் வாலி மாயாவி என்று இராட்சசனோடு போரிட நேர்ந்தது. வாலி-மாயாவி ஆகியோருக்கு இடையே நடந்த போரில் மாயாவி தப்பிப் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடினான். வாலியும், சுக்ரீவனும் மாயாவியை துரத்திச் சென்றனர்.

மாயாவி ஒரு மலைப் பிளவில் ஓடி ஒளிந்து கொண்டான். வாலி, சுக்ரீவனை அந்தப் பிளவின் வாயிலில் நிற்கச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்திற்குப் பின் அந்தப் பிளவிலிருந்து உதிரம் வடிந்தது. இதைக் கண்ட சுக்ரீவன் தன் அண்ணன் வாலி மாயாவியால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தானே முடிவு செய்து கொண்டு, கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து தன்னை அரசனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தனக்கு தலைமை அமைச்சனாக அனுமனை நியமித்துக் கொண்டு அரசாளத் தொடங்கினான்.

ஆனால் வாலியோ உண்மையில் கொல்லப்படவில்லை. வாலியால் மாயாவிதான் கொல்லப்பட்டான். மாயாவியை கொன்றுவிட்டு, மலைப்பிளவிலிருந்து வெளிவந்த வாலி, தான் நிற்கச் சொன்ன இடத்தில் தம்பி சுக்ரீவன் இல்லாததை அறிந்து கிஷ்கிந்தைக்குச் செல்கிறான். அங்கு சுக்ரீவன் தன்னை மன்னனெனப் பிரகடனப் படுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றான். தன் தம்பி சுக்ரீவன் செய்த துரோகத்தை எண்ணிய வாலிக்கு இயல்பாகவே கடுங்கோபம் ஏற்படுகின்றது.

மலைப் பிளவில் வாலிதான் கொல்லப்பட்டானா என்பதைத் தெரிந்து கொள்ள சுக்ரீவன் முயன்றிருக்க வேண்டும். வாலிதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தானாகவே அனுமானித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வாலியே கொல்லப்பட்டிருந்தாலும் வாலியின் முறைப்படியான வாரிசாக உள்ள அவனுடைய மகன் அங்கதனையே அரியணையில் அமர்த்தி இருக்க வேண்டியது சுக்ரீவனின் கடமை. இந்த இரண்டில் எதையும் செய்யாத சுக்ரீவனின் செயல் அப்பட்டமான அபகரிப்பே ஆகும். எனவே வாலி, சுக்ரீவனை விரட்டிவிட்டு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் அண்ணனும் தம்பியும் பரம எதிரிகளாகின்றனர்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில காலத்திற்கு பின், காணாமற் போன சீதையைத் தேடிக் கொண்டு இராமனும், இலக்குவனும் காடு, மலைகளில் சுற்றித் திரிகின்றனர். அதே வேளையில் சுக்ரீவனும் அவனுடைய தலைமை அமைச்சன் அனுமனும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவக்கூடிய நண்பர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத வகையில் இவ்விரு அணியினரும் காட்டில் சந்திக்கின்றனர். இரு அணியினரும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு இடையே ஓர் உடன்பாடு ஏற்படுகின்றது. அதன்படி, சுக்ரீவன் தன் சகோதரனான வாலியைக் கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இராமன் உதவிட வேண்டும், அதே போல காணாமற்போன தன் மனைவி சீதையை இராமன் பெறுவதற்கு வானரர்களான சுக்ரீவனும், அனுமனும் உதவிட வேண்டும் என்று முடிவாகின்றது.

வாலியும், சுக்ரீவனும் தனிப் போரில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். இவர்கள் இருவரும் வானரர்கள் ஆதலால் சுக்ரீவன் யார், வாலி யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு சுக்ரீவன் தன் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் போரிடும்போது, இராமன் ஒளிந்திருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் வரையறுக்கப்படுகின்றது. இதன்படியே வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுகின்றனர். சுக்ரீவன் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டிருந்தான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த இராமன் வாலியை அடையாளம் கண்டு அம்பு எய்கிறான். அதனால் வாலி இறக்கின்றான்.

இதன் மூலம் சுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு அரசனாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. வாலியின் படுகொலை இராமனுடைய நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். இராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற இராமனின் செயல் கோழைத்தனமானதும், பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.

இனி இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தை காண்போம்.

(தொடரும்…)

1 COMMENT

  1. ராம ராஜ்ஜியத்தின் சிறப்பை வருங்கால சந்ததிக்கு
    எடுத்து சொல்ல ஆவலுடன் தொடர்கிறேன்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here