கடந்த புதன்கிழமை ( 17.08.2022) ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்து பாஜகவின் அமைச்சர் டிவீட் ஒன்றை போட்டிருந்தார். படித்த நமக்கு ஆச்சிரியமூட்டும் வகையிலேயே இருந்தது அந்த பதிவு. பாஜகவில் இப்படி ஒரு அறிவிப்பு சாத்தியமில்லையே… என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் எங்களுக்கும், அந்த டிவிட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தது.
அப்படி என்ன தான் நடந்தது எனப் பார்ப்போம்!
டில்லியின் பக்கர்வாலா பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு ரோஹிங்கியா மக்கள் மாற்றப்படுவார்கள் என்று ஒன்றிய வீட்டு வசதி அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த புதன்கிழமை அறிவித்தார். கூடவே பாஜக மீது பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே ஒன்றிய உள்துறை அமைச்சகம் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களை வேறு இடத்தில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனக் கூறியது.
பாஜக உள்ளேயே இத்தனை பிரச்சினையா என்று பார்த்தால் பிரச்சினை வேறு இடத்தில் இருந்து வெடித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெற்கு டெல்லியின் மதன்பூர் கதர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு வசிக்கும் ரோஹிங்கியா மக்களை தற்காலிகமாக மாற்றும் முயற்சியில் ஒன்றிய அரசும், டெல்லி அரசும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1200 ரோஹிங்கியாக்கள் டெல்லி அரசாங்க நிறுவனமான DUSIB ஆல் கட்டப்பட்ட பக்கர்வாலாவில் உள்ள 240 EWS குடியிருப்புகளில் தங்க வைக்க முன்மொழியப்பட்டது. ஆனால் டெல்லி காவல்துறையில் நிலுவையில் உள்ள பாதுகாப்பு தணிக்கை காரணங்களுக்காக நடக்கவில்லை என ஆவணங்கள் காட்டுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் ரோஹிங்கியாக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கூறும் பொழுது “ இங்குள்ள முகாம்களில் வசிக்கும் பாகிஸ்தானிய இந்து அகதிகளுக்கு முறையான மின்சார இணைப்பை கூட கெஜ்ரிவால் அரசு வழங்கவில்லை. ஆனால் ரோஹிங்கியாகளுக்கு முறையான தங்குமிடம் உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் உறுதி செய்துள்ளது ஆம் ஆத்மி “ என குற்றம் சாட்டுகிறார்.
இப்படி பாஜக மீது ஆம் ஆத்மியும், ஆம் ஆத்மி மீது பாஜகவும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்தத்தில் ரோஹிங்கிய மக்களை தங்களது அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் தான் பூரியின் ட்வீட்டுக்கு சங்பரிவார கும்பல்கள் பாஜகவை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். ரோஹிங்கியா மக்களுக்கு எப்படி வீடு வழங்கலாம். காஷ்மீர் இஸ்லாமியர்களால் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கு வீடு இல்லை. ஆனால் இந்தியாவில் ஊடுருவிய ரோஹிங்கியாகளுக்கு வீடா? என்று பொங்கி எழ ஆரம்பித்தார்கள். இதை பார்த்து அச்சமடைந்த உள்துறை அமைச்சகம் மறுப்பு அறிக்கையை வெளியிட்டது.
மேலும் ரோஹிங்கியா மக்கள் அகதிகள் அல்ல என்றும் சட்ட விரோத குடியேறிகள் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
யார் இந்த ரோஹிங்கியா மக்கள்? அவர்கள் ஏன் இந்தியாவிற்க்குள் வந்தார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்…
மியான்மார் (முன்னர் பர்மா) என்று அழைக்கப்படும் நாட்டில் முக்கியமாக அரக்கான் மாநிலத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ரோஹிங்கியாக்கள் . ஏறத்தாழ 8,00,000 ரோஹிங்கியாக்கள் மியான்றுவரை தொடர்கின்றன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கூட்டுப் பலாத்காரம், தீ வைப்பு மற்றும் சிசுக்கொன்மரில் வாழ்ந்தாலும், அவர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்தாலும், தற்போதைய மியான்மார் அரசாங்கம் ரோஹிங்கியா மக்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை. ரோஹிங்கியாக்கள் மியான்மரில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டனர்.
கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கொடூரமானத் தாக்குதலை நடத்தியது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அப்படி தான் இந்தியாவிற்குள்ளும் வந்தார்கள் ரோஹிங்கியா மக்கள். அப்போது அங்கு ஆட்சியில் இருந்தவர் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகி.
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களை ஒடுக்க நினைக்கும் பாசிஸ்டுகள் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவார்கள். உள்நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மியான்மரில் இருந்து வந்த மக்களை தங்களின் அரசியல் நோங்கங்களுக்காகவே பயன்படுத்தும், பாசிஸ்டுகளிடம் ரோஹிங்கியாக்கள் மீது கருணையை எதிர்பார்ப்பது வீண்.
உலகம் முழுவதும் சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஒடுக்கப்படும் இன மக்கள் அதிகார வர்க்கத்திற்கெதிராய் கிளர்ந்தெழாமல் இப்பிரச்சினை ஓயப்போவதில்லை.
- நந்தன்