இவர்கள் கூட்டமைப்பில் இயங்க தகுதியானவர்கள்தானா? – ஜனநாயக இயக்கங்களின் சிந்தனைக்கு!

மக்கள் அதிகாரத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு செயல்படுகின்ற வெற்றிவேல் செழியன் தலைமையிலான போலி கும்பல் இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே கிடா வெட்டும் போராட்டத்தை நடத்தப் போவதாக கூட்டமைப்பினரிடம் அறிவித்தனர்.

துரையில் திருப்பரங்குன்றம் மலையை வைத்து ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் கலவரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கும் அதையே பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் காலூன்றுவதற்கும் வெறித்தனமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை செய்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை இடிக்க வேண்டும் என்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது போலவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் – பாஜக.

சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி அறுத்து வழிபடுவதற்கு தடை விதிக்க வேண்டும்; முருகன் சைவ கடவுள்; அசைவ உணவு உண்பவர்களுக்கு அறிவு கிடையாது என்று திமிராகப் பேசி பார்ப்பன கழிசடை பண்பாட்டையே இந்துக்களின் பண்பாடாக மாற்ற முயற்சிக்கின்றது ஆர்எஸ்எஸ் பாஜக.

கடந்த மாதத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தின் துணையுடன் 144 தடை உத்தரவு அமுலில் இருந்தபோது அன்றே காவல் துறையை நிர்ப்பந்தித்து அனுமதி பெற்றது. உள்ளூர் பக்தர்கள் ஒருவர் கூட ஆதரிக்காத நிலையில் நூற்றுக்கணக்கான வெளியூர் மத வெறி குண்டர்களை பக்தர்கள் என்ற போர்வையில் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோவிலின் புனிதம் பற்றி கூச்சல் போடும் இந்த கும்பல் பா. ஜ.க வின் கட்சிக் கொடியை கோவிலுக்குள் எடுத்துச் சென்று அந்தப் புனிதத்தை கலங்கப் படுத்தியது இந்து முன்னணி – ஆர் எஸ் எஸ் – பாஜக கும்பல்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மதுரையில் கலவரத்தை தூண்டுகின்ற வகையில் வெவ்வேறு வகையில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு கோணங்களில் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறது.

இதனை உளவுத்துறையான க்யூ பிரிவு போலீஸ் முதல் இந்திய ஒன்றியத்தின் போலீசான ரா மற்றும் ஐபி ஆகியவையும் நன்றாகவே அறியும்.

இதற்கிடையில் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட கலவரங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று சமூக அக்கறையுடன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழக பண்பாட்டு மையத்தின் மீ தா பாண்டியன், மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் ஆகியவர்களின் முன் முயற்சியில் மத நல்லிணக்க கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன் மூலம் எதிர்வரும் மார்ச் 9 ஆம் தேதி மத நல்லிணக்க பேரணி மற்றும் மாநாடு நடத்துவதற்கு தமிழகத்தில் உள்ள பெரியார் இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்துவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்த கூட்டமைப்பு.

இந்த கூட்டமைப்பில் பங்கு வகிக்கின்ற மக்கள் அதிகாரத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு செயல்படுகின்ற வெற்றிவேல் செழியன் தலைமையிலான போலி கும்பல் இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே கிடா வெட்டும் போராட்டத்தை நடத்தப் போவதாக கூட்டமைப்பினரிடம் அறிவித்தனர்.

வெற்றிவேல் செழியன் கும்பலின் சுயமோகம்!

ஆனால் அவ்வாறு செய்கின்ற முயற்சியானது மாநாட்டை சீர்குலைத்து விடும். அதன் பிறகு நடத்துங்கள் என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், சிறிதளவு ஜனநாயக உணர்வும் இல்லாமல் செயல்படுகின்ற மேற்கண்ட இடது தீவிர மற்றும் சாகச எண்ணம் கொண்ட இந்த சிறு லும்பன் கும்பல் மாநாட்டிற்கு முன்னதாகவே போட்டியாக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசிடம் அனுமதி கோரியது.

அந்த பொதுக்கூட்டத்திற்கான முழக்கங்களை தான்தோன்றித்தனமாக தீர்மானித்து அனுமதியை கோரியிருந்தது. மத நல்லிணக்க மாநாட்டை தடுக்க காரணம் தேடிக்கொண்டிருந்த காவல் துறை இந்த முழக்கங்களையே காரணம் காட்டி மத நல்லிணக்க மாநாட்டுக்கும் அனுமதி மறுத்தது. உயர் நீதி மன்றத்திலும் திமுக போலீசு இதே வாதத்தை முன்வைத்தது. அதை ஏற்று நீதி மன்றமும் மாநாட்டை தடுத்து நிறுத்தியுள்ளது. 144 தடை இருந்த போதும் கலவர கும்பலின் ‘உரிமையை’ நிலைநாட்டிய மதுரை உயர் நீதி மன்றம் மத நல்லிணக்கம் கோரும் மாநாட்டை தடுத்து விட்டது.

படிக்க:

🔰  திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!

🔰  குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!

இது ஒரு புறமிருக்க, “சைக்கிள் கேப்பில் புகுந்து கிடா வெட்டுகிறார்கள்” என்பது போல காவல் துறைக்கு ஒரு காரணத்தை உருவாக்கிக் கொடுத்து விட்டது வெற்றி வேல் தலைமையிலான போலி கும்பல். தனது இழி செயலை நியாயப்படுத்தி வினவு கீழ்கண்டவாறு எழுதியும் உள்ளது.

“இருந்த போதிலும் கூட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் தொடர்ந்து தங்களுடைய பாசிச நடவடிக்கைகளை மதுரையில் மேற்கொண்டே வருகிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆகியவை தனித்தனியே பொதுக்கூட்டமும் பேரணி மற்றும் மாநாடு நடத்தவும் அனுமதி கேட்டிருந்தன. கேட்கப்பட்ட அனுமதியை போலீசு மறுத்தது.”

கூட்டமைப்பில் இருந்து கொண்டு செயல்படுகின்ற போது தனியாக தனது அமைப்பின் பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்கு உரிமை உள்ளது என்ற போதிலும் எந்த நோக்கத்திற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதே நோக்கத்தில் வேறு ஒரு கூட்டத்தை நடத்துவது எந்த வகை நாணயம் என்பது சீர்குலைவு எண்ணம் கொண்ட சாகசவாதிகளுக்கே வெளிச்சம்.

இந்த கும்பலின் மேற்கண்ட இழிவான செயலினால் மாநாட்டின் பிரச்சாரத்தை கொண்டு செல்ல இயலவில்லை என்பதுடன், ஏற்கனவே போலீஸ் இது போன்ற முயற்சிகளுக்கு தடை விதித்து செயல்பட்டு வருகின்ற சூழலில் இவர்களின் முயற்சி மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் மதுரையில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள் மத்தியில் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடமிருந்து – புரட்சிகர, ஜனநாயக சக்திகளிடம் இருந்து மக்கள் அதிகாரத்தின் பெயரை இழிவு படுத்துவதற்கும் தனிமைப்படுத்துவதற்குமான உள்நோக்கம் கொண்ட முயற்சியாக உள்ளது என்பதையே முதல் சுற்று அனுபவத்திலிருந்து நாங்கள் விமர்சனமாக பதிவு செய்கின்றோம்..

கடந்த காலங்களில் முதலில் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்பார்கள்; பிறகு தேர்தலில் எவ்வாறு பாஜகவை வீழ்த்துவது என்று வெளியீடு போடுவார்கள்; பிறகு தனி நபர்களிடம் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் இது போன்ற அடிப்படையான பிரச்சனைகளில் திட்ட வட்டமான முடிவு எடுக்க முடியாத இந்த இடது தீவிர போக்கு உடைய லும்பன் கும்பலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், மத நல்லிணக்க அமைப்பு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மார்ச் 9 அன்று மதுரை கிருஷ்ணய்யர் மகாலில் நடைபெற உள்ள மத நல்லிணக்க மாநாட்டிற்கு அனைவரும் அணி திரண்டு வருமாறு முன்வைக்கிறது புதிய ஜனநாயகம்.

புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள் உதவியுடன்

♦️ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here