உழைக்கும் மகளிர் தினம்: வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வதா?

0
உழைக்கும் மகளிர் தினம்: வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வதா?
பணியிடத்தில் வேலை செய்துவிட்டு வீட்டு வேலைகளையும் செய்யும் பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் உழைக்கிறார்கள்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது மிகவும் பழமையானது. அது முதலாளித்துவத்திற்கு முன்பே இருந்தது என்றாலும், முதலாளித்துவமும் ஒரு ஒடுக்குமுறை அமைப்பு தான். ஒவ்வொரு நாட்டிலும்  அதன் சமூக கட்டமைப்பிற்கு ஏற்ப மத கோட்பாட்டின் வழியாகவோ, கலாச்சாரத்தின் வழியிலோ பெண்கள் சுரண்டலை எதிர்கொள்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் பல்வேறு தினங்கள் பல்வேறு காரணங்களுக்காக அனுசரிக்கப் படுகிறது. ஆனால் சில தினங்களுக்கு மட்டும் தான் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அது உரிமைக்கான வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியான வரலாறு கொண்டது உழைக்கும் மகளிர் தினம். இந்தியாவில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே கட்டுப்பாடு விதித்த காலத்தில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைக்கான போராட்டங்களை தொடங்கியிருந்தார்கள்.

முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். 30,000க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள். இது குறித்து நமது இணைய தளத்தில் விரிவாக எழுதியுள்ளோம்.

இவையெல்லாம் வரலாறு. ஆனால் தற்போது மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் மறந்துவிட்டு வெறும் வாழ்த்துக்களோடு கடந்து விடும் நிலையில் தற்போதைய இந்தியா இல்லை என்றே கூற வேண்டும்.

இந்தியாவை ஆண்டுக் கொண்டிருக்கும் காவி பாசிச கும்பலின் கொள்கை சனாதனமாக உள்ளது. சனாதனம் பெண்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. அடிமையென்ற கண்ணோட்டத்திலும் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறது.

இந்த கண்ணோட்டத்தை இந்த ஆணாதிக்க சமூகத்திற்கும் கடத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி சிறுமிகள் பாலியல் வல்லுறவு, கொலை, காதலிக்கவில்லை என்றால் ஆசிட் தாக்குதல், ஆபாச படங்களை எடுத்து மிரட்டல் விடுத்து காரியத்தை சாதிப்பது என அதிகார வர்க்கத்தின் துணையுடன் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படிக்க:

🔰  சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! | அலெக்சாந்த்ரா கொலந்தாய் || மீள்பதிவு

🔰  உழைக்கும் மகளிர் தினம்: பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவுக் கட்டுவோம்!

மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்வதை வெற்றியாக கருதும் கேடுகெட்ட ஆணாதிக்க மனோபாவமே இந்த சமூகத்தின் எதார்த்தமாக உள்ளது.

இந்தியாவில் 26 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது குடும்ப வன்முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெருவிக்கின்றன. இந்த புள்ளிவிவரமே குறைவாக தான் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தில் அதிகாரம் செலுத்தும் நபராக இல்லாமல் கணவனோ, தகப்பனோ, அண்ணனோ அல்லது வயது முதிர்ந்த காலத்தில் மகனோ இவர்கள் இடும் கட்டளை ஏற்றுக் கொண்டு பணிந்து நடந்துக் கொள்ளும்  சூழ்நிலையை பார்ப்பனிய பண்பாடு உருவாக்கி வைத்துள்ளது.

நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். உயர்பதவியில் இருப்பவர்களுக்கும் இதே நிலை தான். அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இது குறித்து காவல்துறை செயலரிடமும், உள்துறை செயலரிடமும் புகார் அளிக்க வந்த  பெண் ஐபிஸ் அதிகாரியை வழி மறித்து ராஜேஸ் தாஸூடன் பேசினால் தான் அனுப்புவேன் என்று மிரட்டியுள்ளார் இன்னோர் காவல்துறை அதிகாரி. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண உழைக்கும் பெண்களின் நிலை?

வீடு, பணியிடம், பள்ளி, கல்லூரி, விளையாட்டு என எல்லா இடங்களிலும் சுதந்திரமற்று பெண்கள் பல்வேறு விதமான துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். இப்படியான ஆணாதிக்க சமூகத்தை பயன்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம் தனது சுரண்டலை தீவிரப்படுத்த பெண்களை காட்சிப் பொருளாக பயன்படுத்தி விளம்பரம் மூலம் பொருளை சந்தைப்படுத்தி லாபம் பார்க்கிறது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

ஆணுக்கு நிகரான ஊதியம் வழங்காமல் பெண்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துகிறது. பணியிடத்தில் வேலை செய்துவிட்டு வீட்டு வேலைகளையும் செய்யும் பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் உழைக்கிறார்கள். ஆனால் அதற்கான அங்கீரம் வழங்கப்படுவதில்லை.

மதம் அரசின் கொள்கையாக இருக்கும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சுதந்திரம் இல்லாமல் பெண்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்கள். அதே மதம் ஒரு கட்சியின் கொள்கையாக இந்தியா போன்ற நாடுகளில், காவி பாசிச கும்பல் அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு ஹத்ராஸ், உன்னாவ் சம்பவங்கள் நடந்த உ.பி போன்ற மாநிலங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவில் அதிகாரத்தில் கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் அனைத்து வகையிலும் பெண்கள் மீதான வன்முறைக்கும், சுரண்டலுக்கும் காரணமாய் உள்ளது. அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுகளை தடுக்கவும், உழைக்கும் மகளிருக்கான சம உரிமையை பெற்றுத் தரவும், சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்துக்கள் மட்டும் போதாது. உரிமையை மீட்கும் போராட்டத்தில் ஆண், பெண் வேறுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து போராட உறுதியேற்போம்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here