கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி விற்கக் கூடாது என பாஜக நிர்வாகி கடை உரிமையாளரை மிரட்டிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக கோவையை ஆர்.எஸ்.எஸ் இன் முக்கிய பகுதியாக வளர்த்து வருகிறது பாஜக. அங்கு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்த்து பொதுக்கூட்டம் போராட்டம் நடத்தக் கூட அனுமதிப்பதில்லை காவல்துறையும் அரசும்.
பாஜகவுக்கு செல்வாக்குள்ள பகுதி என்பதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். தோல்வியை தழுவினாலும் இரண்டாவது இடத்தை பிடித்தார். வெற்றி பெறவில்லை என்றாலும் கூட ஆதிக்க சாதி ஓட்டுகளின் மூலம் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை அண்ணாமலையால் பெற முடிந்தது.
கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தை கார் குண்டுவெடிப்பு என செய்தியாக்கி இஸ்லாமியர்களை டார்கெட் செய்து மத அரசியல் செய்தது பாஜகவின் திட்டமிட்ட செயல். எந்நேரமும் கோவையை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் பாஜகவினர்.
அதன் அடிப்படையில் தான் தற்போது நடந்த சம்பவத்தையும் பார்க்க வேண்டும். கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ரவியும் அவரது மனைவி ஆபிதாவும். இவர்கள் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை ஆரம்பித்தார்கள். இதனை அறிந்து கொண்ட பாஜகவின் OBC அணி மாவட்ட மாநகர் செயலாளர் சுப்பிரமணி கடைக்கு சென்று இருவரையும் மிரட்டியுள்ளார். இதனை வீடியோவாக படம் பிடித்துள்ளார் ஆபிதா. இந்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி பாஜகவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் “இட்லி கடை இட்லி தோசை கடை போட வேண்டியதுதானே” என பாஜக சுப்பிரமணி கேட்கிறார். இதற்கு பதில் அளித்த ஆபிதா “எங்களுக்கு தெரிந்த தொழிலை தான் செய்ய முடியும். இவர்கள் பிரச்சனை செய்வதால் எங்கள் கடைக்கு யாரும் வருவதில்லை. பக்கத்தில் மீன் கடை, சிக்கன் கடை உள்ளது. அவர்களை ஒன்றும் இவர்கள் கூறவில்லை” என்று பேசியதும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பும் ஆறு பேருடன் வந்து மிரட்டியும் கடையை உடைத்து போட்டு விடுவோம், பீப் கடை போடக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். பிரச்சனை பெரிதானவுடன் துடியலூர் போலீசார் சுப்பிரமணி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உணவு உரிமையில் தலையிட இவர்கள் யார்?
பாசிச கும்பல் இந்திய மக்களின் தனிப்பட்ட உரிமையை பறிப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக எல்லை மீறி செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நூல் விட்டு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வரும் அதே நேரத்தில், உத்திரபிரதேசம், ஹரியானா, அசாம், உத்தரகாண்ட் என பாஜக ஆளும் மாநிலங்களில் உணவு உரிமைகளில் தலையிடுவதும், மாட்டிறைச்சிக்காக கொலை செய்வதும், தாக்குவதும், பசு குண்டர்களால் நடைபெறுகிறது.
படிக்க: ♦ உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!
தமிழ்நாட்டில் சில சோதனை முயற்சிகள் நடத்தி தோல்வி அடைந்தாலும், திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் தனிநபர் பிரபலம் தேடவும் பாஜகவினர் முயற்சிக்கின்றனர். வீடியோவில் பீப் கடை போடக்கூடாது என பேசிய பாஜக நிர்வாகி, பிரச்சனை பெரிதாகி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில் அசைவ உணவுகளை போட வேண்டாம் என தான் கூறினேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் பாஜகவின் மாட்டு அரசியல் எடுபடவில்லை என்பதே முக்கிய காரணம்.
தள்ளுவண்டி கடை போடக்கூடாது என தகராறு செய்வதற்கு ஒரு கவுன்சிலராக கூட இல்லாத பாஜக காரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இதே கேள்வியை தான் கடை உரிமையாளர் ஆபிதாவும் எழுப்பியுள்ளார். நாங்கள் எல்லோரிடமும் அனுமதி வாங்கிவிட்டு தான் பிழைப்புக்காக கடை வைத்துள்ளோம். விரும்பியவர்கள் பீப் சாப்பிடுகிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அப்பகுதி மக்களும் எதிர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது சாலை ஓரத்தில் இருக்கும் கடையில் பீப் இருக்கக் கூடாது என பாஜகவினர் எப்படி சொல்ல முடியும்? பீப் என்றால் அவ்வளவு கேவலமா? கோவிலுக்கு அருகில் மீன் கடை, சிக்கன் ரைஸ் கடை உள்ளது அதெல்லாம் பிரச்சனையாக தெரியவில்லை” என பாசிஸ்டுகளின் கலவர அரசியலை அம்பலப்படுத்துகிறார்.
படிக்க: ♦ ராமராஜ்யம்: மனிதர்கள் மீது கொலைவெறியும் மாடுகளின் மீது கரிசனையும்!
கோவை மாநகர காவல் துறையும் ஏன் வீடியோ எடுத்து வெளியிட்டீர்கள்? யார் பரப்பினார்கள்? யார் யாருக்கு அனுப்பினீர்கள் விவரம் கொடுங்கள் என கேட்டுள்ளார்கள். பாசிச கும்பலுக்கு துணை போகும் வேலையை கோவை காவல்துறையும் செய்கிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக நிர்வாகி தன் சாதி செல்வாக்கை பயன்படுத்தி அப்பகுதியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளார். பத்திரிகைகளும் வெட்கமே இல்லாமல் மக்கள் போராடினார்கள் என தங்களின் எஜமான் விசுவாசத்தை காட்டுகிறது.
இந்த பிரச்சனையைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் இருக்கிறார்கள். வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் மாட்டு அரசியல் செய்ய முயன்றால் அவமானப்பட்டு தெருவில் நிற்க வேண்டும் என்பதை கோவை சம்பவம் சங்கிகளுக்க. மீண்டும் உணர்த்தியுள்ளது.
அதே நேரத்தில் சாதி கலவரம், மதக் கலவரம் அதற்கு துணையாக மாட்டு அரசியல் என தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற நினைக்கும் பாசிச பிஜேபியை ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில் மக்களுக்கான ஜனநாயகக் கூட்டரசை நிறுவும்போதுதான் நம்முடைய உணவு உரிமையை கூட மீட்டெடுக்க முடியும்.
- நந்தன்
மாட்டு மூத்திரம், மாட்டு சாணம் புனிதமானது; அதனைச் சாப்பிடுவதால் உடலில் தோன்றும் பல்வேறு விதமான நோய்கள் குணமாகும்… என்று பரப்புகின்ற மாட்டுக்குப் பிறந்த ஜென்மங்கள் -மாட்டுச் சாணத்தை ருசித்து சாப்பிடுபவர்கள் – மாட்டு மூத்திரத்தை குளிர் பானத்தைவிட மிகவும் மேலானதாகக் கருதி மொண்டு குடிப்பவர்கள் -மாட்டு மூத்திரத்திலேயே குளித்து சுகம் காண்பவர்கள் எத்தகைய புத்திக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள் என்பதனை சாதாரண அறிவு படைத்தவர்கள் கூட புரிந்து கொள்ள இயலும் தானே! சாதாரண ஏழைஎளிய மக்கள்
தமது வாழ்வாதாரத்திற்காக பீப் கடை போடுவதால் பசு புனிதம் கெட்டுவிட்டதாக கூப்பாடு போடுவதும், கோவை போன்ற பெருநகரங்களில் திட்டமிட்டு மதக் கலவரங்களை ஏற்படுத்த முனைவதும் இந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்து மத வெறி பாசிச காவிக் கூட்டத்திற்குத் தொழிலாகவே போய்விட்டது. ஆனால் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் பெரும் பெரும் முதலாளிகள் குஜராத் ராஜஸ்தான் அசாம் உள்ளிட்ட பல்வேறு பாஜக ஆளும் வட மாநிலங்களில் பார்ப்பனர்களே – அதாவது சங்கிகளே பெரும் முதலாளிகளாய் இருந்து கொண்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் இந்த அயோக்கியக் கூட்டத்தினர். இது தொடர்பாக கட்டுரையாளர் நந்தன் பல்வேறு அம்சங்களையும் தொட்டு அம்பலப்படுத்தி
உள்ளார். ஆர் எஸ் எஸ் கொலைவெறி கூட்டத்தின் அக்கிரமங்கள் ஒருபுறம் இருக்க; இந்தக் காக்கி சட்டை போலீசார் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நிற்காமல், காவிக் கூட்டத்திற்கு அரணாக நிற்பது கேவலம்! மகா கேவலம்!! உழைக்கும் மக்கள் தான் இத்தகைய வாழ்வாதாரத்திற்காக போராடும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக நின்று பாதுகாக்க வேண்டும்; எதிரிகளை துரத்தித் துரத்தி அடிக்க வேண்டும்! இனி கோவை காவிக் கூட்டமான ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச கூட்டத்திற்கானது அல்ல என்பதனை நடைமுறை போராட்டங்களின் மூலமாக அவர்களை துரத்தி அடிக்க வேண்டும்!! அது அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் தார்மீகக் கடமை என்பதனை உணர முற்படல் வேண்டும்!