இந்தியாவின் 75 வது ‘சுதந்திர’ தினத்தன்று, “மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளான” மற்றும் “கண்ணியமான தகனத்தை கூட பெற முடியாத” பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஆகஸ்ட் 14 -ம் தேதியை “பிரிவினை துயரங்கள் நினைவு நாள்” என கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக கட்சியினர் முஸ்லீம் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் இந்துக்களை மட்டும் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் சித்தரித்து பிரச்சாரத்தை கட்டியமைக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை கால கலவரங்கள் ஏற்படுத்திய துயரம் நவீன உலக வரலாற்றில் மறக்க முடியாத பெருந்துயரங்களில் ஒன்றாகும். போர் அல்லது பஞ்சம் இல்லாத காலத்தில் நடந்த மிகப் பெரிய இடப்பெயர்வு ஆகும். இருதரப்பிலும் ஏறக்குறைய 5 முதல் 10 லட்சம் வரை மக்கள் கொல்லப்பட்டனர், 1.25 கோடி மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வாழ்ந்த நிலத்தை விட்டு, அகதிகளாக வெளியேறச் செய்த நிகழ்வு இதுதான். இந்து, இசுலாமிய இரு மதங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்ட துயரம் என்றுதான் வரலாற்று ஆவணங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க அந்த பெருந்துயரை தனது இந்துராஷ்டிர அரசியலுக்கு பயன்படுத்த தற்போது “பிரிவினை துயரங்கள் நினைவு நாள்” என்பதை பாசிச மோடி முன்வைக்கிறார். RSS- BJP இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை தனது இந்துராஷ்டிர திட்டத்துக்கு சாதகமாக பயன்படுத்த முனைவது இது முதல் முறையல்ல.
கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்த மோடியின் சகபாடியான அமித் ஷா பாஜகவின் பார்வையில் அந்த சட்டம் “பிரிவினை கால தவறை சரிசெய்வது” என்று பேசினார். அதாவது மத அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிப்பதே பிரிவினை தவறை சரிசெய்யும் முறை என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்களுக்கு தனிநாடு கேட்டு பிரிந்து சென்றுவிட்டனர் என்பதாகவே பாகிஸ்தான் பிரிவினையை பற்றிய வரலாறு மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் 1940 ஆண்டு தான் பிரிவினையை அதிகாரப் பூர்வமாக முன்வைத்தது. ஆனால் மத அடிப்படையிலான இருநாடு கோட்பாட்டை முதலில் முன்வைத்தது முஸ்லிம் லீக் அல்ல.
முஸ்லிம் லீக் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே 1924 யில் மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரராக போற்றப்படும் லாலா லஜபதி ராய் “என்னுடைய திட்டத்தின்படி முஸ்லிம் மக்கள் நான்கு முஸ்லிம் மாநிலங்களை பெறுவர். 1) பதான் மாகாணம் அல்லது வடமேற்கு பகுதி; 2) மேற்கு பஞ்சாப்; 3) சிந்து 4) கிழக்கு வங்காளம். இந்தியாவில் வேறெந்த பகுதியிலாவது முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்வார்கள் எனில், அதிலும் இது போன்ற ஒரு மாகாணத்தை உருவாக்கலாம். ஆனால் இது ஒன்றுபட்ட இந்தியா இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது தெளிவாக முஸ்லிம் இந்தியா, முஸ்லிம் அல்லாத இந்தியா எனத் தெளிவாக பிரிப்பதாகும்.” என தி டிரிபுயூன் பத்திரிக்கையில் எழுதினார்.
அதற்கும் முன்பாக 1909 ஆம் ஆண்டே ஆர்ய சமாஜம் மற்றும் ஹிந்து மகா சபா ஆகியவற்றின் மிக முக்கியமான தலைவராக இருந்த பாய் பரமானந்தா ”சிந்து பகுதிக்கு அப்பாற்பட்ட பரப்பை ஆப்கானிஸ்தானுடனும் வடமேற்கு எல்லை மாகாணத்துடனும் இணைத்து முசல்மான்களின் பெரிய அரசாட்சியை உருவாக்க வேண்டும். அங்கு வாழும் இந்துக்கள் அங்கிருந்து வெளியே வர வேண்டும்; இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் முசல்மான்கள் அங்கு குடியேற வேண்டும்” என்று கடிதம் தயாரித்து சுற்றுக்கு விட்டார். இதில் பாகிஸ்தான் எனக் கூறப்படவில்லை எனினும் இந்த கடிதத்தின் கருத்தியல் பிரிவினைக்கான அடிகொள்ளியாக விளங்கியுள்ளது.
பாஜக வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான M.S கோல்வால்கர் தமது We or Our Nationhood புத்தகத்தில் “அந்நிய இனங்கள் தங்கள் அடையாளத்தை துறந்து இந்துவாக இணைய வேண்டும் அல்லது எந்த உரிமைகளும் அற்று, குடியுரிமை கூட இல்லாமல் இந்து தேசத்துக்கு அடிபணிந்து வாழலாம்” என்று எழுதியுள்ளார்.
“மத அடிப்படையில் இந்தியாவை பிரிப்பது என்ற கருத்தியல் தோன்றிட ஹிந்து மகா சபா ஒரு மிகப் பெரும் காரணி…….” என்று புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர்களான R.C மஜும்தாரும் AK மஜும்தாரும் கூறுகின்றனர் (Struggle for Freedom,1969 page 611)
இத்தகைய பார்ப்பன – இந்து தேச கருத்துள்ளவர்கள் ஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்சில் மட்டுமல்ல காங்கிரசிலும் இருந்தனர். இவர்கள்தான் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கும், பிரிவினை சமயத்தில் நடந்த கலவரத்துக்கும் மிக முக்கிய காரணமானவர்கள். பிரிவினை வரலாறு பேசப்பட வேண்டுமாயின் அதில் இந்த உண்மைகளும் இடம்பெற வேண்டும்
ஏற்கனவே விடுதலை போராட்ட வீரரான திப்பு சுல்தானின் வரலாற்றை திரித்து அவரை இஸ்லாமிய அடிப்படைவாதியாக கட்டமைக்க முயன்றது; மன்னிப்பு கடித நாயகன் சாவக்கரை விடுதலை வீரராக சித்தரிக்க முயன்றது உள்ளிட்டு பல்வேறு வரலாற்று திரிபுகளை செய்ததை போல் தற்போது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றையும் தனது இந்துராஷ்டிர அரசியலுக்கு ஏற்ப திருத்தியமைக்க ஆர்.எஸ்.எஸ் பாஜக முயல்கிறது.
சமீபத்தில் “வரலாற்றைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் நடந்த தனது 90 வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய இர்பான் ஹபீப் தவறான வரலாற்றின் மேலாதிக்கம் மற்றும் குற்றத்தன்மை குறித்து தெரிவிக்கையில் “நீங்கள் ஆரோக்கியமான மனிதர் என்றால் உங்களுக்கான நினைவாற்றலை பெற்றுள்ளதை போன்று, தேசமும் சரியான நினைவாற்றலைப் பெற்றிருக்க வேண்டும்” என்றார்.
இதற்கெல்லாம் மேலாக ’சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ என்று பகவத் கீதை முன் வைக்கும் நால்வருண பாகுபாடு தான், மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாத கருத்துகள் தான் பார்ப்பன இந்து மதத்தின் கோட்பாடாக உள்ளது. இது நடப்பு சமூகத்தில் மிகவும் இழிவான, கேடுகெட்ட நினைவாக அன்றாடம் நமது நிம்மதியை கெடுக்கிறது. இதற்கு பதிலைக் ஆர்.எஸ்.எஸ் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் பூணூலை பிடித்து இழுத்து நியாயம் கேட்போம்.
அதுமட்டுமல்ல! ஆர்.எஸ்.எஸ்- பாஜக பாசிச கும்பல் பரப்பும் பொய் புரட்டுகளை முறியடிக்க நாம் சரியான வரலாற்றை கற்றுத் தேர்வது அவசியமாகிறது. நம்மை அழிக்க பார்ப்பன இந்து ராஷ்டிரத்தில் நிரந்தர அடிமைகளாக மாற்ற வரும் கார்ப்பரேட்-காவி பாசிசம் எனும் சீக்கை ஒழித்துக்கட்ட வரலாற்று நாயகர்களான திப்பு சுல்தான், பகத் சிங் வழிநின்று போராட வேண்டியுள்ளது.
குறிப்பு: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை வரலாறு குறித்து தெரிந்துகொள்ள டி.ஞானையாவின் “பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் “இந்தியாவின் சிறப்பு வரலாறு” மூன்றாம் பகுதி ஆகியவற்றை படிக்கலாம்.
-
சதாம் ஹூசேன்.
செய்தி ஆதாரம்
https://scroll.in/article/1003098/partition-horrors-day-to-caa-bjp-has-tried-to-weaponise-1947-for-electoral-politics