பத்திரிக்கைச் செய்தி

நாள் 16-6-2022

போராடினால் வீடுகளை இடிப்போம்!
நெருங்குகிறது காவி புல்டோசர்!
இடிப்பது வீடுகளை அல்ல, மிச்ச ஜனநாயகத்தை
கார்ப்பரேட் காவி பாசிசத்தை அடித்து நொருக்குவோம் வாரீர்!

உ.பி அப்ரீன் பாத்திமா வீடு இடிப்பு!

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக கை கோர்ப்போம் !

த்தரப் பிரதேசத்தில் கடந்த 12 ஆம் தேதி இஸ்லாமிய மாணவி அஃப்ரீன் ஃபாத்திமா குடும்பத்தின் வாழ்நாள் உழைப்பான வீட்டை ஒரே இரவில் தரைமட்டமாக்கி இருக்கிறது பாசிச யோகி அரசு.இதற்கு நாடு முழுவதும் கண்டன குரல் எழும்பி வருகிறது.

யோகி அரசின் இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை கண்டித்து முன்னாள் பல உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் கண்டித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரி்க்க வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர்.அதன்படி உ.பியில் வீடுகளை இடிக்க தடை விதித்து உத்திரவிட்டு ஏற்கனவே இடிக்கப்பட்ட வீடுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினைப் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா வெளியிட்டதற்கு எதிராக போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் அலகாபாத்திலும் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியிலும் முன்னணியில் இருந்தார் அஃப்ரீன் தந்தை ஜாவித்.

போராட்டம் நடந்த அன்று மாலை ஜாவித்தை அவரது மனைவி மற்றும் அஃப்ரீன் தங்கை ஆகியோரை கோட்வாலி போலீசு சட்டவிரோதமாக கைது செய்து வழக்கே பதிவு செய்யாமல் மறுநாள் இரவுவரையிலும் காவல் நிலையத்தில் வைத்து இருந்தது.

வீட்டில் இருக்கிற அனைவரையும் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைத்துவிட்டு,நள்ளிரவு 11.30 மணியளவில் அவசர அவசரமாக ஒரு அறிவிப்பை எழுதி அவர்கள் வீட்டில் ஒட்டிவிட்டு,அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அந்த வீட்டையே இடித்து தரைமட்டமாக்கி விட்டது பயங்கரவாத யோகி அரசு.

இனி எவரும் எங்களை எதிர்த்துப் போராடவோ, கேள்வி கேட்கவோ கூடாது என்கிற எச்சரிக்கையைக் கொடுப்பதற்காகத் தான் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜாவித்தின் வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் டெல்லியில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு கொடுத்த பிறகும் புல்டோசர் கொண்டு இஸ்லாமியர் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இப்போது அலகாபாத் நீதிமன்றத்தின் துணையோடு இடித்து தள்ளியுள்ளனர்.

போராட்டதில் முன்னணியாக நின்றவருக்கே இந்த நிலையென்றால், நமக்கு என்ன நடக்கும் என்கிற மரண பயத்தையும், பாசிசத்திற்கு எதிராக வாய்திறக்க முடியாத அளவிற்கு பெரும் அச்ச உளவியலை உருவாக்கவே இந்த செயலை செய்துள்ளார் பாசிஸ்ட் யோகி.

கடந்த நூறு ஆண்டுகளாக தடிக்கம்புகளாகவும், கொடு வாள்களாகவும் இருந்த ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் பாசிச பயங்கரவாதிகளின் ஆயுதம், பாபர் மசூதி இடிப்பில் கடப்பாறை களாகவும், மும்பை மற்றும் குஜராத் எனப் படுகொலைகளின் போது வெடிகுண்டு மற்றும் சிலிண்டர் குண்டு என்று பரிணமித்து, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் போது துப்பாக்கியாக மாறியது. அந்த ஆயுத வெறிபிடித்த பயங்கரவாதிகளின் பரிணாமம் இப்போது புல்டோசர்களாக
‘வளர்ச்சி’ கண்டுள்ளது.

2002-ல், ஒரே நாளில் 3000 இஸ்லாமியர்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களை லாரிகளில் ஏற்றி, பெட்ரோல் நிரப்பிக் கொண்டு போய் எரித்த குஜராத் மாடல் ‘வளர்ச்சி’ இன்று டெல்லி, உ.பி. என பற்றிப் படர்கிறது.

முஸ்லிம்களைக் கொல்வது என்பதை தாண்டி, தற்போது அவர்களின் சொத்துக்களைக் அழித்து வாழ வழியற்ற ஓட்டாண்டி களாக்கி, அவர்களை நடைப்பிணமாக்குவது என புதிய பரிமாண வளர்ச்சி கண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். காவி பாசிசம்!

படிக்க

நாம் அமைதியாக இருக்கிற ஒவ்வொரு நொடியும் கொடூர பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவே ஆதரவளிக்கிறோம் என நினைத்து தொடர்ந்து தாக்குதலை அதிகரிக்கின்றன.

இப்போதும் நாம் பேசாவிட்டால் இன்று இஸ்லாமியர்கள் மீது ஏறும் புல்டோசர்கள் ,நாளை கிருத்துவர்கள் மீதும், அதற்கு மறுநாள் இந்துக்களில் இருக்கும் பஞ்சமர்கள் சூத்திரர்கள் என தொடர்ந்து அனைவர் மீதும் படுகொலைகளுக்கு பயன்படும் டாங்கிகளை போல ஏறி மிதித்து கொலைக்களம் ஆகிவிடும்.

எனவே,இஸ்லாமியர்கள் மீதான புல்டோசர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடி – யோகிகளின் பாசிச கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு நாம் இருக்கிறோம் என நமது கையை உயர்த்தி ஆதரவு கரம் நீட்டுவோம்.

உழைக்கும் மக்களின் எதிரியான காவி பாசிசம் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நமக்கு அறிவித்துவிட்டது.ஆயுதம் எடுக்க வேண்டியது நம் கையில்தான் உள்ளது. நமக்கான ஆயுதங்களை கையிலேந்தும் நம்மை ஒற்றுமை என்னும் ஆயுதத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்வோம்!

இனப்படுகொலைகளுக்கு அறைகூவல் விடுக்கும் புல்டோசர் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவோம்!

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here